‘டிட்வா’ புயல் என்ன செய்யும்? ‘வெதர்மென்’ விளக்கம்|

தனியார் வானிலை ஆராய்ச்சியாளர், ‘வெதர்மென்’ பிரதீப்ஜான், ‘டிட்வா’ புயல் குறித்தும், மழைவெள்ள பாதிப்பு குறித்தும்; தமது X தளப்பகுதியில்; கேள்வி பதிலாக வெளியிட்டிருக்கும் பதிவின் பதிலை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்:

டிட்வா புயல் பலவீனமாக உள்ளது. இந்த புயல் தற்போது இலங்கையில் கரை அடைந்திருக்கிறது. இருப்பினும் இலங்கை கடந்து மீண்டும் கடற்பகுதிக்குள் வலுப்பெற தீவிரம் காட்டும். புயலுக்கு தேவையான ஈரப்பத காற்று போதுமான அளவு கிடைக்காது என்பதோடு, உலர்ந்த காற்று மட்டுமே இருக்கும் என்பதால், புயல் வலுவிழந்து சென்னையை நெருங்கும் போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மட்டுமே இருக்கும். ஆகவே இது கஜா, வர்தா, தானே புயல்களை போன்று தீவிரமாக இருக்காது. கனமழை பாதிப்பு இருக்கும்.

சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் நவம்பர் 30-ஆம் தேதி மழை தொடங்கும். நவம்பர் 29-ஆம் தேதி இரவு மழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.

சென்னையில் பலத்த காற்று வீசாது. இதுவரை பலத்த காற்றுக்கான அறிகுறி தெரியவில்லை. 50 முதல் 60 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசக்கூடும். வரதா புயல் வீசிய நேரத்தில் 120 கிலோமீட்டர் வேகத்திலும், கஜா புயல் வீசிய நேரத்தில் 140 கிலோ மீட்டர் வேகத்திலும், தானே புயல் வீசிய நேரத்தில் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது. (அவற்றோடு ஒப்பிடுகையில் இது குறைவே) இலங்கையின் ஜாப்னா கடல் பகுதிக்கு அருகே வந்தவுடன், ‘டிட்வா’ புயல் தன்னை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளும். இது நவம்பர் 29-ஆம் தேதி நடக்கும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவடங்களில் அப்போது அதி கனமழை பெய்யும். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும், புயல் மேலும் முன்னேறும்போது கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

வங்கக்கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடல்களில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவுகள், இலங்கை, ஓமன், தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 13 நாடுகள் பெயர்களை வழங்குகின்றன. முன்னரே இந்த 13 நாடுகளும் பெயர்கள் கொடுத்திருக்கும். இந்தமுறையில் இதுவரை பெறப்பட்ட 169 பெயர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த புயலுக்கு மாலத்தீவு அளித்த ‘டிட்வா’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

மிச்சாங் புயலைப்போல மழை கொடுக்க தற்போது வாய்ப்பில்லை, மிச்சாங் புயல் சென்னையில் 400 மில்லி மீட்டர் அளவுக்கு 24 மணி நேரத்தில் மழை கொடுத்தது. அந்தளவு மழைப்பொழிவு இப்போது இராது.

சென்னை, வேலூர், இராணிப்பேட்டை போன்ற வட மாவட்டங்களுக்கு, நாளை மறுநாள் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும். 2025 டிசம்பர் 1ம் தேதி மழை பெய்யலாம். சில இடங்களில் 150 மில்லி மீட்டர் அளவில் கூட மழைக்கு வாய்ப்பு இருக்கிறது ——— இவ்வாறு மக்கள் மனக்கேள்விகளை தாமே எழுப்பி பதிலையும் அளித்து சேவையாற்றி நிற்கிறார், (படம்) வெதர்மென். வாழ்த்துகள்.

ந.பா.சேதுராமன்

Posted Under new

One thought on “‘டிட்வா’ புயல் என்ன செய்யும்? ‘வெதர்மென்’ விளக்கம்|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *