தவெக – ஓபிஎஸ்|முன்னும் பின்னும்|

தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் – அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிறுவனர், மற்றும் ச.ம.உ.வான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), திமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட சில மணித்துளிகளில்
அடுத்தொரு சூறாவளியும் வீசத்தொடங்கி இருக்கிறது.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் குடும்பத்தில்தான் அந்த சூறாவளி வீச ஆரம்பித்துள்ளது.

“எங்களிடையை நல்லுறவு என்பது 2021-ஆம் ஆண்டு வாக்கிலேயே இல்லாமல் போய்விட்டது” என்று தொடங்கி குடும்பத்தில் சந்தித்த இன்னல்களை வரிசைப்படுத்தி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார், விஜய்யின் மனைவி சங்கீதா.

ஒருபுறம்
36 ஆண்டுகால அதிமுக உறவை, ஓபிஎஸ் துண்டித்திருக்கிறார், மறுபுறம் 26 மாத அரசியல் கட்சியும், 26 ஆண்டுகால குடும்ப வாழ்க்கையும் ஒரே நேரத்தில் நெருப்பாற்றில் நீந்துகிற காட்சியை பார்க்கிற மோசமான சூழலை விஜய் எதிர்கொண்டிருக்கிறார்.

விஜய் – சங்கீதா குடும்ப உறவு கேள்விப் பொருளாக மாறியதன் பின்னணியில் யாருமே இருக்க வாய்ப்பில்லை.
“பானையில் சிறுபொத்தல் இருந்தது, யாரும் கவனிக்கவில்லை அல்லது அதை கவனித்த பின்னும் சரி செய்து பொத்தலை அடைக்க முன்வரவில்லை” என்றுதான் இதை பார்க்க வேண்டியுள்ளது.

திமுகவுக்கு எதிராக, முழுமையாக 26 மாத காலமும் களத்தில், விஜய் கத்தி வீசியதால் அவருக்கு நடக்கும் எல்லாமே திமுகவால் உண்டாக்கப்பட்ட சூழ்ச்சி என கருதுவது அறியாமையே. அதே வேளையில் சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அரசியலில் எதிர்க்குழி வெட்டுவது சாதாரண ஒன்றுதான். திமுகவின் எதிர்காலமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்த சக்தி வந்தாலும் எதிர்க்குழி சிறப்பாகவே வெட்டப்படும் – அது உறுதி. விஜய்க்கு எதிராக நடந்த பிற அரசியல் நிகழ்வுகள் அத்தனையிலும் திமுகவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதுதான் தவெகவுக்கான அரசியல்.
அதேவேளையில் 26 ஆண்டு கால குடும்ப உறவை எந்த அரசியலும் உள்ளே புகுந்து சீரழித்துப்போக வாய்ப்பே இல்லை. விஜய் – சங்கீதா, ஸ்டாலின் – உதய் குறித்த விமர்சனங்களை இந்தளவில் உள்வாங்கிக் கொண்டால் போதுமானது.

ஓபிஎஸ் விஷயத்துக்கு வருவோம்.
அதிமுகவினர் மொத்தமாக கூடி நின்று ஓபிஎஸ் மீது வைக்கும் விமர்சனங்களை வலுவுள்ள ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

ஜெ.ஜெயலலிதா அம்மையார் இறப்புக்குப் பின்னால், “குடும்பமே தொடக்ககால திமுக, கலைஞரின் வசனங்களை மனப்பாடமாக சொல்வேன், ஸ்டாலின் சிறப்பாக கட்சியை நடத்துகிறார்” என்று தொடங்கி, அத்தனையும் திமுக புகழ்பாடும் வார்த்தைகளே. வேறொரு கட்சியில் இருந்து கொண்டு இப்படி சொல்வது ஏற்புடையதாக இல்லை.

ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அஇஅதிமுக எத்தனையோ துண்டுகளாக உடைந்து போயுள்ளது. செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி. கலைராஜன், சேகர்பாபு என்று ஏராளமான அதிமுக முகங்கள் ஜெ.ஜெயலலிதா காலத்திலும் அதற்கும் முன்னதாக எ.வ.வேலு போன்றோர் இடம் பெயர்ந்த காலத்திலும் பேசப்படாத விஷயங்கள் யாவும் ஓபிஎஸ், திமுகவுக்கு வந்த பிறகு பேசப்படுகிறது.

கட்சியில் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு மூன்றுமுறை அதிமுக சார்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் பொறுப்பு வகித்தவர், இப்படி வேறுகட்சிக்கு தாவலாமா என்ற கோபம் காரணமாக இருக்கலாம். இந்த இடப்பெயர்ச்சிக்குப் பின்னால் திமுக காரணமாக இருக்கலாம், அதை சொல்ல ஆயிரம் முகாந்தரம் இருக்கிறது.

அன்வர்ராஜா, பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம், வெல்லமண்டி நடராஜன் (ஓபிஎஸ், திமுகவுக்குள் வந்ததால், போன வேகத்திலேயே இவர் அதிமுகவுக்கு திரும்பி விட்டார்) ஆர். வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன், விழுப்புரம் லட்சுமணன், திண்டுக்கல் சுப்புரத்தினம் என இந்தப் பட்டியலில் இருப்போரில் 90% நபர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். ஒன்றன்பின் ஒன்றாகவே இவர்கள் திமுகவின் அறிவாலயம் வந்தனர். ஆதரவாளர்களின் தலைவன் பின்னால் கடைசி கடைசியாக வந்திருக்கிறார்…
“இனியும் யாரும் வர வாய்ப்பில்லை என்ற கிளைமாக்ஸ் மனதுடன், திட்டமிட்ட இடத்துக்கு ஓ.பி.எஸ்., வந்தே விட்டார்” என்பதே அதிமுகவினரின் இன்றைய அப்டேட் குற்றச்சாட்டு …

எந்த ஆண்டின் பிப்ரவரியையும் விட இந்த பிப்ரவரி சிறப்பானதுதான் போருக்கிறது. அரசியல் உலகுக்கு அத்தனை நினைவுகளை கொடுத்துள்ளது. 18.02.2026-ஆம் நாள், பண்ரூட்டி ராமச்சந்திரன் திடீரென கட்சி ஆரம்பித்து தவெகவின் ஆதரவுக் குரலாகி எடப்பாடி மீது தாக்குதலை தொடங்கியுள்ளார். 24.02.2026-ல் வி.என்.சசிகலா அம்மையார் கட்சி ஆரம்பித்து அவரும் எடப்பாடி தாக்குதலை முன்னெடுத்து சுழல்கிறார். கடந்த இருபது நாள்களில் திமுகவைத் தேடிவந்த அதிமுகவினர் அதிகம்தான்.

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *