மூன்று தமிழர் இறப்புக்கு நீதி தேவை : மல்லை சத்யா கோரிக்கை|

கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் கொடூரமான முறையில் கொ*லை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து திராவிட வெற்றிக்கழகத் தலைவர் மல்லை சி.இ.சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தினத்தன்று கர்நாடக மாநிலம் சாம்ராஜ் மாவட்டம் ஹன்னூர் தாலுகா சாக்கிய வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் போலி மோதலில் சுட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது,

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நளிரவில் இந்திய சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் உரையாற்றும் போது உலகம் உறங்கிக் கொண்டு இருக்கும் போது இந்திய விழித்துக் கொண்டது என்று பேசினார்.

ஆனால் கர்நாடக வனத்துறை ஆகஸ்ட் 15 விடிந்தும் விடியாத அதிகாலை மான் வேட்டையாட வந்தார்கள் என்று அந்தோணிசாமி (50) ஜான் ரோஸ் பீட்டர் (42) குமார் (33) மகிமைதாஸ் (48) ஆகிய நால்வர் மீதும் எச்சரிக்கை செய்யாமல் சுட்டு மூன்று தமிழர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்து உள்ளது கர்நாடக வனத்துறை,

மான் வேட்டைக்கு தடைவிதிக்கப் பட்டுள்ள நாட்டில் மனித வேட்டை நடத்த அனுமதி வழங்கியது யார்? குற்றம் செய்தவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் தன்னிச்சையாக தண்டனை வழங்குவதன் மூலம் ஜனநாயக விழுமியங்களை காலில் போட்டு மிதித்து இருக்கிறது கர்நாடகா வனத்துறை. அங்கு என்ன இராணுவ ஆட்சியா நடக்கிறது ?

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தினத்தன்று இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு வீரர்களும் பகையை மறந்து இனிப்பு கொடுத்து உறவைப் புதுப்பித்து கொண்டு இருக்கும் நிலையில் இந்திய நாட்டின் குடிமகனை அந்நாட்டின் சுதந்திர தினத்தன்று பாதுகாப்புத்துறை சுட்டு படுகொலை செய்து இருப்பதை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும்

சம்மந்தப்பட்ட வனத்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தருவதோடு, இறந்த குடும்பத்தினருக்கு நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுப்பதை, கர்நாடக அரசு உறுதிப் படுத்த வேண்டும். இதை உயர்நீதிமன்றம் கண்காணித்து உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.

இதில் ஆறுதலான செய்தி 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் வழும் பகுதி கர்நாடக மாநிலத்தில் இணைக்கப் பட்டது. கன்னடர்களும் தமிழர்களும் வேறுபாடு கருதாமல் அநீதிக்கு எதிராக இணைந்து அண்ணல் அம்பேத்கர் சதுக்கத்தில் போராட்டம் நடத்தி வருவது வரவேற்கதக்கது,

கர்நாடக மாநில வனத்துறையால் ஈவு இரக்கமின்றி சுட்டு படுகொலை செய்யப் பட்டுள்ள மூன்று தமிழர்களின் குடும்பத்திற்கு திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” -இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நாள் :16/08/2026

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *