‘பிரஸ்மீட்’ களின் கதை…

அவருக்கே அப்படியான சந்திப்பை நடத்திப்பார்க்கும் எண்ணமிருந்தாலும் அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாதே என்கிற தவிப்பை பல மட்டங்களிலும் வெளிப்படையாக பார்க்கமுடிகிறது.

“பிரஸ் மீட் கொடுத்துதான் ஆகவேண்டும்
என்று ‘பென்ச் மார்க்’ ஏதுமில்லையே” என்ற ஒன் லைனை தொடர்ந்து இழுத்துப் பிடிக்கிற தவிப்பாளர்கள் அதிகமாகி விட்டனர்.

தவிப்பாளர்கள் பெரும்பாலும் ஜர்னலிஸ்ட் ‘ஆக’ வே இருப்பதால் அவர்கள் பாணியிலேயே உண்மையான ஒரு குட்டிக்கதை.

தலைநகர் சென்னையில் வாரந்தோறும் வியாழன் அன்று ஊடகங்களை வரவழைத்து PRESS MEET கொடுத்து களவு போய் மீட்கப்பட்ட பொதுமக்களின் பொருட்களை DISPLAY வைப்பது போலீஸ் கமிஷனரின் பணிகளில் ஒன்று. சில நேரங்களில் பொருள்களுக்கு பதில், குற்றச்செயல் புரிந்து சிக்கிய மனிதர்கள் காட்சிபடுத்தப் படுவார்கள். அப்படிப்பட்ட REGULAR விஷயத்தை போலீசார் மறந்து போய் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

எப்போதாவது முக்கியமான வழக்காக போலீசார் கருதும், அல்லது ஆட்சியாளர்கள் கருதும் வழக்கு குறித்து வெளியில் சொல்ல மட்டுமே, மீடியாக்கள் தேவைப்பட்டது. அந்தவொரு நாளில் மீடியாக்களை கூட்டி வைத்து போலீஸ் அதிகாரிகள் சொல்வதை – அதாவது செய்திக்குறிப்பில் உள்ளதை உள்ளபடி வாசித்தளிப்பதை (PRESS NOTE)
PRESS MEET என்று தேற்றிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது.

அதே போல் அன்றாடம் நகரில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான செய்திக் குறிப்புகளை நிருபர்களுக்கு காலையில் முதல் வேலையாக வழங்கும் வழக்கமும் இப்போது இல்லை. முற்றாய் அற்றுப் போய்விட்டது. பல மாவட்டங்களிலும் இதுவே தொற்றிக் கொண்டு விட்டது. தொற்று என்பதே நல்லவிஷயம் கிடையாதுதானே…

“காட்சி ஊடகங்கள் வந்த பிறகுதானே இவ்வளவு மீடியாக்களும் வந்து மைக்கை நீட்டுகிறீர்கள்? அச்சு ஊடகம் (DAILY PAPERS -PRINT MEDIA) நான்கைந்து இருந்தபோது, முதலமைச்சரும், மந்திரிகளும் பிரஸ்மீட் கொடுத்துக் கொண்டா இருந்தார்கள்? அப்போதெல்லாம் இப்படியா இருந்தது” என்று தட்டிக்கழிப்பது போல அமைச்சர் பேசும் அளவுக்கு PRESS MEET என்பது, கேலிப்பொருளாக மாறியிருக்கிறது.

PRINT MEDIA மட்டுமே இருந்த காலத்தில்தான் காமராசர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் போன்ற தமிழ்நாட்டு லீடர்களின் பேட்டிகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியாகும் அளவுக்கு பேட்டிகளை கொடுத்திருந்தனர் என்பதுதான் எஸ்டீடி.

காமராஜர் பெரியார் ராஜாஜி அண்ணா கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற மறைந்த தமிழ்நாட்டுத் தலைவர்களாகட்டும், ஈபிஎஸ் ஓபிஎஸ் ஸ்டாலின் போன்ற வாழும் தமிழ்நாட்டுத் தலைவர்களாகட்டும், எல்லோருமே பிரஸ்மீட் கொடுத்தவர்கள் தான்.

எம்ஜிஆர் கூடுமானவரை பிரஸ்சை மீட் பண்ணாமல் தவிர்ப்பார். தேர்தல்காலம் நெருங்கிவிட்டால், அது தலைகீழாய் மாறிவிடும். யாரும் அதிகமாய் ‘பிரஸ்’ பண்ணாமலே, ‘பிரஸ்’ மீட் பண்ணி விடுவார்.

கலைஞர் தூங்கும் நேரம் தவிர்த்து எப்போதும் சந்தித்து பேட்டி காணலாம்.

ஜெயலலிதா சொல்லும்போது பிரஸ்மீட். அதுவும் அரைமணி நேரத்துக்கு முன்னர் தான் சந்திப்பே உறுதி செய்யப்படும். அவரும் எம்ஜிஆர் போலத்தான். தேர்தல் நெருக்கத்தில் பிரஸ்மீட்டை அடிக்கடி நாமே உருவாக்கி விடலாம்.

ஈபிஎஸ்சைப் பொறுத்தவரை ஊடகத் திரளைப் பார்த்து விட்டாலே பேசி விடுவார்.

ஓபிஎஸ்சைப் பொறுத்தவரை சிநேகமான முகங்கள் கண்ணில் பட்டால் மட்டும் நின்று பேசுவார்.

ஸ்டாலினைப் பொறுத்தவரை ஓய்வில் இருக்கும் நேரம்தவிர எல்லாநேரமும் பேசுவார். காரை மறித்து மைக்கை நீட்டினாலும் ஒரு வரியிலாவது பதில் சொல்லிப் போவார்.

“ஏன் பிரஸ் மீட்டை வாராவாரம் வியாழனன்று இப்போதெல்லாம் கொடுப்பது இல்லை?” என்று காவல் தலைமையைப் பார்த்து கேள்வி கேட்கக் கூடிய ஜர்னலிஸ்ட்டுகள் இப்போது வெகு குறைவு. அப்படியே கேட்டாலும் அந்த ஜர்னலிஸ்ட் வீடு போய் சேருவதற்குள், கேள்வியே கேட்காத ஒருவரை கமிஷனர் ஆபீஸ் ரிப்போர்ட்டர் ஆக்கிவிடும் நிர்வாகம்.

அதே கேள்வியை ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேட்டால் என்னாகும்? ஐந்தாம் வகுப்பிலேயே படித்திருப்போம். உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்பவை என்று. படித்ததை நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கத் தெரிந்தவன்தான் இங்கே ஜர்னலிசத்தை கொன்றுவிட்டு குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஜர்னலிசம் என்பதற்கான ஒழுங்கு வரையறை என்ற எல்லைக்கோடு ஒழுங்கற்றுப் போன காரணத்தால்
இதழியல் தேவையும் சேவையும்
எட்டநின்று வேடிக்கை பார்க்கிறது.

என்னுடைய கேள்விகளால் உலகை தட்டியெழுப்புவேன் என்று நெஞ்சு நிமிர்த்திய பலருக்கு தற்போது முகவரியே இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோவொரு வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பலர், இன்று மூத்த பத்திரிகையாளராக, வலம் வருவதன் பின்னணியில், எதற்குமே கேள்வி எழுப்பாத அல்லது யாரையும் நோகடிக்காமல் கேள்வி கேட்கிற அந்த ‘வாய்’ இருக்கிறது.

இன்னும் சிலருக்கு ஆள் பலமும், கார் பலமும், ஊர் பலமும், வங்கி பலமும், அமைத்துக் கொடுத்த தொழில் (?) என்பதால், ஆயுதமாய் பயன்பட்ட பேனா, தலை சொறியும் கருவியாகி விட்டது. பேனாவை மட்டுமே நம்பிய விரல்களில் பேனா இல்லை.

பேட்டி காண்பது கட்டுரை எழுதுவது போன்றன ஊடக உலகில் OUT OF STATION/ OUT OF FASHION போல ஆகிவிட்டது என்று தோணுகிறது.
நேரடியாக பத்திரிகையாளர்களுக்கான அமைப்புகளின், சங்கத் தலைவனாகி விடுவது என்றே பலர் முடிவில் உள்ளனர். அப்படி சங்கத்தலைவனாக துடிப்பவர்களின் தகுதிகளைப் பார்க்கும் போது, அதாவது 351(2), 109 (1), 189(2), 296 (b), 115 (2), 506 (2) உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளை அலங்கரிக்கும் அவர்களின் வீரத்தழும்புகளைப் பார்க்கும்போது;
அரசியல்வாதிகள் ஓராயிரம் மடங்கு உயர்வானவர்களே என எண்ணத் தோணுகிறது..

பிறகு ஏனிந்த நீட்டி முழக்கம்?
👇
நாட்டில் இருக்கும் மிச்ச சொச்ச ஜர்னலிஸ்ட்டுகளாவது, தங்களின் உண்மையான பணியை, மறந்து தொலைக்காதிருக்க, #உரியவர்கள் பேட்டிகளைக் கொடுத்து இதழியலை காப்பாற்ற வேண்டித்தான்…

ந.பா.சேதுராமன்
(12.06.2026)

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *