வந்தவாசி ’பாய்’ வந்தவாசி கோட்டை ! நினைவூட்டும் சமூக ஆர்வலர்…

வந்தவாசியின் சிறப்பான அடையாளங்களில் ஒன்றுதான், வந்தவாசி பாய். அதேபோல் ஊரின் புகழுக்கு அடையாளமாய் திகழ்வது வந்தவாசி கோட்டை. தமிழ்நாடு அரசு, இந்த அடையாளங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார், சமூக ஆர்வலரான மு.பத்மநாபன். தொகுதி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் பார்வைக்கு பெரியவர் பத்மநாபன் அனுப்பியுள்ள கடிதத்தின் சாரம் இதுதான்! “வணக்கம். மூன்றாவது கர்னாடக யுத்தம் முடிவடைந்த இடம் வந்தவாசி. இங்குதான் அந்த சரித்திரப் புகழ்பெற்ற போர் நினைவுச் சின்னங்களான கோட்டையும் அகழியும் உள்ளது.

பல நூறு ஆண்டுகள் உலக சரித்திரத்தில் இடம்பெற்ற ஊர் வந்தவாசி. தமிழ்நாடு தொல்லியல்துறை பராமரிப்பில் இருப்பதாக கூறும் கோட்டை, அகழி, கொத்தளம் தன் கடைசி நிமிட மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறது. மிச்சம் இருக்கும் இடங்களை சுத்தப்படுத்தி, வெளிச்ச மயமாக்கி சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடமாகவும், இந்த சுற்றுலா தனி திட்டத்தில் இந்த ஊரையும் இணைத்து சுற்றுலா பஸ்கள் விட வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனு அனுப்பி, ”Accepted” என பதிலும் எனக்கு வந்துள்ளது.
சட்டமன்றத்தில் துறை சார்ந்த பதிலளிப்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ”சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பிரபல சுற்றுலா இடங்களை கண்டறிந்து சுற்றுலா செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கங்களை கொண்ட சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப் பட்‌டுள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாட்டில் 300 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன “ என்று அப்போது தெரிவித்தார்.
அமைச்சர் மதிவேந்தன் குறிப்பிட்டுள்ள 300 இடங்களில் வந்தவாசியும் கண்டிப்பாக இருக்கும். எனவே நீங்களும், மாவட்ட அமைச்சர் எ. வ. வேலு அவர்களும், கொஞ்சம் முயன்றாலும் வந்தவாசி கோட்டை, கொத்தளம் மற்றும் வெண்குன்றம், தவளகிரிநாதர் மலையும் அதை சார்ந்த இடங்களும் சுற்றுலா தலமாகி விடும். காலா காலத்துக்கு உங்கள் இருவரின் பெயர்கள், சரித்திர பக்கத்தில் நீடித்து இடம்பெற செய்யும் சாதனை திட்டமாகவே அது அமைந்து விடும்.
காஞ்சிபுரம் வரும் வெளிநாட்டு, வெளிமாநில மக்கள் புகழ் பெற்ற கோயில்களை பார்த்துவிட்டு வெளியே வரும்போது அங்குள்ள கைவினைப் பொருட்கள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை வாங்கிச் செல்வது போல, அவைகள் அமோகமாக விற்பனை ஆவது போல, வந்தவாசியிலும் சூழல் நிறைவாக இருக்கிறது… ஆம், சுற்றுலா முடிந்து ஊர் திரும்பும் பயணிகள் வந்தவாசி பாய்களை வாங்கிச் செல்வர். வந்தவாசி பாய்கள் அத்தனை பிரசித்தம் என்பது நீங்கள் அறியாதது அல்ல…
வந்தவாசி பாய்கள் பெருமளவு விற்பனை ஆகும் போது, அங்கு வாழும் மக்கள் பலரின் குடிசைத் தொழில் மேம்படும். அதேவேளையில் சுற்றுலாப் பயணிகளால், வந்தவாசி கோட்டை இன்னும் மேம்படும், பாதுகாக்கப்படும். அந்த முந்நூறு பெயர் கொண்ட பட்டியலில் வந்தவாசி பெயர் உள்ளதா என தாங்கள் உறுதி செய்திடவும் – இல்லையென்றாலும் அப்பட்டியலில் வந்தவாசி பெயரை சேர்த்திடவும், காரணத்தோடு வேண்டுகிறேன்… நன்றியும், வணக்கமும்.” மு.பத்மநாபன். இவ்வாறு அந்த கடித கோரிக்கை சொல்கிறது. வந்தவாசி பாய், வந்தவாசி கோட்டை, அகழி, கொத்தளம் வெளிஉலகின் பார்வைக்கு வருவதில் நாமும் பெரியவர் மு.பத்மநாபன் போலவே மகிழ்கிறோம் – காத்திருக்கிறோம்…

-சேரான்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *