
வருகிற 21.01.2026 -அன்று வழக்கு விசாரணைக்காக ஜனநாயகனை கொண்டு போயிருக்கிறார்கள்.
விஜய்யின் ஜனநாயகனுக்கு 2026 தைப்பொங்கல் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. ஜனநாயகனுக்கு மட்டும் சிக்கல் இல்லை. S.K. நடித்த பராசக்திக்கும் அதே சிக்கல் உண்டாகி இப்போது அவருக்கும் தைப்பொங்கல் இல்லாமல் போயிருக்கிறது.
ஜனநாயகனுக்கு ஒரு இடத்தில் மட்டும்தான் மாற்றம் சொல்லப்பட்டு, அதுதான் பஞ்சாயத்தில் இருக்கிறது என்கிறார்கள்; அதே வேளையில், பராசக்திக்கு 25 இடத்தில் கத்திரி வைத்துள்ளதையும், துண்டிக்கப்பட்ட துண்டுகளையும் சமூகவெளியில்; பரவலாகக் காணமுடிகிறது.
“பராசக்திக்கு கத்திரியை தாராளமாக வைக்கத்தான் ஜனநாயகனை இவ்வளவுதூரம் நகர்த்திக் கொண்டு வந்தார்களா, அதற்காகத்தான் விஜய், சத்தம் காட்டாமல் இருக்கிறாரா; சொல்லுங்கண்ணே, சொல்லுங்க” என்று இமான் அண்ணாச்சி ஸ்டைலில் அலைபேசி வழியில் கேட்டவனுக்கு பிறகு பதில் சொல்வதாக துண்டித்து விட்டேன்.
குறிப்பிட்டுச் சொல்வதெனில், பராசக்தி படத்தில், “அந்த அச்சம் இருக்கிறவரை அண்ணாதுரைதான் இந்தநாட்டை ஆளுகிறான்” என்கிற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தையும்; போஸ்ட் ஆபீசில் இருக்கிற இந்தி எழுத்தை சாணம் கொண்டு அழித்த காட்சியையும்; நீக்கியிருப்பதாக தெரிகிறது. இனிமேல் தேடாத மண்ணாங்கட்டிகளும் அண்ணா யாரென தேடுவார்கள், மகிழ்ச்சி, சிறப்பு.

இன்னொரு பக்கம், தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம், தணிக்கைக் குழுவின் பிடியிலும், நீதிமன்றப் படியிலும், ரிலீஸ் நாள் குறித்த போராட்டத்தில் இருப்பதை பலரும் கண்டித்து அறிக்கை கொடுத்துள்ளனர்.
சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் வரிசையில் அறிக்கை வருவதற்கு முன்பே, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிக்கைகள் அணிவகுத்தன. பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம்தாகூர் எம்.பி., ஜோதிமணி எம்.பி., வரிசையில் பலரின் அறிக்கைகள் வரத்தொடங்கின. “திமுக தீயசக்தி” என்று தவெக தலைவர் விஜய் பேசியபோது கூட்டணிதர்மம் காத்து அமைதியாய் – நியூட்ரலாய் மவுனித்த காங்கிரஸ் கட்சியின் கோபக்கார கீர்த்தி – மூர்த்திகள், ஜனநாயகன் விஷயத்தில் கொதித்தே போய்விட்டனர்.
பிரவீன் சக்கரவர்த்திகள், மாணிக் தாகூர்கள் இதுகுறித்து பேசிய விஷயங்கள், திமுகவுக்கு சவால் விடுவது போலவும்; சீண்டுவது போலவுமே அமைந்திருந்தது. ஜோதிமணி எம்.பி.,யின் பேட்டியும், பதிவும்தான், தணிக்கைக்குழுவை கண்டித்தது. அதுபோலவே தோழர்களின் அறிக்கையும், திமுக கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் அறிக்கையும் இருந்தது. திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி முறிந்து போய்விடக்கூடாது என்ற எண்ணம் அதில் வெளிப்பட்டது.
ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில்
உள்ள சிக்கல், எல்லோரையும்விட
தவெக தலைவர் விஜய்யைதான் அதிகமாக பாதித்திருக்கும். இந்த விஷயத்தில் விஜய் எதைப்பேசினாலும், தயாரிப்பு நிறுவனம்தான் பெரிதாய் நஷ்டமடையும். இப்போது S.K. நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி படம், 25 இடங்களில் கத்திரி வைக்கப்பட்டு தணிக்கைக்குழுவால் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டிருக்கிறது. S.K. வின் 25-வது படத்தை 25 இடத்தில் துண்டுபோட்டு ரிலீஸ் செய்யப்போகிறார்கள். ஜனநாயகன் விஜய்க்காக எல்லாக் கட்சிகளும் குரல் கொடுக்கிறது, ஒரு அரசியல் கட்சித்தலைவராக விஜய் அவர்கள், பராசக்திக்காக இப்போதுகுரல் கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும்; அதனால் ஜனநாயகன் தயாரிப்பாளர் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.
பாஜகவின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “சென்சார் ஃபோர்டுக்கும் பாஜகவுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை, அதிகாரிகள் படத்தைப் பார்த்து செய்கிற முடிவுக்கு பாஜக பொறுப்பாகாது” என்கிறார். ஜனநாயகன் – பராசக்தி இரண்டுக்குமான பதிலாக இதைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ, “சிபிஐ, E.D. போன்று சென்சார் ஃபோர்டும் பாஜகவின் கைப்பாவையாக ஆகிப்போயுள்ளது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிப்போம். “விருதாசலம் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, பிரேமலதா விஜயகாந்த் அமர்வார்” : கடலூர்
தேமுதிக பொதுக்கூட்டத்தில் சுதீஷ்
ந.பா.சேதுராமன்

