
சென்னையில் சமையல் எரிவாயுவை தொடர்ந்து, வாகனங்களுக்கு நிரப்பப்படும் எல்.பி.ஜி. எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்; தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது.
ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கச் செய்துள்ளது. இதனால் சமையல் எரிவாயு உருளையின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதோடு, கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பொதுப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, வர்த்தக எரிவாயு உருளை விநியோகத்தை; 90% நிறுத்தியுள்ளது.

உணவகங்கள், தேநீர் கடைகள் பெருமளவில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கான முன்பதிவு, 25 நாட்கள் முன்னதாக பதிவு செய்ய, பெட்ரோலிய நிறுவனங்கள் நாள் நீட்டிப்பு செய்துள்ளதால்; வீட்டு உபயோக சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சென்னை- புறநகர் பகுதிகளில், பெட்ரோல் நடுவங்கள்- வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி எரிவாயு முனையங்களில், தானிகளுக்கு நிரப்பப்படும் எரி வாயுவை; நேற்று பொதுமக்கள் 1100 முதல் 1200 ரூபாய் வரை கொடுத்து நீண்ட வரிசையில் நின்று; சமையல் எரிவாயு உருளையில் நிரப்பிச் சென்றனர். வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி., எரி வாயுவுக்கு இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை (ம) புறநகர் பகுதிகளான, பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எரிவாயு நிரப்ப முடியாமல், தானிகள் ஆங்காங்கே சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்.பி.ஜி. எரிவாயு மூலம் இயக்கப்படும் தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் – டீசல் போன்ற அன்றாட வாகனப்பயன்பாடு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி, பொதுமக்கள் எரிபொருளை கூடுதலாய் வாங்கிப் போனதால், பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளது. நேற்று முதலே சில மாவட்டங்களில் ஓட்டல்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகிற நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்முத்து

