
பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கிற சட்டத்துக்கு புறம்பான சம்பவங்களை ஒரு வரியில் எழுதி சுருக்கிவிட முடியாது. கோடிகளில் பணம் புழங்கும் இந்த துறை, தவெக வருகைக்கு பின்னே அதுவும் சில மாதங்களாக கொஞ்சங் கொஞ்சமாக மாறி வருகிறது. முழுமையாக அது மாறவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.
சென்னை 13 ராயபுரத்தை சேர்ந்தவர் ஹரிநாத். டிசம்பர் 23, 2025-ல் தாம்பரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில், மாவட்டப் பதிவாளரிடம், ‘கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் திரு.மதன்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி’ ஒரு மனுவை கொடுக்கிறார். அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட, மாவட்டப் பதிவாளர், (ந.க.எண்.5793/ஆ1/2025 நாள். 24.12.2025- மற்றும் ந.க.எண்.5756/ஆ1/2025 நாள்.24.12.2025), மனுமீதான உரிய விளக்கம் கேட்டு கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் பார்வைக்கு அனுப்பி வைக்கிறார்.
இப்படியொரு மனுவை கொடுப்பதற்கு முன் தினம், புகார்தாரர் ஹரிநாத், கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளரை நேரில் பார்த்து, “என் பாட்டனார் திரு. நீலகண்ட அய்யர் பதிவு செய்த சொத்துகளையே மீண்டும் (2005-2025) மீண்டும் பதிவு (illegal Registration) செய்துள்ளீர்கள், என் பாட்டனாருக்கு சொந்தமான மனை எண்கள், 302, 303, 315 மற்றும் 329 ஆகியவற்றை கோர்ட் உத்தரவுப்படி மீட்டு, என்னிடத்தில் ஒப்படைக்கக் கோரி பல மனுக்களை கொடுத்தேன். இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. மேலும், இது தொடர்பான ஒரிஜினல் டாகுமெண்ட் மற்றும் வாரிசு சான்றிதழை ஒப்படைக்கக் கேட்டதற்கும் உங்களிடம் பதில் இல்லை. நீதிமன்ற (COURT ORDER) உத்தரவை நிறைவேற்றாமல் கிடப்பில் போடுவதற்கான காரணத்தைக் கேட்டாலும், பதிலே தராமல் இழுத்தடிப்பதும், மறுப்பதும் விதிமீறல், சட்டப்படி குற்றம்” என்று கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் மதன் குமாரிடமே அவர்மீது புகார் கொடுத்துள்ளார் ஹரிநாத்.
நிலம் விற்றதற்கான சான்றாவணம், வில்லங்கச்சான்று போன்றவற்றை மனுவோடு இணைத்தே ஒவ்வொரு முறையும் மனு கொடுத்து வருகிறார்
மனு (புகார்) தாரர் ஹரிநாத்.
அதேபோல மனுதாரர் ஹரிநாத், சென்னை சைதாப்பேட்டை சப் ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்த விசாரணை கோரி பதிவுத்துறை ஆய்வாளர் (பொது) (IG OF REGISTRATION), தமிழ்நாடு பதிவுத்துறை, சென்னை 28- க்கும் 07.04.2026 அன்று மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், “Document no.815/1974 என்ற ஒற்றை ஆவண எண்ணை பயன்படுத்தி பல்வேறு சொத்துகளுக்கு வெவ்வேறு விவரங்களைக் கொடுத்து போலியாக பல ஆவணங்கள் தயாரித்திருப்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தி போலி ஆவணங்களை ரத்து செய்தும் சட்ட நடவடிக்கை எடுத்தும் கள்ள ஆவணம் மற்றும் மோசடி நடவடிக்கைகளை முறியடித்தும் நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஆர்.டி.ஐ. மூலம், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) வாயிலாக கேட்ட கேள்வியிலும், ஆவண எண். 815/1974 -ன் உண்மைத்தன்மை குறித்தே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “ஒரே ஆவண எண்ணுக்கு எத்தனை முதலாளி, எத்தனை இடங்களைத்தான் பதிவு செய்து கொடுப்பீர்கள்” என்பதே ஹரிநாத் கேள்வி.
(உயர்நீதிமன்ற வழக்கு எண். W.p.nos. 10291/2022 etc batch cases dated 02.08.2024)
ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட பதில் இதுதான் :
👇
போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்யப்பட்ட மோசடி ஆவணங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்திட அல்லது இரத்து செய்ய பெறப்படும் மனு மீது பதிவுச்சட்டம் பிரிவு 68(2), 77(A) மற்றும் 77(B)-ன் கீழ் விசாரணை மேற்கொண்டு பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை மாவட்ட பதிவாளரால் இரத்து செய்தல் என்பது Unconstitutional என பார்வை (2)-ல் காணும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற Special Bench கீழ்க்காணுமாறு தீர்ப்பாணை வழங்கியுள்ளது.
WP Nos. 10291/2022 & others:-
“174. The above writ petitions are filed to quash the notice or proceedings issued by the District Registrar / Inspector General of Registration, in exercise of his power under Section 77-A of the Registration Act to cancell the registered document. All the documents which are sought to be cancelled or registration of which are sought to be cancelled, are executed before amendment. Since this Court has now held that Section 77-A is prospective, all the writ petitions are allowed and the impugned notices or proceedings issued by the District Registrar / Inspector General of
Registration, in exercise of his power for conducting enquiry under Section 77-A are quashed.”
WP Nos. 4161/2024:-
“178. Section 68(2) of Registration Act was interpreted to confer power on the District Registrar to cancel the document for irregularities in registration. As this Court has already held that Section 77-A of the Act is unconstitutional as it is contrary to the object of the Act, any circular or order or direction enabling the District Registrar or Registering officer to cancel registration or invalidating any transaction is unconstitutional and hence, the impugned circular dated 08.11.2017 is declared as unconstitutional. The writ petition stands allowed.”
“இந்நிலையில், தங்களின் மனுவின் மீது இத்துறை நடவடிக்கை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது என தெரிவிக்கப் படுகிறது. எனவே உரிய உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுமாறும், பதிவுத்தடை குறித்து உரிய சார் பதிவாளரிடம் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து தடைமனு தாக்கல் செய்திடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விசாரணையின் அடிப்படையிலேயே குற்றம் நடந்தது குறித்து தீர்வு செய்ய இயலும். தற்போது விசாரணை செய்ய இயலாத காரணத்தினால் மேற்படி நபர்கள் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதற்கான ஆதாரங்களுடன் ஆவணதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய குற்றவியல் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக் கொள்ளவும் அறிவிக்கப் படுகிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.
“உரிமையியல் நீதிமன்றம் போய் நீதி தேடிக் கொள்ளுங்கள். பதிவுத்தடை குறித்து உரிய சார் பதிவாளரிடம் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து தடைமனு தாக்கல் செய்யுங்கள். விசாரணையின் அடிப்படையிலேயே குற்றம் நடந்தது குறித்து தீர்வு செய்ய இயலும். தற்போது விசாரணை செய்ய இயலாத (?!) காரணத்தினால் மேற்படி நபர்கள் (மோசடியாளர்கள்) மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதற்கான ஆதாரங்களுடன் ஆவணதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க உரிய குற்றவியல் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக் கொள்ளவும் அறிவிக்கப் படுகிறது” – இவ்வளவுதான், ஆர்டிஐ பதில்
கோர்ட் போடுகிற உத்தரவை சார் பதிவாளர் அலுவலகம் மதிப்பது இல்லை. இது குறித்து ஆர்டிஐ மூலம் பதிவுத்துறையில் கேட்டால், “இது போன்ற விவகாரங்களில் மனுதாரர்,
சிட்டி சிவில் கோர்ட் மற்றும் கிரிமினல் கோர்ட்டுகளையோ, அணுகி தடையாணை பெறலாம். அதேபோல் உரிய சார் பதிவாளரிடம் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து தடைமனு தாக்கல் (?!) செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது” என பதில் வருகிறது.
சார் பதிவாளர்தானே சாமி, முதல் ஆளாய் முன் வரிசையில் நின்று மோசடி செய்தவர் என்று கேட்டால் மீண்டும் கோடுகளை முதலில் இருந்து போடத் தொடங்குகிறார்கள்…
கோர்ட் உத்தரவை ஏன் மீறுகிறீர்கள் அதை நடைமுறைப் படுத்துங்கள் என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. சார் பதிவாளர் அலுவலகத்தையே மீண்டும் மீண்டும் நாடி நிவாரணம் தேடிக்கொள்ளச் சொல்வது ஒட்டுமொத்த அமைப்பையும் கேலிக்கூத்து ஆக்கியுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் இதுபோன்ற விவகாரங்களில் கவனமும் வேகமும் காட்டினால் மட்டுமே தலை தப்பிப் பிழைக்கும். சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். மற்றவை அவரவர் விருப்பம்.
சுகு


