
திமுக – காங்கிரஸ், கூட்டணி உறவு என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், திமுக தலைவர் இடையேயான உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல; அது -அகிலஇந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் திமுகவுக்குமான நல்லுறவை அடிப்படையாகக் கொண்டது.
திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் இப்படி என்றில்லை, பாஜக -அதிமுக கூட்டணிக்கும் இதுதான் அளவீடு.
யதார்த்தம் இப்படி உரத்து சொன்னாலும் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி, தவெக நிர்வாகிகள் -தவெக தலைவர் வரை, பல ரவுண்டுகள் சந்தித்துப்பேசி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒருபடி மேலேபோய், “இந்தியாவிலேயே அதிகக்கடன் வாங்கிய மாநிலங்களில், திமுக ஆள்கிற தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது” என்று, சமூகவலைதளத்தில் பதிவிடுகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிஜ தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவோ, நிழல் தலைவர் ராகுல் காந்தியோ இதற்கு பதிலடியாக எதிர்வினையாற்றி இருக்க வேண்டும், குறைந்தபட்சம் என்றால் கண்டித்தும்; அதிகபட்சம் என்றால் சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுத்திருந்தால்; திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாய் உள்ளதாக கருத்தில் கொள்ளலாம்.
அப்படி கருத முடியாதபடி அமைதி காத்தது காங்கிரஸ் தலைமை.
பிரவீன் சக்கரவர்த்தி, கட்சியில் மாவட்ட அளவில் ஏதோ ஒரு அணியின் தலைவர் பொறுப்பில் இருப்பவர் அல்ல.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தகவல் பகுப்பாய்வுப் பிரிவுத் தலைவர். ராகுல் காந்தியின் நட்பு வட்டத்தில் இருப்பவர். கூட்டணி குறித்தோ அரசியல் குறித்தோ பிரவீன் சக்கரவர்த்தி அறியாதவர் அல்ல.
இந்த விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை செய்யத் தவறியதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., செய்தார்.
“பிரவீன் சக்கரவர்த்தி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் கைக்கூலி” என்று அதே சமூகவலைதளத்திலேயே பதிலடி கொடுத்தார். இதற்கும் அ. இ. காங்கிரஸ் தலைமை, எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. மையமாய் நின்று அமைதி காத்தது.
அடுத்தடுத்த சுற்றுகளில் திமுகவின் மேனாள் எம்.பி., எம்.எம். அப்துல்லாவும், காங்கிரசின் எம்.பி., மாணிக்கம் தாகூரும் கடுமையான வார்த்தைப் போரில் இறங்கி விட்டனர். இவ்விருவர் மோதலுக்கு வித்திட்ட அதே பிரவீன் சக்கரவர்த்தி, இரண்டாவது சுற்றில், ‘காங்கிரஸ் துணை இல்லாமல் திமுகவால் வெற்றிபெற முடியாது’
என்று மீண்டும் தொடங்கியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், திமுகவுடனான கூட்டணி முறியும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்கள் பேசிவருவது, தவெக மற்றும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவே இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் அதே மகிழ்ச்சியை நோக்கி திமுகவும் பயணத்தை தொடங்கிவிடும் என்பதை காங்கிரஸ் இன்னும் புரிந்து கொள்ள வில்லை என்றே தெரிகிறது.
கூட்டணி வளையத்தை விட்டு வெளியில் இருக்கும் டி.டி.வி., ஓ.பி.எஸ்., சசிகலா, தே.மு.தி.க., உள்ளிட்ட வரிசையை சீரியஸாக கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவரும் வேலையை செய்து முடிப்பது திமுகவுக்கு சிரமமான விஷயமே இல்லை. காங்கிரஸ் நிலைதான் கேள்விக்குறி ஆகிவிடும். அதளபாதாளத்தை நோக்கிய பயணமாக அது அமைந்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது.
அடுத்ததாக, காங்கிரஸ் கட்சியின் பேச்சு வார்த்தைக் குழுத்தலைவர் கிரிஷ் சோடங்கர் போன்றோர், “ஆட்சியில் அதிகாரப்பகிர்வு என்பது காங்கிரஸ் தலைமையின் முடிவு” என்பதாக முன் வைக்கும் கருத்து, கூட்டணியை இன்னும் ஆழமாக பலவீனக் குழியில் தள்ளும் கிளைமாக்ஸ் வேலைதான்.
இப்படி நீண்ட நெடிய பஞ்சாயத்து பத்து நாளுக்கும் மேலாக போய்க் கொண்டிருக்க, இன்று திருவாய் மலர்ந்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே. “உ.பி.யோடு தமிழ்நாட்டை ஒப்பிடக்கூடாது தம்பி… அது தப்பு” என்று ஏ.சி.யை 16-ல் வைத்து விட்டு FAN ஐ ஐந்தில் ஓட விட்டிருக்கிறார். எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த மூவ், திமுகவுக்கு பலம்தான்.
ந.பா.சேதுராமன்
