
தூங்கும்போது கூட ‘கேமரா- மைக்’ நினைப்பில் இருக்கும் அளவுக்கு பிஸியாக 2025- ஆம் ஆண்டு இருந்தது.
ஐநூறு வீடியோக்களுக்கு குறையாமல் இந்த ஒரே ஆண்டில் பேச முடிந்தது.
திரைக்கதை விவாதங்கள், Script தயாரிப்பு, இணையத்தில் எழுதுவது, திரைத்துறை இயக்குநர்களுடனான பயணங்கள் போன்றன, மிக பழைய நினைவுகளாகி விட்ட நிலையில்; 2025 அதை புதுப்பித்துக் கொடுத்திருக்கிறது.
கொரோனா உச்சத்தில் இருந்த (2019-21) காலகட்டம்தான் வலையொளிகளின் அணுக்கம் பலருக்கு உண்டானது. வடசென்னை இடதுசாரி தோழர்களின் அன்பால் என்னுடைய வலையொளி நேர்காணல், (2019) அப்போதுதான் நிகழ்ந்தது. ஆண்டுகளில் ஒன்றும் இல்லை, கிடைக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொள்வதில்தானே வாழ்க்கை இருக்கிறது; கொரோனா காலகட்டத்தை விட வேறு நல்லாசிரியன் இருக்க முடியுமா என்ன? அந்த வகையில் எல்லா ஆண்டுமே நல்லாண்டுதான்.
வலையொளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட Script களில் என் பெயர் 2015-ஆம் ஆண்டு முதலே இடம் பிடித்திருந்தாலும், எங்கேயும் முகம் காட்டவில்லை. 2019-ல் தோழர்களுக்காக பேசிய ஒரு வீடியோவோடு நிறுத்திக் கொண்டேன்.
இரண்டாண்டு இடைவெளியில் பேரன்பு நண்பர், சீனியர் ஜர்னலிஸ்ட் திரு. டி.வி.சோமு அழைப்பில் (2021) ஒருமுறை பேசி விட்டு ஒதுங்கிக் கொண்டேன்.
நியூஸ் ஜெ. தொலைக்காட்சி நிருபரான கவிஞர் திரு. இரா. ஆனந்த், அன்பழைப்பில் (2023-) ஒரு முறையும், சக தோழனான சீனியர் ஜர்னலிஸ்ட் திரு. பா.ஏகலைவன் அன்பில் (2023) இரண்டு முறையும் என முகம் காட்டினேன்.
2024-ஆம் ஆண்டின் முடிவில் சீனியர் ஜர்னலிஸ்ட் திரு. கி.கார்த்திகேயன் அழைத்தார். பத்திரிகையாளர் திரு. ஜோ.ஸ்டாலின் வாயிலாக, ‘விகடன்’ குழுமத்தில் இணைய 2014-ல் எனக்கான வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்தவரின் அழைப்பு, 2024-ஆம் ஆண்டின் இறுதியில் மீண்டும் வந்தது.
“ஒரு க்ரைம் ஜர்னலிஸ்ட்டின் டைரித் தொடர்” என்று ‘புரமோ’ கொடுத்து, “இனி-நீங்கள் பேசியே ஆகவேண்டும்” என்ற கட்டளையும் பிறப்பித்து விட்டார்; மறுக்கவோ, ஒதுக்கவோ முடியாத அத்தகைய அழைப்பு அது; அத்தகைய உத்தரவு அது.
அந்தவகையில் ‘தமிழ்நாடு நவ்’ வலையொளியில், 2024- ல் நான்கைந்து வீடியோக்கள் பேசினேன். 2025-ல் அந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் என்று பெரிய பட்டியலானது.
தமிழ்நாடு நவ் கொடுத்த அந்த ‘புகழ்ஒளி’, ஐம்பதுக்கும் மேற்பட்ட வலையொளி குழுமங்களில் பேசும் வாய்ப்பை உருவாக்கியது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னை தேடிப்பிடித்து வாய்ப்பளித்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி.
“சேதுவுக்கு ‘ஏதாவது’ (?) செய்தே ஆகணும்” என்று வார்த்தையை மட்டுமே ஆண்டாண்டு காலமாய் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி.
ந.பா.சேதுராமன்
