

தவெக மந்திரிகள் ஆர். ஆனந்த்- ரா. குமார் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் சால்வை அணிவிப்பை தடுத்ததால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், தவெக நிர்வாகிகளை தாக்க பவுன்சர்கள் பாய்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வரவேற்பு ஸ்பீக்கர்கள் சரிந்து விழுந்தன.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், முன்னரே அரசு சார்பில் கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருந்த போதும், தற்போதைய தொகுதி தவெக ச.ம.உ. மருத்துவர் ரவி, அந்த அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை. “பழைய சமஉ அலுவலகம், வாஸ்துமூலை சரியாய் அமையாத காரணத்தால் எம்எல்ஏ, புதிய அலுவலகத்தை ஹரிஅரன் பஜார் வீதியில் தனியார் கட்டிடத்தில் திறந்துள்ளார்” என உள்ளூர் தவெகவினர் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில்தான் அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த், செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர், ரா.குமார் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆனந்த் வருவதற்கு தாமதமானதால், மாவட்ட பொறுப்பு அமைச்சரான ரா. குமார், முன்னதாக வந்து அலுவலகத்திற்குள் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ரவியுடன் பேசிக் கொண்டிருந்தார், அப்போது அவருக்கு சால்வை அணிவிக்க வந்த தவெக நிர்வாகிகள் சிலரை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பவுன்சர்கள் உள்ளே நுழைய விடாமல் சற்றே, “கனத்த” வார்த்தைகளால் திட்டி தடுத்து நிறுத்தினர், சிறிது நேரத்தில் அமைச்சர் குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், தங்களை தடுத்து நிறுத்திய பவுன்சர்களை தேடிப்பிடித்து தவெக நிர்வாகிகள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால், கோபமடைந்த தவெக நிர்வாகி ஒருவர் தான் கையில் வைத்திருந்த சால்வையை வீசி எறியவே, மீண்டும் ஆத்திரமடைந்த பவுன்சர்கள், தவெக நிர்வாகிகள் இருவரையும் பிடித்து தாக்க பாய்ந்து வந்தனர். இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகளை, மற்ற நிர்வாகிகள் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த களேபரம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களை, சம்பந்தமே இல்லாமல் மற்றொரு தவெக நிர்வாகி மிரட்டி விட்டு சென்றார், நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த், சட்டமன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துவிட்டு புறப்பட்டுச் செல்லும் பொழுது, அவரைப் பார்ப்பதற்காக தவெக நிர்வாகிகள் முந்தி அடித்துச் சென்றதால் மீண்டும் தள்ளு முள்ளு உண்டானது. அங்கு வைக்கப் பட்டிருந்த ஒலி பெருக்கிகள் சரிந்தன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர ஊர்திகள் மீது ஒலிபெருக்கிகள் விழுந்தபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்களிடம் அப்போது பேசிய செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.குமார், இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளின் கையில் இருப்பதாகவும் 1, ஆம் வகுப்பு முதல் ஏ ஐ தொழில்நுட்ப நுண்ணறிவு பயிற்சி அளிப்பதின் மூலம் அவர்களின் திறன் மேம்படும் எனவும் தெரிவித்த அவர் இதற்கான திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
முத்துவேலன்
