அறங்காவலர் குழு தலைவரின் அதிகாரம் இதுதான்!

கோவில் அறங்காவலர் குழு தலைவரின் அதிகார வரம்பும்- HR&CE விதிமுறைகளும்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 43,786 இந்துக் கோயில்களும், சமணக் கோயில்கள், திருமடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பட மொத்தம் 46,331 ஆன்மீகச் சொத்துக்களும் நிர்வாகத்தில் உள்ளன. இதில், 43,786 இந்து கோவில்கள், 22 சமண கோவில்கள் 45 மடங்கள் மடங்களுக்குச் சொந்தமான 69 கோயில்கள், 1,262 அறக்கட்டளைகள் உள்ளன. இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின்கீழ் இந்துசமய திருக்கோயில் களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக திருக்கோயிலுக்கும் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் மூன்று உறுப்பினர்கள் அல்லது ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும். அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அல்லது தற்காலிகமாக காலியிடம் ஏற்படும் பொழுது அடுத்த அறங்காவலர் குழுநியமனம் செய்யப்படும் வரை, திருக்கோயிலின் அறங்காவலருக்குரிய கடமைகளை செய்திட இடைக்கால ஏற்பாடாக தகுதியான ஒருவர் தக்காராக நியமனம் செய்யப்படுவார்.கோவில் இடத்தை சொந்தமாக விற்கவோ அல்லது தானமாகக் கொடுக்கவோ தனிப்பட்ட முறையில் எந்த அதிகாரமும் இக்குழுவுக்கு கிடையாது. அறங்காவலர்கள் கோவில் சொத்துக்களுக்கு பாதுகாவலர்கள் மட்டுமே, உரிமையாளர்கள் அல்ல. சட்டப் பிரிவு 34- தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின்படி, கோவில் நிலம் அல்லது சொத்தை விற்கவோ, மாற்றவோ அல்லது துறையின் அனுமதியின்றி 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடவோ அறங்காவலர்களால் முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான, அறநிலையத்துறையின் முதன்மை ஆணையரின் முறையான அனுமதி மற்றும் அரசு அனுமதி பெற வேண்டும் ஆணையர் அனுமதி அளிப்பதற்கு முன்பு, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு, அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்த அனுமதியின்றிச் செய்யப்படும் எந்தவொரு விற்பனையும் சட்டப்படி செல்லாது. அறங்காவலர் தன்னிச்சையாகச் செய்யும் தானம் அல்லது விற்பனைப் பத்திரங்கள் சட்டப்படி செல்லாது. கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பது அறங்காவலரின் முக்கியக் கடமையாகும். இந்து சமய அறநிலையத்துறையின் முறையான அனுமதி மற்றும் சட்டப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் புராதான கோவில்களிலோ அல்லது அதற்கு சொந்தமான இடங்களிலோ வேறு எந்த புதிய கோவில்கள் அல்லது கட்டுமானப் பணிகளோ கட்ட முடியாது. இது சட்டப்படி குற்றமாகும், தமிழ்நாட்டில் உள்ள பல புராதான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம், 1959- பிரிவின் கீழ் நிர்வகிக்கப் படுகின்றன. கோவில் நிலம் அல்லது வளாகத்தில் எந்தவொரு புதிய திருப்பணியோ, கட்டுமானமோ செய்ய வேண்டுமெனில் துறையின் எழுத்துப் பூர்வ அனுமதி பெறுவது அவசியம். அதுவும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அல்லது பராமரிக்கப்படும் புராதானக் கோவில்களில் அரசின் முறையான ஆணையோ அல்லது உரிய பாரம்பரிய ஆணையத்தின் அனுமதியோ இன்றி எந்தவிதமான சிவில் கட்டுமானப் பணிகளும் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது,
அனுமதியின்றி கோவில் வளாகத்தில் புதிய கட்டடங்கள் அல்லது கோவில்கள் கட்டினால், அது நில ஆக்கிரமிப்பாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மற்றும் அந்தக் கட்டுமானங்கள் அகற்றப்படும், அறங்காவலர் அறநிலையத் துறையின் சட்ட விதிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் நீதிமன்ற வழி காட்டுதலுக்கு எதிராக அவர் தன்னிச்சையாகவோ அல்லது குழுவாகவோ செயல்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும், அறங்காவலர் குழு தலைவரின் அதிகார வரம்பு என்பது அவர் சார்ந்திருக்கும் அமைப்பு அல்லது நிறுவனத்தின்- அறக்கட்டளை, திருக்கோயில் அல்லது கல்வி நிறுவனம்- சட்ட விதிகள் மற்றும் பதிவு ஆவணங்களின் அடிப்படையில் முழுமையாக நிர்ணயிக்கப்படுகிறது. அறங்காவலர் குழு தலைவர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது, அவர் குழுவின் ஒரு பகுதியாகவே செயல்பட வேண்டும். குழு கூட்டங்களைக் கூட்டுதல், விவாதங்களை முறைப்படுத்துதல், மற்ற அறங்காவலர்களின் ஒப்புதல் இல்லாமல் தலைவர் தனித்து முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. இந்து சமய அறநிலையத்துறை அல்லது இதர சட்டங்களின் கீழ் செயல்படும் போது, துறை சார்ந்த ஆணையர் அல்லது செயல் அதிகாரியின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். மற்ற உறுப்பினர்களைவிடத் தலைவருக்கு எந்தவொரு தனிப்பட்ட அதிகாரம் அல்லது உரிமையோ இல்லை. கோவில் திருப்பணி அல்லது முக்கிய திருவிழா தொடர்பாக நடத்தப்படும் குழு கூட்டத்தை வெளிப்படையாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் முன்கூட்டியே செயல் அலுவலரின் அனுமதி பெற்று ஏழு தினங்களுக்கு முன்பு கூட்டம் நடைபெறும் இடம், தேதி நேரம் ஆகியவற்றை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைவரின் பார்வையில் படும்படி, விளம்பர பதாகையில் குறிப்பிட வேண்டும். மிக முக்கியமான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் தனக்கு வேண்டிய சிலரை மட்டும் வைத்துக்கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானம் என்பது சட்டத்திற்கு எதிரானது- கோவில் என்பது பொதுவுடமை என்பதால், பொதுமக்களின் கருத்தையும் கேட்க வேண்டும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எதிராக யாரேனும் கருத்துக்களை தெரிவித்தால் அதனை எழுத்துப்பூர்வமாக பதிவேட்டில் பதிவு செய்து செயல் அலுவலரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும், அதனை அவர் ஆணையர் அல்லது இணை ஆணையரின் பார்வைக்கு அனுப்புவார், மேலும் ஆண்டு தோறும் வரும் சிறப்பு வழிபாடு தினமான பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட பல்வேறு தினங்களுக்கான உபயதாரர்களின் பட்டியலை அவர்களின் முகவரியுடன் செயல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பங்குனி உத்திரம், திருக்கல்யாண வைபவம் போன்ற நாட்களில் உபயதாரர் சுவாமிக்கு காணிக்கை வழங்கும் தங்கம் அல்லது வெள்ளி திருமாங்கல்யம் உள்ளிட்ட ஆபரணங்கள் அல்லது வேண்டுதலுக்காக வழங்கப்படும் திரு உருவங்களுக்கான கவசங்கள் ஆகியவை வழிபாடு முடிந்ததும் சம்பந்தப்பட்ட கோவில் மூலவரின் உடமை என்பதால் அதனை முறைப்படி, செயல் அலுவலர் மூலம் ஆவணப்படுத்தப்பட்டு மூலவரின் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். உபயதாரர்கள் நேரடியாக வந்து பூஜை பொருட்களை வாங்கி கொடுத்து வழிபாட்டில் பங்கேற்க முடியாத நிலையில் அதற்காக அவர்கள் அர்ச்சகர் இடமோ அல்லது அறங்காவலர் குழு தலைவரிடமோ வழங்கப்படும். உபயத்திற்கான பணத்திற்கு-செயல் அலுவலரிடம் இருந்து முறைப்படி ரசீது பெற்று சம்பந்தப்பட்ட உபயதாரருக்கு வழங்க வேண்டும். இத்தகைய நடைமுறை அடுத்து வரும் அறங்காவலர் அல்லது செயல் அலுவலர் நிர்வாகம் செய்வதற்கான நடைமுறையாகும். அறங்காவலர் என்பவர் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலருக்கு உதவியாளராக மட்டுமே கருதப்படுவார். எனவே தன்னிச்சையாக அவர் எடுக்கும் எந்த முடிவும், இந்து சமய அறநிலையத்துறையால் சட்டப்படி அங்கீகரிக்கபடாது அறங்காவலர், கோவில் வளர்ச்சிக்கும், அதன் புனிதத்திற்கு பங்கம் ஏற்படும் வகையிலும் செயல்பட்டால் பொதுமக்களிடமிருந்து வரும் புகாரின் அடிப்படையில் ஆணையர் அல்லது இணை ஆணையர் நேரடியாக அழைத்து விசாரணை மேற்கொள்ளுவர் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது குறிப்பிட்ட தக்கது.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *