காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த
சுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. கோயில் அருகே 3.5 ஏக்கர் பரப்பிலான பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் ஒன்றும் உள்ளது. கோயில் குளத்தையொட்டி பலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டி வசித்து வருவதாக பொதுப்பணித்துறை கவனத்துக்கு புகார்கள் சென்றது.
இந்நிலையில் குளத்தைச் சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதாலும் வீடுகள் மற்றும் கடைகளில் வெளியேறும் குப்பைகளை குளத்தில் பொதுமக்கள் கொட்டி வருவதாலும் குளத்தின் நீர் தன்மை முற்றிலும் மாசடைந்துள்ளது எனவும் புகார்கள் எழுந்தது. குப்பைகளாக காட்சி அளிக்கும் குளத்து நீரால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடும் தொற்று நோயும் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால்
குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளத்தை தூர்வாரி சீரமைக்கவும், சமூக ஆர்வலர்கள் பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கிடையில் திருமங்கலம் பகுதி பொதுமக்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டிருந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்த வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் 2018ம் ஆண்டு ஈடுபட்டனர்.
அப்போதுதான் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து 80 கடைகளும் 40 வீடுகளும் கட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்த போதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கடந்த இரண்டு வருடங்களாக அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று (18.04.2022) காலை ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சைலேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர், நான்கு போலீஸ் டி.எஸ்.பி. கள்,
11 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் குவிக்கப் பட்டனர். ஐந்து ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் ரூபாய் 50 கோடி மதிப்பிலான 80 கடைகளும் 40 வீடுகளும் அரசு அதிகாரின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறது. போலீசார், வருவாய்த் துறையினர் பெருமளவில் சுங்குவார்சத்திரம் பகுதியில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
சுங்குவார் சத்திரம் பஜார் – சென்னை சாலையில் 50க்கும் மேற்பட்ட விசிகவினர், விசிக மாவட்டச் செயலாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் அரசுக்கு எதிராக கொடிகளுடன் திரண்டு கோஷங்களை எழுப்பினர். திடீரென சாலை மறியலில் இறங்கினர்.
ஆர்ப்பாட்டக் காரர்களை கைது செய்து பேருந்துகளில் ஏற்றி, தனியார் மண்டபத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தமிழக அரசின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
– பாலகுமாரன்