வெய்ட்டிங் லிஸ்ட் ஐபிஎஸ்கள்|பின்னணி|

எதிர்பார்த்ததை விட கூடுதல் வேகத்தில் ஜெம் வீரமணி வழக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கோவை போலீஸ் கமிஷனராக இருந்த கண்ணன், கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருக்கிறார்.
சென்னையில் அதாவது ஜெம் வீரமணி தொடர்பான PENDRIVE ஆவணமும், புகாரின் விசாரணைத் தன்மையும் நீர்த்துப்போன காலகட்டத்தில் திரு.கண்ணன், சென்னை மாநகர காவல்பணியில் இருந்துள்ளார்.
திரு. கண்ணனுக்கு மேலதிகாரியாக அப்போது இருந்தவர் திரு.அருண். அவர் தான் சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர்.
ஆக – கண்ணனுக்கு மட்டும், பணி தராமல் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கும் போது அருணை விடுவார்களா? சென்னை ஊனமாஞ்சேரி காவல் பயிற்சிப் பள்ளி உயரதிகாரி பொறுப்பிலிருந்த அருண், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

வாகனத் தணிக்கையின் போது, கேட்ட ஆவணங்களோடு கேட்காத தகவல்களையும் சொல்லி கதறினாலும், “போயி ஐயாவைப் பாத்துட்டுப் போ” என்ற ஒருமைப் பண்பை விடாது கடைபிடிக்கும் காவலர்களும் / “எதுவா இருந்தாலும் ஐயா பாத்துப்பாருன்னு நம்பித்தான் செஞ்சோம். இப்ப ஐயாவையே விசாரிப்பாங்க போலிருக்கே” என்கிற பதை பதைப்பில் காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட பகுதி பதறும் சூழலும் அவரவர் விதைத்த விதைதானே.

“உங்க அய்யா, டைப்பிங் லெட்டர்லயோ இல்லே ரைட்டிங்லயோ ஆர்டரா குடுத்து இப்படி செய்யுங்கன்னு சொன்னாரா?”

‘இல்லீங்… சொன்னாரு, செஞ்சோம்’…

“சும்மா, வெறும் வாய்ல வடைசுட்டிருக்காரு, அப்படித்தானே! உங்க அய்யாவ கேட்டா, ‘நான் சொல்லலே, எனக்குத் தெரியாது’ன்னு ரொம்ப சிம்பிளா சொல்றாரு..

இப்படித்தான் அடுத்தடுத்த சுற்றுகளின் விசாரணையின் போக்கு இருக்கும் போலிருக்கிறது.

பெண் உதவி கமிஷனர், ஒரு ஆண்- ஒரு பெண் என இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இந்த “போக்சோ’ வழக்கு விசாரணைக்காக சம்மன் கொடுத்து வரவழைக்கப் பட்டிருப்பது பொதுத் தளத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்றுதான் உள்ளூர அச்சப்படுகிறேன். போலீஸ் மீது பயமும், மரியாதையும், நம்பகத் தன்மையும் பொதுமக்களுக்கு எப்போதுமே இருக்க வேண்டும், துளியளவும் அதுகுறித்த நம்பிக்கை த(ந)கர்ந்து விடக்கூடாது.

ஏதாவது ஒரு வழக்கு தொடர்பான செய்தியை கையாளும்போது, ஒவ்வொரு முறையும் எச்சரிக்கையை சக பத்திரிகையாளர்- தரப்பிலிருந்தே
பலமுறை எதிர் கொண்டிருக்கிறேன்.

“சேது, கொஞ்சம் அடக்கி வாசி. தெரியும்ல, அவரோட கசினுக்கு சென்ட்ரல் லெவல்ல கான்டாக்ட் இருக்கு. ஒரு இன்ட் குடுத்தா போதும். வெளிய எங்கயும் போவ முடியாது.” என்பது ஒரு வகை.
இன்னொரு வகை,” அவருக்கு இன்னும் ஒன்பது வருஷம் சர்வீசு இருக்கு தலைவா. இப்பவே ஐஜி ரேங்க்கை கிராஸ் பண்ணி போயிட்டாரு. டிஜிபி போஸ்டிங்லியே மனுசன் அஞ்சு வருஷம் இருப்பாரு. எதையும் மறக்கக்கூடிய ஆளில்ல. நல்லா மைன்ட்ல வெச்சுக்கிட்டே இருப்பாரு. கவர்ன்மெண்ட் மாறுனதும் உங்க கதை கந்தலாகிடும் பாத்துக்குங்க” என்று நம்முடைய நம்பிக்கை ஏரியாவில் மட்டை இல்லாமயே கிரிக்கெட் ஆடி விடுவது…

இந்திய குடிமைப்பணிகளின் எண்ணிக்கை (வரிசை) நீளமானது. குடிமைப் பணிகளில் எந்தப்பணியில் இருந்தாலும், இப்படி கையிருப்பு சர்வீஸ் காலத்தை ஆள் வைத்து சொல்லி அச்சுறுத்தும் வேலை செய்வது இல்லை. இங்கே (POLICE SERVICE) மட்டும்தான் இப்படியான அச்சுறுத்தலை தனியாக ஆள் வைத்து செய்யும் அளவுக்கு போவது நடக்கிறது. மோசமான மனச்சிதைவாகவே இதை என்னால் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் சிறப்பு போலீஸ் டிஜிபி (Special DGP) யாக இருந்தவர் ராஜேஷ்தாஸ். அவர் மீது பெண் எஸ்.பி (IPS) அளித்த பாலியல் தொல்லை புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, விழுப்புரம் நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பணியிடை நீக்கமும் (Suspension) செய்யப் பட்டவர். அதேபோன்ற பாலியல் குற்றச்சாட்டு ஒன்றி சிக்கியவர் ஓய்வு போலீஸ் ஐஜியான முருகன். இதுவும் பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்த புகார்தான்.

அதேபோல் ஐ.பி.எஸ். அதிகாரியான பிரமோத்குமார், பாசி நிதி நிறுவன மோசடி (650 கோடி ரூபாய்தான்), (ம) மிரட்டி பணம் பறித்த வழக்கில் (Paazee Forex Scam) சி.பி.ஐ. யால் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். 2024 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீதான குற்றச் சாட்டுகளை ரத்து செய்து விடுவித்ததால், தமிழ்நாடு அரசு அவருக்கு டி.ஜி.பி., பதவி உயர்வு வழங்கியதெல்லாம் வரலாறு…

ந.பா.சேதுராமன்
(24.09.2026)

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *