பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் : விளக்கமளிக்க தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்!

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்துக்குள் நேரடியாக பதிலளிக்க அதில் உத்தரவிடப் பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்சித். ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். 28/3/2022 – நாளன்று வழக்கம்போல், பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார். அனைத்து மாணவர்களும் இறங்கிச் சென்ற பின் வாகனத்தில் தான் மறந்து வைத்துவிட்டு வந்த பொருளை எடுப்பதற்காக பள்ளி வாகனத்தை நோக்கி திரும்பி வந்துள்ளார்.
அப்போது வாகனத்தை பார்க்கிங் செய்வதற்காக ஓட்டுநர் பூங்காவனம் வாகனத்தை பின்நோக்கி எடுத்துள்ளார். இதனால், வாகனத்தில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து மாணவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர். தொடர்ந்து பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி மற்றும் குழந்தைகளை இறக்கிவிடும் பணியாளர் ஞானசக்தி ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ஏ) பிரிவின் கீழ் (கொலை குற்றமாகாத மரணத்தை விளைவித்தல் ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி இயக்குநர் தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி அதில் 6 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான உரிய விளக்கத்தை அளிக்க தனியார் பள்ளிக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. கேள்விகள் விபரம் :
பள்ளி நிர்வாகத்துக்காக இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பொறுப்புப் பணியாளர் நியமனம் செய்யப்படாதது, பள்ளி அளவில் பேருந்துக் குழு அமைக்கப்படாதது ஏன்?
மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித அக்கறையுமின்றி 64 வயது முதியவரை பேருந்து ஓட்டுநராக நியமனம் செய்தது எப்படி? பள்ளி வளாகத்தில் பேருந்துகள் வந்து செல்லக்கூடிய நிலையில், பள்ளி வளாகத்தில் வேகத்தடை அமைத்திடாதது ஏன்? பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிய பின்னர், அந்த மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்பறைகளுக்குச் சென்றுவிட்டனரா என்பதை கவனிக்க பள்ளி முதல்வர் கவனிக்கத் தவறியது ஏன்?
பள்ளியின் முதல் பாடவேளை தொடங்குவதற்கு முன்பு வரை பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களை ஒழுங்குப்படுத்திட வேண்டிய கடமையிலிருந்து உடற்கல்வி ஆசிரியரைக் கொண்டு கவனிக்கத் தவறியதும், உடற்கல்வி ஆசிரியர் விடுப்பு எனும்போது மாற்று பொறுப்பாசிரியரை நியமிக்காதது ஏன்?
பள்ளி தாளாளர் விபத்து குறித்து அறிந்திருந்தும் பிற்பகல் வரை பள்ளிக்கு வருகை தராததற்கான காரணம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு பள்ளி நிர்வாகம் நேரடியாக பதிலளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

– பிரீத்தீ எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *