
புதுக்கவிதைகளில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர், ஈரோடு- சென்னிமலை ந.ஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், (92) இன்று – இப்போது (22.11.2025) நம்மோடு இல்லை. மெட்ராஸ்குரல் இணையதளம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்த ஈரோட்டார், ஈரோட்டுப் பாசறையில் ஊறியவர். சென்னை புதுக்கல்லூரியில் பேராசானாய், பல நூறு மாணவர்களை கவிஞர்களாக உருவாக்கிய பேராளர்.
தமிழன்பனாரின் மகன்கள் பாப்லோ நெருடா, பாரதிதாசன். மருத்துவர்கள். பாப்லோ நெருடா சென்னையில் இருக்கிறார். பாரதிதாசன் அமெரிக்காவில் மருத்துவத்துறை பேராசிரியராக இருக்கிறார். ஈரோடு தமிழன்பன் ஐயாவின் நிழலாய் இருந்துவந்த துணைவியார் சாந்தா அம்மாளுக்கு என்ன வார்த்தை சொல்லி தேற்றுவதோ.
ஐயா ஈரோடு தமிழன்பனின், “ஆசிரியரின் பிரம்பைக்கேட்டு
முதல்நாளிலேயே
அடம் பிடித்தது குழந்தை” –
என்கிற, ஹைக்கூ சொல்லாடலில்
குழந்தைத்தனம் மேலோங்கி நிற்பதை உணரலாம். அதே வேளையில், அவருடைய தமிழாய்ந்த பாக்களோ
வேகத்தில் மின்னலை மீறி சீறுவன…
👇
தமிழைக் காப்பாற்றக் கட்சிகள் அமைத்தோம்; பிறகு கட்சிகளைக் காப்பாற்றத் தமிழை இழந்தோம்.
தமிழனைக் காப்பாற்ற அரசுகள் கண்டோம் – அதன்பின் அரசுகளைக் காப்பாற்றத் தமிழனை இழந்தோம்.
மதங்கள் தமிழனைக் கிழித்துப் போட்டன ஒட்டிவைக்க முற்பட்டது தமிழ் !
சாதிகள் தமிழனைக் கிழித்துப் போட்டன ஒட்டிவைக்க முற்பட்டது தமிழ் !
கட்சிகள் தமிழனைக் கிழித்துப் போட்டன தாமும் கிழிந்து போயின.
வெளியார் நட்டுவைத்த வேற்றுமைப் பார்த்தீனியன்கள் எங்கெங்கும்.
எப்போது இந்தக் கிரகணம் நீங்கும் ?
👏
ந.பா.சேதுராமன்
