ஏ + ரவுடி எண்ணூர் தனசேகரன்|கைது|பின்னணி|

ஏ+ தாதா எண்ணூர் தனசேகர் துப்பாக்கி முனையில் கைது|

ஏ ப்ளஸ் கேட்டகரியில் இருக்கும் ரவுடிகளில் ஒருவரான எண்ணூர் தனசேகர் (47), நேற்று சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து போலீசாரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

எண்ணூர் தனசேகர் தப்பித்து ஓடாதவாறு அவரை எண்ணூர் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். தனசேகரிடம் இருந்து துப்பாக்கி, செல்போன் மற்றும் அவர் பயன்படுத்தும் கார் போன்றன அப்போது பறிமுதல் செய்யப்பட்டது.

கொலை, கொள்ளை, தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் எண்ணூர் தனசேகர் மீது நிலுவையில் உள்ளன. கூலிப்படையை வைத்து துணை சிறை கண்காணிப்பாளர் மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்ததும் எண்ணூர் தனசேகரன்தான் என்று தெரிந்ததும் உள்ளூர் போலீசாரோடு சேர்ந்து சிறைத் துறை போலீசாரும் தனசேகரன் மீது அளவு கடந்த பாசத்தை (!) பொழியத் தொடங்கினர்.

அவர்மீதான வழக்குகள் குறித்து போலீசார், விசாரணை நடத்த முயற்சித்த போதெல்லாம் தலைமறைவாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் (கொஞ்சம் வேகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியவர்) உத்தரவின் பேரில், அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து ஆக்சனில் இறங்கும் போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரி (செங்குன்றம்) தலைமையிலான தனிப்படையினர் மற்றும் எண்ணூர் போலீசார் தனசேகரனை தேடி வந்தனர்.

அப்போதுதான் சென்னை கிண்டி, நட்சத்திர ஹோட்டலில் தனசேகர் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவில் ஹோட்டலை சுற்றி வளைத்து தனசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த காட்டூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஏழு கொலைவழக்கு உள்பட, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல்,
கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல் என முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளும், தொடர் குண்டாஸ் அனுபவங்களுமாக மிக நெடிய தியாக வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டவர் எண்ணூர் தனசேகரன்.

தாதா என்றும் ரவுடி என்றும் பொதுமக்களை அடையாளத்தோடு அச்சுறுத்தும் நபர்களை போலீசார் சுட்டுப் பிடிப்பதும், சுட்டு மொத்தமாய் முடிப்பதும் அவ்வப்போது நடப்பதுதான்… அதேவேளையில் எண்ணூர் தனசேகரன் போன்ற சிலர் மட்டும் அதிலிருந்து தப்பித்து “பாத்ரூமில் வழுக்கி விழும்” சிறுசிறு தண்டனைகளை பெற்று தப்பித்து விடுவார்கள். சிலர் தற்கொலை நாடகமும் போடுவார்கள்.
2023- ஆம் ஆண்டு கடலூர் சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது பி.பி. மாத்திரைகளை பல்லிமிட்டாய் சாப்பிடுவது போல சாப்பிட்டு மயங்கி விழுந்து வேறு சிறைக்கு மாறிப்போக ரூட் போட்டவர்தான் எண்ணூர் தனசேகரன் என்று சொல்லி சில போலீசாரே ஆச்சர்யம் உண்டாக்குகிறார்கள்…

அரசியல்ல இருந்தாலும் ரவுடித்தனத்தோட IN – OUT தெரிஞ்சிருந்தா ரொம்ப நாள் வாழலாம், ரவுடியா இருந்தாலும் அரசியலோட IN -OUT தெரிஞ்சுக்கிட்டா, விருப்பப்படும் போது சாகலாம் போலிருக்கிறது…

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *