கக்கூஸ் கழுவும் கூலிகளிடம் மாதம் 4K வசூல்|

மாதம் ரூபாய் 7ஆயிரம் சம்பளம். கைக்கு வருவது 3ஆயிரம் ரூபாய் மட்டும் தான். சூபர்வைசருக்கு ஆயிரம் ரூபாய் போய் விடும். 3ஆயிரம் ரூபாய், உள்ளூர் கவுன்சிலர் அல்லது சேர்மன் கைகளுக்குப் போய்விடும். அப்படிப் போனால்தான் வேலையைத் தொடர முடியும். உலக வரலாற்றில் இத்தனை % மார்ஜின் வைத்து கொள்ளையடிக்கும் நபர்களை எங்காவது பார்த்திருப்போமா?

சென்னை மாநகராட்சி கழிப்பறைகளை தினமும் மூன்றுவேளை காண்ட்ராக்ட் முறையில் சுத்தம் செய்யும் ஏழைபாழை உழைப்பை உறிஞ்சும் மகான்கள் நீடு வாழ்க.

எத்தனை காலமாக இப்படி நடக்கிறதோ தெரியவில்லை. இனிமேலாவது நிலை மாறும் என்ற நம்பிக்கையில் கதறத் தொடங்கியுள்ளனர் அப்பாவி கூலித் தொழிலாளிகள்…

பெரும்பாலும் இதுபோன்ற கழிப்பறை சுத்தம் செய்யும் பணிகளுக்கு கணவனால் கைவிடப்பட்டோர், கைம்பெண், ஆதரவே இன்றி தனித்து வாழும் பெண்கள், உறவுகள் மற்றும் பிள்ளைகளால் நட்டாற்றில் விடப்பட்ட ஆண்களையே அதிகளவு தேர்வு செய்கிறார்கள். மொத்தத்தில் இவர்களின் கதறலை காதுகொடுத்துக் கேட்க ஒருவர் கூட இருக்கக்கூடாது – விஷயம் அவ்வளவுதான். பணியில் சேர்க்க வயது பொருட்டல்ல. ஆதார் அட்டை, ரேசன் கார்டு (இருந்தால்), வாக்காளர் அடையாள அட்டை, நான்கு புகைப்படம் இதுமட்டுமே போதும். இருப்பினும் தேர்வு செய்யப்படும் இடத்துக்கு அதிகாரிகள் பார்வையில் கொண்டுபோய் நிறுத்த ஒருவர் தேவை அல்லவா, அவர்தான் உள்ளூர் அரசியலில் வட்டம், சதுரம், முக்கோணமாக இருக்கவேண்டும். இந்த டிசைனர்கள் மூலம்தான் அன்றாடங் காய்ச்சிகளின் உழைப்பை சுரண்டும் முதல்புள்ளி வைக்கப்படுகிறது.

சென்னை கிண்டியில்தான் மனிதவள மேலாண்மை (ம) பணியாளர் தொடர்பான ஒப்பந்தப் பணியாளர் நியமனம் நடக்கிறது. சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளுக்காக தற்காலிக (ம) ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு அமர்த்துவது, பணி ஒதுக்கீடு, வார்டுகள் (ம) மண்டலங்களுக்கு (Zones) ஆள்களைப் பிரித்து வேலைகளை வழங்குவதாக இதன் செயல்பாடு உள்ளது.

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுத்து அகற்றல்- கண்காணித்தல், சாலைகள், தெருக்கள், மழைநீர் வடிகால்கள் (ம) பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்தல், பணி ஒருங்கிணைப்பு என பணிகள் போகும்.

பணியாளர்களின் தினசரி வருகையைப் பதிவு செய்து, அதற்கேற்ப மாதாந்திர ஒப்பந்த ஊதியத்தை (PF, ESI பிடித்தங்கள் போக) கணக்கிட்டு வழங்குவது.
பணியாளர்க்கு தேவையான சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் (கையுறைகள், முகக்கவசங்கள்) துடப்பம் உள்ளிட்ட துப்புரவுப் பொருட்களை விநியோகிப்பது ஆகியன பணி ஒருங்கிணைப்பின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை திமுக 153, தவெக கூட்டணியில் 26 (காங்கிரஸ் 13, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 4 -வை சேர்த்து இந்தக் கணக்கு), அதிமுக 13, பாஜக 2, காலி இடங்கள் 6 என்றளவில் 194 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். மொத்தக் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 200 ஆகும்.

நாம், முக்கிய அரசியல் கட்சிகளாக பார்க்கும் எல்லா கட்சிக்குமே, மக்கள் பிரதிநிதிகள் சென்னை மாநகராட்சியில் (கவுன்சிலர்கள்) இருக்கிறார்கள்.
கருவேப்பிலை கொத்து போல அமமுகவுக்கு இருந்த ஒரே கவுன்சிலர் வி.கிரிதரன் இப்போது தவெக கவுன்சிலராக இருக்கிறார்.

விஜிலென்ஸ் பிரிவு எனப்படும் கையூட்டு தடுப்பு கண்காணிப்பு பிரிவானது என்னுடைய சொந்த அனுபவத்தில் சென்னை மாநகராட்சியில் செயல்படுவது போல் தீயாய் செயல்படும் அரசுத்துறையை நான் பார்த்தது இல்லை… அங்கே எப்படி இவைகளை கவனிக்கத் தவறினார்கள் என்ற வியப்புதான் மிஞ்சுகிறது.

“எங்க கட்சி கவுன்சிலர்களும் சேர்மன்களும் ஹமாமில் குளித்து சர்ஃப் எக்ஸ்எல்லில் வெளுத்து புடம்போட்ட தங்கமாக ஜொலிப்பவர்கள்” என்று எல்லாத் தரப்புமே நீட்டோலை தீட்டலாம். தீட்டத்தான் செய்வார்கள். ஏற்கெனவே கவுன்சிலர்களின் “அதிகப்படியான சேவை”களைப் பெற்று நாடெங்கும் மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது ஒருபக்கம். இது – அதில் ஒரு பக்கம்.

#வேறு
👇
சில மாதங்களில் உள்ளாட்சித்தேர்தல் வரவுள்ளது. ச.ம.உ/ பா.ம.உ. தேர்தல்களை விட மிகச் சிறப்பான முறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் களம் இதுவரை இருந்திருக்கிறது. அத்தனை வகையான நிதி தேவதா – செல்வ யட்சினிகளையும், புராண – இதிகாச – போர்த் தந்திரங்கள், ஆயுதங்கள் என அதுவொரு அசத்தல் திருவிழாதான்.

பெண்கள் வார்டுகளில் கணவன், மாமனார், மாமியார், அப்பா, தம்பி, அண்ணன்மார்கள்தான் இதுவரையிலும் ‘சேவை’ புரிந்து கொண்டிருக்கிறார்கள், இனிமேலும் அந்தநிலை தொடருமா தெரிய வில்லை…

ந.பா.சேதுராமன்
(15.10.2026)

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *