போலீசையே ஏமாற்றிய போலீஸ்|விதவிதமாய் மோசடிகள்|

சென்னையில் வசிக்கும் ஆரோக்கிய ஜான்கென்னடிக்கு சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அடுத்த வளையம்பட்டிதான் பூர்வீகம். ஆரோக்கிய ஜான்கென்னடி, சென்னை போலீசில் அலுவலக உதவியாளர். சென்னையிலிருந்து பயணப்பட்டு திருச்சி ரெயில் நிலையத்தில் போய், 2025, அக்டோபர் 30-ஆம்தேதி இறங்கிய ஆரோக்கிய ஜான்கென்னடியை இருவர், வேறு மாதிரி வரவேற்றுள்ளனர். முன்பின் அறிமுகம் இல்லாத அவர்கள், தங்களை லஞ்சஒழிப்புப் பிரிவு போலீசார் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, “பேக்ல இருக்குற 60லட்ச ரூபாய்க்கு கணக்கு இருக்கிறதா?” என்ற கேள்வியோடு பணப்பையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல, ‘என்கொயரிக்கு கூப்பிடும்போது வந்து போகணும், எங்களுக்குச் சொல்லாமல் வெளியூர் பயணம் போகக்கூடாது; இது ஹவாலா பணமான்னு இன்னும் தெரியல, பாக்கணும்” என்றெல்லாம் சொல்லிவிட்டு, ரெயில்வே நடைமேடை பகுதியிலேயே ஆரோக்கிய ஜான் கென்னடியை விட்டுவிட்டு; தப்பித்துப் போயுள்ளனர். “சென்னையிலிருந்து நிலம் வாங்குவதற்காக 60 லட்ச ரூபாயுடன் திருச்சிக்கு வந்தேன்” என்று சொல்லத்தெரிந்த ஆரோக்கிய ஜான் கென்னடிக்கு, யாருக்கும் தெரியாமல் கைப்பையில் பணம் கொண்டு வந்த விஷயம், எப்படி இவர்களுக்குத் தெரிந்தது என்று யோசிக்க முடியாமல் போனதுதான் புரிபடவில்லை. அக்டோபர் 30ஆம்தேதி பணத்தைப் பறிகொடுத்து விட்டு, நவம்பர் 19 ஆம் தேதி, மிக மிக மெதுவாக பொறுப்பே இல்லாமல்; திருச்சி ரெயில்வே போலீசில் போய் புகார் கொடுத்திருக்கிறார்; ஆரோக்கிய ஜான்கென்னடி. திருச்சி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையிலான போலீஸ் குழுவினர் நடத்திய விசாரணையில், அதே திருச்சி ரெயில்வே போலீசில் வேலை பார்க்கும் ஜான்சன் கிறிஸ்டோகுமார் மற்றும் தீனதயாள் ஆகியோர்தான், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாக நடித்து; 60 லட்ச ரூபாயை பறித்துச் சென்றனர் என்பது தெரியவந்தது. அதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற நேர்நிறுத்தலுக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி- திருவெறும்பூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் ரஞ்சித் மற்றும் ராஜேந்திரன் போட்டுக் கொடுத்த திட்டப்படியே லஞ்ச ஒழிப்பு போலீசாக ஜான்சன் கிறிஸ்டோகுமாரும், தீனதயாளும் நடித்ததும் தொடர் விசாரணையில் அம்பலப்பட்டுப் போயுள்ளது. ரஞ்சித்- ராஜேந்திரனை இயக்கிய ரெயில்வே போலீசாரை திருச்சி ரெயில்வே போலீஸ் எஸ்.பி., ராஜன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மீட்கப்பட்ட 60 லட்ச ரூபாயை நீதிமன்றத்தில் ஒப்படைத்த போலீசார், அது ஹவாலா பணமா, கணக்கில் வருகிற பணமா, வராத பணமா, காவல் அலுவலக உதவியாளரிடம் மொத்தமாக 60 லட்சம் கரன்சி இருந்தது எப்படி போன்ற பல்வேறு கேள்விகளோடு தொடர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ந.பா.சே.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *