
அடித்து ஆடும் அரசியல் ஆட்டத்தில் முன்பைக் காட்டிலும் பாஜகவின் ஆட்டம், அட்டகாசம், அசத்தல். பாஜகவின் இந்த ஆட்டத்தில், மாநிலக்கட்சிகள் சிக்கினால் பரவாயில்லை; தேசியகட்சியாக பார்க்கப்படுகிற காங்கிரஸ் கட்சியுமா சிக்கிக் கொள்ளும்? கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் கழிக்காமல் பார்த்தாலும் ஒரே விடைதான் கிடைக்கும் போலிருக்கிறது.
நூறுநாள் வேலைதிட்டத்தில் பிரவீன்கள் பஞ்ச் வசனம் வைத்தபோதே, மகாத்மா புரண்டு படுத்திருப்பார். ‘அப்படியான அர்த்தத்தில், அவர் பேசியிருக்க வாய்ப்பில்லை’ என்று சமாதானம் ஆகிக் கொள்ளாமல் திமுக தெளிவாகியிருக்க வேண்டும். சொல்லப்போனால் அ.இ. காங்கிரஸ் தலைமை, இன்னும் தெளிவாகி இருக்கவேண்டும், ஏனெனில் அந்த பஞ்ச், பாஜகவைத் தூக்கிப் பிடித்த பஞ்ச்; ஆனால் ஆகவில்லை…
தொண்டர்களின் நெடுநாள் உள்ளக் குமுறல் இதுவென ‘கூட்டணி ஆட்சி’யை முன்வைத்து பிரவீன்கள் பேசியதும்; அதற்கும் முன்னதாக, தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததும்- சந்திப்பு குறித்து பேசியதும் என பிரவீனர்கள்; ‘அட்டாக்’ கில், சிக்ஸர்மழை பொழிந்தனர். பிரவீனர்கள் என பன்மையில் சொல்ல, ரூபி தாகூர்கள் வரிசையில் பலர் நின்றதே காரணம்…
பொறுப்புமிக்க தலைமை பொறுப்பு கார்கேக்களோ, 12-ஆம் நூற்றாண்டு வர்த்தகப்பயணி மார்க்கோ போலோ போன்று வெறுமனே இதை கடப்பதே, கூட்டணியை விட்டு விலகிப்போவதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
கூட்டணியில் உள்ள கட்சிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்குகேட்பது, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது அல்ல; யாருமே கேட்கலாம். மிக நேர்மையாக கட்சியின் தலைமையே அதை நேருக்கு நேராக கேட்கவேண்டும்; அதுதான் சரி. குட்டிகளை விட்டு ஆழம் பார்ப்பது அழகல்ல.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதலில் நிராகரித்தது அதிமுகதான். அதையும் தலைமை சொல்லவில்லை, இரண்டாம் நிலை தலைவர்கள் (இ.நி.த.) சொன்னார்கள், இ.நி.த. கருத்தை; தலைமை மறுக்கவில்லை; தலைமைக்கு அதில் ஏற்பு இருந்தது. அதையே இப்போது காங்கிரஸ் நிலைப்பாட்டில் பொருத்திப் பார்ப்போம். காங்கிரசின் இ.நி.த. சொல்லும் கருத்துக்கு, தலைமை காங்கிரஸ் மறுக்கவில்லை எனும்போது நிலைப்பாடு தெளிவாகிறது.
“ஒருவேளை பீகார் தேர்தலில், பெரும்பான்மையை காங்கிரஸ் தக்க வைத்திருந்தால், 60% சீட்டும், மந்திரி மார்கள் பத்தும்; டெபுடி சி.எம். என்ற கெத்துமாக; தமிழ்நாட்டில் வலம்வரவே தொண்டர்கள் விரும்புகிறார்கள்” என்று காங்கிரஸ் தலைமையே அறிக்கை கொடுத்திருக்கும், அப்படி ஏதும் நடக்க வில்லை, நடக்கவும் பாஜக விடவில்லை, அந்தவகையில் பாஜகவுக்குத்தான் திமுக நன்றி சொல்லவேண்டும்.
ந.பா.சேதுராமன்
