சென்னை ஆர்.கே.நகரின் அடுத்த எம்.எல்.ஏ|

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களாக இரு கழகங்களின் சார்பில்தான் நேரடி போட்டி எப்போதும் போலவே இப்போதும் உள்ளது. திமுக வேட்பாளர்களாக தொகுதி எம்.எல்.ஏ. JJ எபிநேசர், நா.மருதுகணேஷ் (திமுக சட்டத்துறை துணைச் செயலாளர், மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர், முன்னாள் பகுதி பொறுப்பாளர்) ஏ.டி.மணி (எ) ஏ.தங்கமணி (அயலக அணி மாவட்ட அமைப்பாளர்- முன்னாள் பகுதிச் செயலாளர்) ஆகியோர், ஒரு பக்கம் களத்தில் நிற்க…

அதேபோல் ச.ம.உ., பதவியை குறி வைத்து ஆர்.கே.நகர் பகுதி திமுக செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன் (மாவட்டச் செயலாளர் கம் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் ஆதரவாளர்) இரா. லட்சுமணன் மற்றும் மந்திரி சேகர்பாபு ஆதரவாளரான சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் நேதாஜி யு.கணேசன் ஆகியோர் உள்பட 15 வட்டச் செயலாளர்களையும் சேர்த்து 35நபர்கள் இதுவரை மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த வரிசையில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாகி இருக்கும் சேகர்பாபுவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள, JJ எபிநேசர் எம்எல்ஏவும், இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு முறை போட்டியிட்ட நா. மருதுகணேசும், இந்தத் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.

அஇஅதிமுகவைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், கட்சி சார்பில் தனித்து தெரிகிறார். கட்சி சார்பில் ராஜேஷை எதிர்த்துப் போட்டியிட யாரும் முன்வராத காரணத்தால் சில மாதங்களாக அல்ல, சில ஆண்டுகளாகவே தொகுதியின் சந்து பொந்து இண்டு இடுக்கு மொத்தமும் நுழைந்து வாக்கு சேகரிக்கும் வேலையை செய்து வருகிறார். நலத்திட்ட உதவிகள் வழங்குவது, திண்ணைப் பிரசாரம் செய்வது; பாக முகவர்கள் சந்திப்பு என வேகம் காட்டி வருகிறார்.

ஆர்கேநகர்த் தொகுதியின் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கும் குடிநீர் – கழிவுநீர் போக்குவரத்தும், ஆரோக்கியமான நபர்களையும் ஊன்றுகோல் வைக்கும் அளவுக்கு கொண்டு போகும் மோசமான சாலைகளும்; மின்வெட்டு தொல்லைகளும் அதிகம். அதேபோல
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் அமைந்திருக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும், இன்னபிற போதை விஷயங்களுக்காக நடக்கும் மோதல்களும் அதிகம். தீர்க்கப்படாத – தீர்வு காணப்படாத விஷயங்களாக இவை காணப்படுகிறது.

யார் வெற்றிபெற்றாலும் இவைகளை சரிசெய்து விட்டால் எதிர்காலத்தில் அவர்கள் சுயேச்சை எம்எல்ஏவாக தேர்வாகவும் வாய்ப்பு உள்ளது.

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *