ஆமைகள் இறப்பு காரணம் இதுதான் |மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்|

பழவேற்காடு கடற்கரையில் கொத்து கொத்தாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிகழ்வு, மனிதத் தவறால் ஏற்பட்டது. இதே நிலைமைதான் நாளை மனிதர்களுக்கும் வரும், என இஸ்ரோ அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பஞ்செட்டி வேலம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனரும், அறிவியலாளருமான மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், நமது நாட்டில் பயிற்சி பெற்ற மனித ஆற்றல் அனைத்து துறைகளிலும் தேவையாக உள்ளது எனவும், சமையலின் போது காய்கறிகளை முறையாக நறுக்காவிட்டால் நமது விரல் வெட்டுப்படும் என்பது போல, சமூக வலைதளங்களை நாம் சரியான முறையில் பயன்படுத்தாவிடில், நாம் அதற்கு இரையாக நேரிடும் என்றார். தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் கல்வியை கைவிடாமல் தொடர்ந்திட வேண்டும் எனவும், தெரு விளக்கில் படித்த நான், தற்போது அனைத்து புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளேன் என மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறிவியலாளர், மயில்சாமி அண்ணாதுரை, ஆண்டுதோறும் அமெரிக்காவில் உருவாகும் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் மட்டுமே பொறியாளர்கள் உருவாகி வருகின்றனர் எனவும், ஆனால் அனைவருமே சிறந்த பொறியாளர்களாக வர வேண்டும் என்றார். தொழில் புரட்சியை தாண்டி, செயற்கை நுண்ணறிவுப் புரட்சியை நாம் சரியான பாதையில் பயன்படுத்திட வேண்டும் என்றும், சிறந்த பொறியாளர் என்பதை காட்டிலும் நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் கேட்டுக் கொண்டார். செல்போனை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை போல, செயற்கை நுண்ணறிவையும் தவறாக பயன்படுத்தினால் பின் விளைவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என தெரிவித்தார் மேலும். பழவேற்காடு கடற்கரையில் கொத்து கொத்தாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிகழ்வு தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், பொறுப்புள்ள அறிவியலை நோக்கி செல்லவேண்டும், பொறுப்புகளில் இருந்து தவறும் போது இதுபோன்ற விளைவுகள் வரும் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், இன்று ஆமைகளுக்கு ஏற்பட்ட நிலை நாளை மனிதர்களுக்கும் ஏற்படும் என்பதால் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும், நாம்தான் அரசாங்கத்தை உருவாக்குகிறோம் இதில் ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுப்பு உள்ளது. அனைவரும் பொறுப்புள்ளவர்களாக மாற வேண்டும் என எச்சரிக்கை விடுத்த மயில்சாமி அண்ணாதுரை, உலக நாடுகள் அனைத்துமே சேர்ந்தும் செய்ய முடியாத நிலையில் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தது இந்தியர்கள் தான் எனவும், செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக முதன் முதலில் சென்றதும் இந்தியர்களே என கூறினார். ஒரு சிலர் பொறுப்பாக நடந்து கொள்ளாததே செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ஏற்பட்ட தவறுகளுக்கு காரணம் எனவும் கூறினார். அடுத்த 6 மணி நேரத்தில் எங்கெங்கு மழை வரும் என்பதை துல்லியமாக கணிப்பது போல், நீண்ட கால முன்னறிவிப்புகளை வெளியிட மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது எனவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *