பதவி உயர்வு – இடமாற்றம்| பட்டியலில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள்|

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்ஸன் தேவாசிர்வாதம், கூடுதல் டிஜிபிகளாக இருக்கும் சந்தீப் மிட்டல் (சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி), பாலநாகதேவி (பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி) ஆகியோர் சில நாள்களில் டிஜிபிக்கான தகுதி பெறுகின்றனர்.

அதேபோல், போலீஸ் ஐ.ஜி தகுதியில் இருக்கும் 7 நபர்கள், கூடுதல் டிஜிபிகளாகவும், டி.ஐ.ஜி. தகுதியில் இருக்கும் 3 நபர்கள், ஐ.ஜி.களாகவும் பதவி உயர்வு தகுதி பெற்றுள்ளனர்.

சூப்பிரண்டு தகுதி (எஸ்.பி. Dcp) யில் இருக்கும் 17 நபர்கள், டி.ஐ.ஜி. க்கான பதவி உயர்வு தகுதி பெறுகிறார்கள்.

பதவி உயர்வு வழங்குவது தொடர்பான பட்டியல், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு, டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பதவி உயர்வுகளுடன் தேர்தல் கால இடமாற்றங்களும், அதே காலகட்டத்தில் (2026 ஜனவரி முதல்வாரம்) அதிரடியாய் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான இடமாற்ற கோப்புகளும் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமன் வாயிலாக முதலமைச்சர் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு முற்றுப்பெறாமல் இருப்பதாக தெரிகிறது.

சிபிசிஐடி போலீஸ் ஐ.ஜி. டி.எஸ். அன்பு, தெற்கு மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, தீபக் எம்.தாமோர் (சிபிஐ பணி), மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார், சிபிசிஐடி ஐ.ஜி. அனிஷா ஹுசைன், நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி. நஜ்மல் ஹோதா, ஐ.ஜி. மகேந்திர குமார் ரத்தோடு ஆகிய 7 ஐ.ஜி.க்கள்; இந்த காலகட்டத்தில் கூடுதல் டிஜிபிகளாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.

அதேபோன்று மத்திய அரசு பணியில் உள்ள டி.ஐ.ஜி.கள் ரம்யா பாரதி, பொன்னி, சோனல் மிஸ்ரா ஆகிய மூவரும் ஐ.ஜி. க்கான தகுதி பெறுகின்றனர். மத்திய அரசு பணியில் உள்ள ஜார்ஜி ஜார்ஜ், கலைச்செல்வன், அருண் சக்திகுமார், அரவிந்த் மேனன் ஆகியோரும்; தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள சஷாங் சசாய், தேஷ்முக் சேகர் சஞ்சய், டாக்டர் தீப கணிகர், ஓம் பிரகாஷ் மீனா ஆகிய நேரடி ஐ.பி.எஸ். (RR) அதிகாரிகளும்; தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். (TPS) அதிகாரிகளான மணிவண்ணன், அருளரசு, மகேஸ்வரன், சரவணன், டாக்டர் சாமிநாதன், ராஜசேகரன், ஜெயலட்சுமி, சிவகுமார், ஈஸ்வரன் உள்ளிட்ட 17 போலீஸ் எஸ்.பி.கள் டி.ஐ.ஜி.களாகவும்; பதவி உயர்வு பெறுகின்றனர். தமிழ்நாடு காவல்துறை வரலாறில் 17 போலீஸ் எஸ்.பி.களுக்கு டி.ஐ.ஜி. தகுதிநிலை மொத்தமாகக் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

இவர்கள் தவிர, மத்திய அரசுப்பணியில் உள்ள கண்ணாம்பாள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி. சாம்சன் உள்ளிட்ட சில அதிகாரிகள் சீனியர் எஸ்.பி. (செலக்சன் கிரேடு) அந்தஸ்து பெறுகிறார்கள்.

2025 -டிசம்பர் முதல் வாரத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் (பேனல் கமிட்டி) கூட்டம் நடத்தப்பட்டு பதவி உயர்வு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்படும். அதன் பின்னர், முறைப்படி டிஜிபி அலுவலகத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் அதிகாரிகளுக்கான புதிய பதவிகள் வழங்க, பேனல் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு, புதிய பதவி இறுதி செய்யப்படும்.

2026 மே மாதம் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதால், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும், எஸ்.பி. முதல் கூடுதல் டிஜிபி வரையிலான சட்டம் ஒழுங்குப்பிரிவு (ம) உளவுத்துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளை; தேர்தல் ஆணையம் கணக்கெடுத்து உறுதியாக இடமாற்றம் செய்யும்.
இதற்கு முன்பாக தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை அமைச்சர்கள்,
மாவட்டச் செயலாளர்கள், விருப்பத்திற்கேற்ற இடங்களில் நியமிக்க ஏற்கனவே; ஆளும்கட்சி மேலிடம் பரிந்துரைத்த, அதிகாரிகளுக்கான பதவி இடங்கள் குறித்தும்; இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பதவி வழங்கப்படும் என்ற தகவலும் உள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் மண்டல ஐஜிக்கள் பணியிடங்களும், சரக டிஐஜிகளுக்கான பணியிடங்களும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் நியமித்தால்; ஆளுங்கட்சிக்கு நல்ல ‘பலன்’ இருக்கும் என்பது எப்போதுமே நடக்கிற ஒரு விஷயம்தான்.
மூன்றாண்டுகள் வரை ஒரே இடத்தில் பணியாற்றுகிறார்கள் என்ற காரணஞ்சொல்லி, இடமாற்றப் பரிந்துரைக்கு எதிர்க்கட்சிகள் போகாது; என்பதும் இதன் பின்னணி சூத்திரமாகப் பார்க்கப் படுகிறது.

பெருநகர போலீஸ் கமிஷனர்கள், உளவுத்துறை உயர் அதிகாரிகள், இந்த மாற்றங்களின் மூலம் இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஆட்சி அமைந்ததும், யார் – யாருக்கு எந்தப் பதவி, எந்த ஊருக்கு போஸ்டிங், எந்தத் துறைக்கு நியமனம் என்பது வரை ஆளுங்கட்சியும், ஆளுங்கட்சிக்கான இருக்கையைப் பிடிக்கக் காத்திருக்கும் எதிர்க்கட்சியும்; முழுநீள வண்ணப்படம் எடுக்கும் அளவுக்கு பட்டியலை எப்போதோ தயாரித்து வைத்திருக்கும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமல்ல, அமைச்சுப்பணி கிளார்க்குகள், பல்வேறு துறை ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் வரை; “தேர்தலுக்குப் பின்” என்கிற எல்லைக்கோட்டை எப்போதோ வரைந்து வைத்திருப்பார்கள்…

எத்தனை ஆட்சிகள் தொடர்ந்தாலும், மாறினாலும், பெரும்பாலான அரசுப்பணி ஊழியர்களின் செயல்பாடுகள், எப்போதுமே மக்களுக்கு எதிரான ஓட்டத்தில்தான் இருக்கிறது. அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பே அதற்கு சாட்சியம் சொல்லும்…

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *