அதிமுகவின் ஆணிவேர் இவர்களே…

தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, அதிமுக. தொண்டர்களால் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படும் கட்சியின் நிறுவனர் திரு.எம்.ஜி.ஆர்., இப்போது இல்லை. எம்ஜிஆருக்குப் பின் கட்சியின் தலைமைப்பொறுப்புக்கு வந்தவர், தொண்டர்களால் புரட்சித்தலைவி என்றும் அம்மா என்றும் அழைக்கப்பட்ட ஜெயலலிதா. அவரும் இப்போது இல்லை.

கட்சியின் பெயரில் அண்ணா இருந்தாலும், “எம்ஜிஆர் – ஜெயலலிதா” என்ற இருவரை மட்டுமே தொண்டர்கள் அதிகம் கொண்டாடித் தீர்த்தனர். எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்த எந்த நெகடிவ்வையும் அவர்கள் ஏற்கவில்லை.

இருவருக்கும் பின்னால் யார் என்ற கேள்வி எழுந்தபோது பலர் அணிவகுத்து நின்றனர். அதுவும் ஜெயலலிதா மறைவுக்குப் (2016) பின்னே நிறையவர் தோன்றினர். இரட்டை இலை யாருக்கு, கட்சியை யார் வழி நடத்துவது என்று பல கேள்விகள். ஒரு வழியாக எல்லாம் முடிவுக்கு வந்து அதிமுக பொதுச்செயலாளராக திரு ஈ.பி.எஸ்., தற்போது இருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தல் (2026) முடிவுகள், மீண்டும் அதிமுகவுக்கு சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் மாவட்டச் செயலாளர்களாகவும், அரசமைப்பில் எம்எல்ஏ, மந்திரிகளாகவும் இருந்த -இருக்கிற பலர், தற்போது ஆட்சியில் இருக்கும் தவெகவுக்கு தாவி இருக்கிறார்கள். தாவியவர்களோடு பத்து பேருக்கு மேல் அதிகபட்சமாக யாரும் போகவில்லை.

அப்படியேதான்
இருக்கிறார்கள்
தொண்டர்கள்.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எப்போதுமே தொண்டர்கள் பலம் அதிகம். தங்களின் இணைப்புக்காக பனையூர் பின்பக்கக் கதவுகளை உடைத்துக் கொண்டு ஓடிப் பாய்ந்ததில் மேனாள் மந்திரிகள், எம்எல்ஏக்கள், சேர்மன்கள், வாரியத் தலைவர்கள், மாவட்டம், தொகுதி, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள்தான் 99% இருந்தனர். தொண்டர்கள் இல்லை.

திரு.மரகதம் குமரவேலுவின் கட்சித்தாவல் குறித்து சமூகவலைதளத்தில் நான் எழுதிய எட்டுவரி பதிவை, 559 K பேர் பார்த்தும் படித்தும் பின்னூட்டில் கொதித்தும் நகர்கிறார்கள் என்பதே அதிமுக தொண்டர்களின் பலம் பொருந்திய உயிர்ப்பைக் காட்டுகிறது.

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *