ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். சீறைவாசிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தாயார் அற்புதம் அம்மாள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து கடந்த மே 28-ஆம் தேதி முதல் 90 நாட்கள் பேரறிவாளன் பரோலில் இருந்து வந்தார். இதற்கிடையில் ஜாமீன் கேட்டு பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 9-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பரோலில் இருந்த பேரறிவாளன் அவரது ஜோலார்பேட்டை வீட்டில் இருந்து இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டு புழல் சிறைக்கு 12 மணி அளவில் வந்தடைந்தார். அங்கு சிறையின் நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஒன்றரை மணி நேரம் கழித்து முறைப்படி ஜாமீனில் வெளியே வந்தார். அவருடன் அவரது தாயார் அற்புதம் அம்மாள், அவருடைய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அற்புதம் அம்மாள், “நீதிக்கான 31 ஆண்டு கால நீண்ட போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டம் இது. விடுதலை என்ற முழுமையான நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த பிணை ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பேரறிவாளான் உள்ளிட்ட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்ற வரை அனைவரின் ஆதரவும் அவசியம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தங்களது போராட்டம் தொடரும். இதுவரை காலமும் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நின்று வரும் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர், அமைப்பினருக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பேசினார். தன்னுள் நினைவுகளாக உறைந்து விட்ட அன்பு மகள் செங்கொடி நெஞ்சில் ஏந்தி இத்தனை ஆண்டுகளாக தமது புதல்வனின் உண்மை நிலை உணர்ந்து ஆதரவு தந்து வரும் ஊடக நண்பர்கள், திரைப்படத்துறை நண்பர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தாய்மார்கள் பொது மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம் தாண்டி உள்ள வெகு மக்களின் ஆதரவும் புரிதலும் 31 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்த நிலையில் எட்டக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது எனவும், அவரவர் சக்திக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாக இத்தனை ஆண்டுகளாக உதவியாக இருக்கும் அனைவருக்கும் தனித்தனியே சந்தித்து நன்றி கூற விருப்பம் இருப்பினும் தற்போது அது சாத்தியமற்றது என அற்புதம் அம்மாள் தெரிவித்தார். “பிணையில் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று செய்தியாளர்களிடம் பேரறிவாளன் தெரிவித்தார்.
– தேனீஸ்வரன் –