
இருப்பது ஒரு மாம்பழம் – நேற்றுவரை அது, ஆதிசிவன்- அம்மையப்பன் கைகளில் இருந்தது. இப்போது பழம், மகனார் கைகளில் இருக்கிறது.
பழம் இருக்குமிடமே ஒட்டுமொத்த சான்றாவணமும் இருக்கும் இடம் என்று தீர்ப்பு சொல்கிறது தேர்தல் ஆணையம். ஆணையம் சொல்லே இறுதி ஆணைச்சொல் என்ற போதும், “பீகார் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சொல்லி, பழத்தை- அதாவது மாம்பழச்சின்னத்தை; மோசடியாகப் பெற்று விட்டார், மகனார்” என்று அம்மையப்பன் தரப்பில், புகார்கள் வரிசை கட்டின. அம்மையப்பன் தரப்பில், புகார்களை மட்டுமே அடுக்க முடிந்தது, மகனார் தரப்புக்கு அதனால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை என்றே தெரிகிறது.
இந்த இடத்தில், மருத்துவர் அன்புமணி ராமதாஸையும், நடிகர் விஜயையும், இணைத்துப் பார்க்கும்படியான
ஒரு ஒற்றுமையைச் சொல்லவேண்டும்.

“அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அது என்னை கட்டுப்படுத்தாது” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நாள்களிலேயே தனிக்கட்சி கண்டவர், நடிகர் விஜய். அப்படி ஆரம்பிக்கப்பட்ட, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அந்தக் கட்சியில் அப்பா, எஸ்.ஏ. சந்திரசேகரே இல்லை.
இந்தப் பக்கம், மருத்துவர் இராமதாஸ் உருவாக்கி, மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்ற கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி. (பா.ம.க.) 1989-ஆம் ஆண்டில் தொடங்கி, முதல் தேர்தலில் யானை சின்னத்திலும், 1990- களில் இருந்து மாம்பழம் சின்னத்தோடும், இருந்த கட்சி.
தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டங்களின்படி, இப்போது கட்சியும், சின்னமும், கட்சியைத் தொடங்கிய நிறுவனர்- தலைவர் மருத்துவர் இராமதாஸிடம் இல்லை; அவருடைய மகனும், மேனாள் மத்திய அமைச்சருமான, அன்புமணி இராமதாஸ் கைகளுக்கு அது போய்விட்டது.

அன்புமணி ராமதாஸ், கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சியின் (பா.ம.க.) தலைமையகம் சென்னை பனையூரில் இருக்கிறது. விஜய் நடத்தும் த.வெ.க. வுக்கும் தலைமையகம் பனையூர்தான். இருவருமே திமுக எதிர்ப்பில் தீவிரமாக இருப்பவர்கள். இருவரின் தந்தையருமே திமுகவோடு மோதாமல் மென்மையை கடைபிடிக்கிறவர்கள்.
விஜய்யின் தந்தையிடம் இப்போதைக்கு கட்சி ஏதும் இல்லை. தேர்தலில் போட்டியிடுவாரா, என்பதும் அத்தனை உறுதியாய்த் தெரியவில்லை; தனக்கான ஆதரவாளர்கள் லிஸ்ட்டை மகனிடம் நீட்டி, த.வெ.க.வில் சீட் கேட்பாரா என்றும் உறுதியாய் சொல்ல முடியவில்லை.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சின்னம் கைவிட்டுப் போயுள்ள நிலையில், தேர்தல் கூட்டணிக்குள் நுழைந்தாலும் சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பில்லை. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி சொல்லும் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். சின்னம் கையில் இல்லாததால், டபுள் டிஜிட்டில் சீட்டுகள் கிடைக்க எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில்தான் முடியும். அதே வேளையில் சின்னம், கைகளில் இருப்பதால், அதிகாரப்பூர்வ (பா.ம.க.) கட்சி வேட்பாளர்களாக தனியாகவோ; கூட்டணி அமைத்தோ; தேர்தல் களம் காண, அன்புமணி ராமதாசுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
தொடக்கங்களில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது வைத்த குற்றச்சாட்டுகள், அவர்மீது அனுதாபத்தையும், மகனார் மீது கோபத்தையும் உண்டு பண்ணின. நாட்கள் போகப்போக, அத்தகு குற்றச்சாட்டுகளை, ‘விளையாட்டுச் செய்திகள்’ போல வாசித்து விட்டு பொதுவான மக்கள் கடந்து போயினர். கட்சியினர் மட்டுமே அந்தவகை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
“அன்புமணியின் அரசியல் வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது, வயிறு எரிந்து இதை சொல்கிறேன்” – என்று 29.11.2025 ஆம்தேதி, வடலூரில் நடந்த பொதுக்குழுவில்கூட, மருத்துவர் ராமதாஸ் கோபத்தோடு பேசியிருக்கிறார். அத்தோடு நிறுத்தவில்லை, “தேர்தல் ஆணையத்தை விலை கொடுத்து அன்புமணி வாங்கிவிட்டார்” என்றதோடு, அன்புமணியை டாக்டருக்குப் படிக்க வைத்ததுதான் நான் செய்த பெரும் பிழை” என்றெல்லாம் சொல்லியிருக்கிறார், மருத்துவர்.
முன்னதாக கட்சியின் சீனியரும், மருத்துவர் ராமதாசின் நிழல் எனப்படுபவருமான ஜி.கே.மணி, தலைநகர் டெல்லியில் அளித்த பேட்டியில்,
“அன்புமணியோடு சேர்ந்து தேர்தல் ஆணையமும் மோசடி செய்துள்ளது.
அன்புமணி தரப்பு போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்து, கட்சியைத் திருடிவிட்டது. மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக. போலி ஆவணங்களை ஒப்படைத்த அன்புமணி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களோடு சேர்ந்து மோசடி செய்த தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
“பா.ம.க. பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தும், கட்சியின் நிறுவனர், மருத்துவர் ராமதாசிடம்தான் உள்ளது” என்று பா.ம.க. செயல்தலைவர் ஸ்ரீகாந்தியும் அதேபோல், முன்னரே தெரிவித்திருந்தார்.
“அன்புமணியை வேண்டுமானால் தனிக்கட்சி ஆரம்பித்து செயல்படச் சொல்லுங்கள்” என்று மருத்துவர் ராமதாஸ் சொல்லத் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே; “அய்யா பா.ம.க.” என்ற பெயரிலான புது கட்சிக்கான டிசைனை ரெடி செய்து சோஷியல் மீடியாவில் தெறிக்க விட்டு, புது ஆட்டத்தை தொடங்கி விட்டனர், அன்புமணி ஆதரவாளர்கள். இப்படி மோதல்கள் பல்வேறு வடிவெடுத்து சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது, முடிவுக்கான சுவடுதான் இன்னும் தெரியவில்லை.
ந.பா.சேதுராமன்

