இரண்டு லாரிகளில் வந்த 60 மோட்டார் பைக்குகள்|

முதல் படத்தில் இருப்பவர் மணிகண்டன். ஊரு விட்டு ஊரு மோட்டார் சைக்கிள்கள் லாரிகளில் வருவதற்குக் காரணமான இவர் பார்த்து வந்தது பட்டாலியன் போலீஸ் வேலை. பகுதிநேரமாக செய்து வந்தது மோட்டார் சைக்கிள்களை மொத்தமாக திருடுவது. அடுத்தடுத்த படங்களில் உள்ளவர்கள் கூட்டாளிகள். பட்டாலியன் போலீசு மணிகண்டனோடு கைகோத்து கைவரிசை காட்டிய பைக்குகள் எல்லாமே அதிகபட்சம் 500 கி.மீ. வரை மட்டுமே சாலையில் உருண்டவை என்கிறது விசாரணை ஏரியா. அதுகுறித்து தனி விசாரணை போகிறதாம்.

காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவிலான புதிய இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடப்பட்டு வந்தது தொடர்பாக, வாகன உரிமையாளர்கள் திருப்பெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரத்பாபு (40) மற்றும் விமல்குமார் (31) என்பவர்களைப் பிடித்து விசாரணைக்குப்பின் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. திருப்பெரும்புதூரில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.7,000- முதல் ரூ.10 ஆயிரம் வரை வரை விற்று பணம் பெற்றதாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் வேலைபார்த்துக் கொண்டே கணியம்பாடி மேற்குளத்தை சேர்ந்த தமிழ்நாடு பட்டாலியன் காவலர் மணிகண்டன் (32) உதவி செய்ததாகவும், வரும் பணத்தில் மூவரும் பங்கிட்டு கொண்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை வேலூரிலிருந்து 2 லாரிகள் மூலம் கொண்டு வந்த போலீசார், காவலர் மணிகண்டன் உள்பட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு வாகனங்களை விற்பனை செய்வதில் காவலரே உதவி புரிந்தது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

பன்ச் -பாலா

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *