ஆள்வோரை கண்டித்து ஆள்வோரே மறியல்|

எங்கள் கட்சி பேனரைக் கிழித்துவிட்டார்கள் என்று சொல்லி விசிகவினர் சாலைமறியல் செய்கிறார்கள். சாலைமறியல் செய்வதற்கு எப்போதுமே போலீசில் அனுமதி கொடுக்க மாட்டார்கள். இது அனுமதி இல்லாத மறியல். மறியலை கலைக்க (அ) பாதுகாப்பு கொடுக்க போலீஸ் வருகிறது. ஏன் பாதுகாப்பு? சொல்கிறேன். அங்கே ஒரு இளைஞன், மறியல் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியேற பைக்கில் இருந்தபடியே முன்னேறுகிறான். என்ன அவசர வேலையோ! மறியலுக்கு ஆதரவு தரப்பு, அந்த இளைஞனோடு அப்போது ஏதோ பேச, பதிலுக்கு இளைஞனும் பேச, மையமாக நுழைந்த போலீசும் ஏதோ பேச… (ஏதோ அது ஏதோ என்ற ஹம்மிங்கின் பின்னால்தான் எப்போதுமே F.I.R. ன் டைமிங் ஒளிந்திருக்கும்)

அதன்பிறகு ஒரு விஷயம் நடக்கிறது. கூட்டத்தை க்ளியர் செய்யவந்த போலீஸ் அதிகாரியிடம் கையை நீட்டியும் குரலை உயர்த்தியும் பேசுகிறார் அந்த இளைஞர். பொதுவெளியில் போலீசுக்கு கொஞ்சம் சறுக்கல் போல தெரிந்தாலும் எதிர்வினை அங்கே உண்டாகி விடும். அது நடந்தது.
அந்த இளைஞனின் கன்னத்தில் ஓங்கி
ஒரு அறை விடுகிறார், போலீஸ் அதிகாரி. அதிகாரியிடம் வாங்கியதை அதே வேகத்தில் திருப்பிக் கொடுக்கிறான் அந்த இளைஞன்.
பின்னர் அங்கிருந்த மொத்தப் போலீசாரும் கும்பலாய் அந்த இளைஞனை அமுக்கிப் பிதுக்கி வாகனத்தில் திணிக்கிறார்கள்.

நடந்தது இதுதான். யார் சரி, யார் தவறு என்பதை அவரவர் ஒரு கோணத்தில் பார்த்து இந்த சம்பவத்துக்கு சொந்தக்கதை அல்லது திரைக்கதையை முடிவு செய்கிறார்கள். நடந்த விவகாரம் மொத்தமும் சமூகவலை தள பக்கங்களில், (பகிர்வுகளே லட்சத்தைக் கடந்துள்ளது.) ஏதோ லட்சிய ஓட்டம்போல நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

வழக்கம் போல பாத்ரூமில் வழுக்கி
விழுந்த (?!) அந்த இளைஞனின் கையை கைப்பைக்குள் போட்டுக்கொடுத்து நடக்க விட்டாலோ, (அ) அந்த இளைஞனுக்கு பாத்ரூம் விஷயமே சரியாக இல்லை என்றாலோ முழுப்பொறுப்பும் அறைவிட்ட அதிகாரி அன்ட் அதற்கான டைரக்டர்தான்.

இன்னும் கொஞ்சநேரத்தில் தஞ்சாவூர் போலீஸ் தரப்பில் செய்திக்குறிப்பை மீடியா உலகத்துக்கு அனுப்பி விடுவார்கள். போலீசுக்கு ‘அறை’ விட்டவரின் தற்போதைய நிலவரம் (ம) வழக்கு, கடந்த காலத்தில் அவர் யார் (!), எவ்வளவு செய்துள்ளார் (?) என்றெல்லாம் தொகுத்து அந்த செய்திக் குறிப்பு சொல்லிவிடும்…

எனக்கும் ஒரு கேள்வியும் கோணமும் இருக்கிறது. யாரை கண்டித்து (அ) எதிர்த்து விசிகவினரின் இந்த சாலைமறியல் நடந்தது? நடப்பது தவெக ஆட்சி, கூட்டணி- அமைச்சரவையில் விசிக இருக்கிறது. சொந்த ஆட்சியைக் கண்டித்தா மறியல்?

ந.பா.சேதுராமன்
(18.8.2026)

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *