

சமூக வலைதளங்களில் பேராளர் (V.I.P) களை யாராவது தாக்கி எழுதினாலோ, அவதூறு பேசினாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையடைக்கப்படுவது தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அடிக்கடி நடக்கிறது.
நடவடிக்கையை பேராளர் என்றில்லாமல் ஒரே (UNIFORM) சீரமைப்பில் எல்லோருக்கும் பொதுவானதாக கொண்டுவந்து விட்டால் நாட்டில் வெகுவாக பிரச்சினைகள் குறைந்து விடுவதைப் பார்க்கமுடியும்.
கத்திரிக்காய் விற்கிற விலையில் பொரியல் சாப்பிடும் ஆசையே போய்விட்டது என்று கைக்காசு கரைந்துபோகும் வேதனையில் ஒருவன் எழுதினாலோ பேசினாலோ கதை முடிந்தது. உங்க ஆட்சியில் உருளைக் கிழங்கு ஓசியிலா கிடைத்தது என்று ஆரம்பித்து, பொரியலுக்காக வேதனைப் பட்டவனின் மூன்று தலைமுறையே கதறும் அளவுக்கு பதிலடி தருகிற நிலை உள்ளது.
மனிதர்களில் தொடங்கிய வார்த்தை யுத்தம், தற்போது விஞ்ஞானத்தின் துணையோடு நடக்கிறது. புதுப்புது வார்த்தைகளில் புதிது புதிதாக பதிலடி கொடுக்கிற சூழல் இலகுவாகி இருக்கிறது. மடையன்கள் கண் முன்னே உலக அறிவாளிகளாக சித்தரிக்கப்பட்டு நிற்கிறார்கள்.
இன்னொரு பக்கம், எந்தத் தலைவன் குறித்து புகழ்பாடினாலும் அந்த தலைவனின் இன்னொரு முகம் இது என்று விஞ்ஞானத்தின் உதவியோடு எழுதி எழுதி தலைவனின் முகத்திரை கிழிந்ததாகச் சொல்லி – கிழித்ததே நாங்கள்தான் என்று மகிழ்கிறார்கள். தலைவரின் பிறந்தநாள் நினைவுநாள் கொண்டாட்டங்கள் இனி – முற்றாய் அற்றுப்போக வைக்கும் சூழலை வலிந்து உருவாக்கி வருகிறார்கள். கோடுகளை இன்றிலிருந்து போட்டு வரலாற்றையும் இன்றிலிருந்தே தொடங்க முடியும் என்கிற எண்ணத்தை உருவாக்க முனைவது, எல்-நினோவை விட பெரிய விளைவை உண்டு பண்ணி விடும். ஐயப்பாடு சிறிதும் இன்றி, அரசியல் என்றாலே, ஆதாயத்தின் தொடக்கம்தான் என்றளவுக்கு மக்கள் மனதளவில் மாற்றம் பெற்றுள்ளது தலைமுறைக்கான பேராபத்து.
ஒவ்வொரு கட்சிக்கும் வரலாற்றுத் தலைவர்கள், கொள்கை முன்னோடிகள், வழிகாட்டிகள் இருக்கத்தான் செய்வார்கள். அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் இதே நிலை தொடர்ந்தால், எந்தத் தலைவனும் எந்த முன்னோடியும் கொண்டாடித் தீர்க்கும் தேவையே இல்லாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டு இருப்பார்கள். பொதுத் தலைவர்களோ, கட்சித் தலைவர்களோ, கொள்கைத் தலைவர்களோ போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு தரப்பும் மாற்றி மாற்றி கழுவேற்றி காயடித்து கதை முடித்த நிலைதான் எதிர்காலத்தில் எஞ்சியிருக்கும்.
கொள்கையோ வரலாற்றுத் தலைவனோ எந்த முன்னோடியோ போற்றி போற்றி விஷயங்களோ இல்லாத கட்சிகள், இதிலிருந்து ஓரளவு தப்பிப் பிழைக்கலாம்.
இன்று நண்பகல் முதற்கொண்டு தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இருவரையும் Ai மூலம் ‘இறுதிப் பயணம்’ அனுப்பி வைத்து ஒரு கும்பல் மகிழ்ந்து கொண்டிருக்கும் காட்சி பதைபதைக்க வைக்கிறது. ஆகாத தலைவர்களின் ஊர்வலத்தை மாறி மாறி கணினி மூலம் வழி நடத்துகிறார்கள். இது எத்தனை பெரிய மோதலையும், பின் விளைவையும் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியது என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
யாகாவாராயினும் என்ற குறள்வழியில் அனைவருமே நிலைத்து வாழ – ஒவ்வொரு தனி மனிதனையும் சட்டத்தின் கண்காணிப்பு வளையத்தில் வைத்தே ஆகவேண்டிய தேவை இருக்கிறது என்பதே உண்மை.
ந.பா.சேதுராமன்
(17.09.2026)
