
ஆமை வேகத்தில் நடைபெறும் ஆறு வழி விரைவு சாலை திட்டப் பணிகள்… வடசென்னை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுவது எப்போது?


வடசென்னை வழித்தடத்தில் நிலவும் போக்குவரத்துப் பாதிப்புகளுக்கான மிக முக்கிய காரணங்கள் – எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகிய மூன்றையும் இணைக்கும் முக்கியச் சாலையாக இது இருப்பதால், தினசரி தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களில் இருந்தும், வந்து செல்லும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகள் மற்றும் எண்ணெய்-எரிவாயு கலன் சரக்குந்துகளும் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றன. சரக்கு கப்பல்கள் ஒரே நேரத்தில் வரும்போது அல்லது சுங்கச்சாவடி சோதனைகளின் போது, சரக்குந்துகள் நுழைவதற்குக் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எண்ணூர் நெடுஞ்சாலையில் இருந்து மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலை மட்டும் இன்றி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு சரக்குந்துகள் அணிவகுத்து நின்று ஒட்டுமொத்த போக்குவரத்தையும் முடக்குகின்றன. சாலையோரங்களில் பெட்டக சரக்குந்துகள் மற்றும் பிற வாகனங்கள் அங்கீகரிக்கப்படாத இடங்களில் விதிகளை மீறி நிறுத்தப்படுவதால் சாலையின் அகலம் சுருங்குகிறது – எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐ.ஓ.சி போன்ற இடங்களில் உள்ள சரக்கு தொடர்வண்டி கடவு பாதை ( லெவல் கிராசிங்குகள்), எண்ணெய் கலன் தொடர்வண்டிகள் இயக்கத்திற்காகத் தினமும் பலமுறை மூடப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் கேட் மூடப்படும்போது 30 முதல் 45 நிமிடங்கள் வரை போக்குவரத்து முற்றிலும் தடைபடுவதால், வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு ஸ்தம்பித்து நிற்கின்றன.





தொடர்ச்சியான கனரக வாகனப் போக்குவரத்தால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. சாலையின் சில பகுதிகள் குறுகலாகவும், அதிக வளைவுகளைக் கொண்டதாகவும் இருப்பதாலும், பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ள பகுதிகளில் முறையான விரிவாக்கம் இல்லாததாலும் வாகனங்கள் எளிதாகக் கடந்து செல்ல முடிவதில்லை, இதனை தவிர்க்கும் பொருட்டு – .அண்டை மாநிலங்கள், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கான இணைப்பை மேம்படுத்தவும் சுமார் ரூபாய் 17,958 கோடி மதிப்பீட்டில் 133.64 கி.மீ நீளத்திற்கு 6 வழி ‘சென்னை வெளிவட்டச் சாலை’ திட்டம் 5 கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ( CPRR )- சென்னை புறநகர் வட்டாரச் சாலைத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகள், மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் நகருக்குள் நுழைந்தே செல்ல வேண்டியுள்ளது.





இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மொத்தம் 133.64 கி.மீ நீளம் கொண்ட இந்தத் திட்டம் 5 கட்டங்களாகச் செயல்படுத்தப்படுகிறது. எண்ணூர் துறைமுகம் (காட்டுப்பள்ளி) முதல் தச்சூர் வரை (25 கி.மீ), தச்சூர் முதல் திருவள்ளூர் வரை (26 கி.மீ), திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை (24 கி.மீ), ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை (27 கி.மீ), சிங்கபெருமாள் கோவில் முதல் மாமல்லபுரம் (பூஞ்சேரி) வரை (30 கி.மீ) இதில் 1 முதல் 3 வரையிலான கட்டப் பணிகள் (சுமார் 82 கி.மீ) ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் OPEC நிதியுதவியுடன் சுமார் ரூ.12,375.59 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன – தச்சூர் – திருவள்ளூர் புறவழிச்சாலை இடையிலான 26 கி.மீ தூர பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்ட பணிகளுக்காக ஏக்காடு கண்டிகை பகுதியில் நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த ஆறு வழித்தடத்தில் வெவ்வேறு இடங்களில் 8 பெரிய பாலங்கள், 7 சிறிய பாலங்கள், 2 தொடர்வண்டி பாலங்கள், 76 சிறுபாலங்கள், அனைத்து வாகனங்களுக்குமான 1 சுரங்கப்பாதை, இலகுரக வாகனங்களுக்கு 3 சுரங்கப் பாதைகள், சிறிய வாகனங்களுக்கு 11 சுரங்கப்பாதைகள், 4 கனரக வாகனங்கள் நிறுத்தும் வளாகம் மற்றும் 10 பேருந்து நிறுத்தப் பகுதிகள், பக்கிங்காம் கால்வாய் மீது இரும்புப் பாலம் அமைத்து ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆரர்- சாலைகளை இணைக்கும் புதிய சாலையும் அமைக்கப்பட உள்ளது, மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் அமைக்கப்படும் இச்சாலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஈ.சி.ஆர் சாலையை இணைக்கிறது. இதன் மூலம் ஆந்திரா, கர்நாடகா, வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் பாலமாக இது அமையும். தற்போது மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்பட்டு, எண்ணூர் துறைமுகத்திற்குச் சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல வழிவகுக்கும், எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான பிரிவு-1 பகுதியில் மேம்பாலம் கட்டுமானம், இணைப்பு சாலை அமைத்தல், மின் கம்பங்கள் அகற்றுதல், உயர் அழுத்த மின் கோபுரத்தின் மின்சாரக் கம்பிகளை மாற்றி அமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, இதன் காரணமாக சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, எண்ணூர் துறைமுகம், திருவொற்றியூர்-பொன்னேரி மற்றும் மீஞ்சூர்-வண்டலூர் ஆகிய முக்கிய பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கனரக வாகனங்கள் வரிசையாக மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அன்றாடம் பல்வேறு இடங்களுக்கு பணிகளுக்கு சென்று வருபவர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர், மேலும் உடல்நலக்குறைவு அல்லது விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பொது அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் 108 அவசர ஊர்திகள் கூட பலமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்த நிகழ்வும் அரங்கேறி உள்ளது. இதனால் வடசென்னை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுமா? ஆறு வழி விரைவுச் சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்.கோ.முத்து


