கொசத்தலை ஆற்றில் தடுப்பணை – கோரிக்கை |

நீர்நிலைகள் பராமரிப்பு, விவசாயிகளின் தமிழக வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து ஆரணி – கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணை கட்டுவதற்கு தவெக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகும். கொசஸ்தலை ஆறு வட ஆற்காட்டை நீர்பிடிப்புப் பகுதியாக கொண்ட இதன் மொத்த நீளம் 136 கி.மீ ஆகும். சென்னை நகருக்குள் 16 கி.மீ. ஓடும் இந்த ஆறு ஆந்திரத்தின் கிருஷ்ணா புரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து திருவள்ளூர், சென்னை வழியாக ஓடி எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது. தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூர் அருகே சீமாபுரம் அணைக்கட்டு மூலம் பாசனத்திற்கு பயன்படுகிறது. இதன் நீர்பிடிப்புப் பகுதி 3,757 சதுர கிலோ மீட்டர், ஆற்றுப்படுகையின் அகலம் 150 முதல் 250 மீட்டர்வரை ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு வினாடிக்கு 1.25,000 கன அடி, சராசரி கொள்ளளவு 1,10,000 கன அடியாகும், இதேபோன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காரணித் மலைப் பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை அடைந்து அதன் வழியாக பழவேற்காடு பகுதியில் வங்கக்கடல் சென்று அடைகிறது. ஆரணி ஆற்றின் மொத்த நீளம், 114.8 கி.மீ. ஆகும், ஆற்றின் கரைப்பகுதியில் 4,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப் படுகிறது. கொசஸ்தலை ஆற்றில் 2 தடுப்பணைகள். ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம், பாலீஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தலா 5,000 கன அடி தண்ணீர் மட்டுமே சேகரிக்க முடியும், இந்த ஆறுகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் பெய்யும் வடகிழக்கு பருவ மழையின் அளவைப் பொறுத்து 12 முதல் 20 டிஎம்சி தண்ணீர் வரை வீணாகச் சென்று கடலில் கலக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, பல்வேறு ஊராட்சிகள் முதல் பொன்னேரி நகராட்சி வரை குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றும் கழிவு நீர், குப்பை கழிவுகள் கொண்டுவந்து கொட்டுவதால் குப்பை மேடுகள் அனைத்தும் குன்றுகள் போல் காட்சியளிக்கிறது. சீமை கருவேலை மரங்கள் முளைத்து சிறுவனம் போல் தென்படுகிறது. நீர் வரத்து துணைக் கால்வாய்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், நீரோட்டம் தடைப்பட்டு ஊருக்குள் பெருவெள்ளம் பாயும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து திமுக – அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியின் போது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் ஆற்றின் பரப்பளவு குறைந்து அதன் இயற்கை பொலிவை இழந்து அலங்கோலமாக காட்சியளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள். தண்ணீருக்காக தமிழகம் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில், தமிழக அரசு ஆரணி – கொசஸ்தலை ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் – 2026-2027 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் முழு பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்டு, அதன்பின் 6 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து ஆரணி – கொசஸ்தலை ஆறுகளில் போதிய தடுப்பணைகள் கட்டவும், 100 அடிக்கு ஒரு போர்வெல் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காகவும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.

இதன் மூலம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய நான்கு மாவட்டத்தின் குடிநீர் தேவை பெரும் அளவில் பூர்த்தி செய்ய முடியும், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால், தவெக அரசு வேளாண் பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆரணி – கொசஸ்தலை ஆற்றில் போதிய தடுப்பணைகளை கட்டி நீர் மேலாண்மையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ‘மக்கள் தொலைக்காட்சி’ யில், ‘தேவைகள் சேவைகள்’ நிகழ்ச்சி வாயிலாகவும், செய்திகள் மூலமாகவும் மண் பயன்பெற வேண்டி தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு ஆறுகளிலும், 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பனையும், 100 அடிக்கு ஒரு போர்வெல் அமைத்தும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி நீர் மேலாண்மையை பாதுகாக்கவும், அதன் மூலம் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், மக்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய இந்த ஆக்கபூர்வ நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த திமுக-அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியின் போது ‘மக்கள் தொலைக்காட்சி’ வலியுறுத்தியது. மக்கள் தொலைக்காட்சியின் தொடர் முயற்சியால் பழவேற்காடு-லேட்டஸ்ட் குப்பம் இடையே அப்பகுதி மீனவர்களின் நலன் வேண்டி 2006 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது. அவரது அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் காட்டுப்பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருந்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்த போது மக்கள் தொலைக்காட்சியின் செய்தி குழு பழவேற்காடு மேம்பால பணிகள் முடங்கி கிடப்பது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், அதன் பின் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு திமுக ஆட்சியிலேயே திறந்து வைக்கப்பட்டதும் பெருமைக்குரிய ஒன்றாகும்.


அதே போன்று கடந்த ஜூலை 17ஆம் தேதி பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட, பஞ்சட்டி பகுதியில் காட்டுப்பள்ளி முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரை சுமார் 133 கிமீ தூரம், 2,468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்த தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் கவனத்திற்கு மக்கள் தொலைக்காட்சி சார்பில், “ஆரணி-கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கான அவசியம்” குறித்து எடுத்துரைத்ததும் அதனை கவனத்துடன் கேட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும் என அப்போது தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆக்கத்துடன் செயல்படுத்தினால் வரலாற்று சாதனைகளில் ஒன்றாக போற்றப்படும்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *