தமிழ்நாடு 2026 – களேபர களநிலவரம்!

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக இருந்த முதிர்ச்சியான அரசியல்வாதி செங்கோட்டையன், தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் இருந்த செங்கோட்டையனை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் கட்சியை விட்டு நீக்கியதோடு அவர் ஆதரவாளர்களின் பொறுப்பையும் இதே ஆண்டுதான் எடப்பாடி பழனிசாமி பறித்து ஓரங்கட்டினார். வி.என்.சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவர் அணியோடு நட்பு பாராட்டும் யாரையும் ஏற்கமுடியாது என்பது எடப்பாடி நிலைப்பாடு. அதை அப்படியே டி.ஜெயகுமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, உதயகுமார், சி.வி.சண்முகம் வரிசை சீனியர்கள் கடைபிடித்து வந்தாலும்; செங்கோட்டையனின் அணுகுமுறை மட்டும் தாமரை மீதான தண்ணீர் போல ஆரம்பம் முதலே தனியாகத் தெரிந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கட்சியை விட்டு நீக்கியதும் நடைபெற்ற தேவர்குருபூஜை விழாவில் மேலே குறிப்பிட்ட மூவரில், சசிகலா தவிர்த்து தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோருடன் இணைந்து, “எடப்பாடியை ஒன்றுபட்டு எதிர்ப்போம்; அதிமுகவை கைப்பற்றுவோம்” என சூளுரைத்தார் செங்கோட்டையன். “அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு மிக்க மகிழ்ச்சி” என்று நீக்கியது குறித்து கருத்து சொன்ன செங்கோட்டையன்; சில நாள்களிலேயே, “என்னை நீக்கமுடியாது, பொதுக்குழுவை கூட்டி எடுக்கவேண்டிய முடிவை தன்னிச்சையாக எடப்பாடி மேற்கொண்டது செல்லாது” என்று புது கிளையை பிடித்துக்கொள்ள, எடப்பாடி தரப்பு இதை பெரிதாகவோ, சிறிதாகவோ, பொருட்படுத்தவில்லை. பாஜக, தவெக, அதிமுக என்ற மூவர் அணியை ஒருங்கிணைப்பதா, அல்லது பாஜக அல்லாத தவெக மற்றும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதா என்ற முயற்சியில் மட்டும் அதிமுக தரப்பு வேகம் காட்டியது; அதுவே இன்றைய (26.11.2025) தேதிவரை போய்க் கொண்டிருக்கிறது. இதுபோக, இன்னொரு பக்கம், அதிமுகவை மீட்கும் தொண்டர்கள் குழுவை நிர்வகித்து வரும் மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “டிசம்பர் 15 ஆம் தேதிவரை எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் கொடுக்கிறோம். திருந்தி, வருந்தி அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டுபோனால் நல்லது; இல்லையென்றால் எடப்பாடிக்கு பாடம் கற்பிக்கப்படும்; அவர் திருத்தப் படுவார்” என்று வழக்கம் போல தெரிவித்துள்ளார். எப்போதும் போல இப்போதும், ஓ.பி.எஸ். வார்த்தையை கிடப்பில் போட்டு விட்டு; எடப்பாடி தரப்பில் எதிர்வினை ஆற்றாமல் போய்க்கொண்டு இருக்கிறார்கள். சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து, எத்தனை சீனியர்கள் வெளியே போனாலும், அது கட்சியைப் பெரிதாய் பாதிப்பது போல தெரிய வில்லை. எடப்பாடி மன நிலையைப் பொறுத்தே, எதிர் வினையாற்றும் அளவுக்குத்தான் ஒட்டு மொத்த கட்சியும் நிலையாய் நிற்கிறது; எடப்பாடிக்கு இதுதான் பெரிய பிளஸ் ஆகவும் போகிறது.

டி.டி.வி. தினகரனைப் பொறுத்தவரை, அவருடைய அமமுக தொண்டர்கள் சோர்ந்துவிடாதவாறு, நம்பிக்கையூட்டும் விதமாக; அறிக்கையிலோ; பேட்டிகளிலோ பேசி வருகிறார். சசிகலாவை கணக்கில் கொண்டால், அவருடைய ஜெயா, ஜெயா பிளஸ் தொலைக்காட்சி செய்திகளில், “அஇஅதிமுக பொதுச்செயலாளர், புரட்சித்தாய் சின்னம்மாவின் நேர்காணல்களின் தொகுப்பு” என்று தினமும் ஒருமணிநேரம் லைவ் ஷோ நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படி அதிமுகவின் பெரும்பகுதி நான்கைந்து பிரிவுகளாகப் போய்க் கொண்டிருக்க; தமிழ்நாட்டில் வலுவாகக் காலூன்றும் பொருட்டு; பாஜக மாநிலம் முழுவதும் பல்வேறு அணிகள், பிரிவுகளை உருவாக்கிக்கொண்டு; மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தனக்கான கருத்தியலோடு ஒன்றிப்போகும் பிற கட்சிகளின் தொண்டர்களை அரவணைத்து, தங்களோடு நெருங்க வைக்கும் அளவுக்கு பாஜகவின் அரசியல், தமிழ்நாட்டில் இருக்கிறது. அதன் அடுத்த படிநிலைதான், தவெக என்ற கட்சியை, தங்களுக்கான தோழமை கட்சியாகப் பொதுத்தளத்தில் உருவகப்படுத்தி வைத்துள்ளதும். அப்படியான சூழலை தவெக நிறுவனர் நடிகர் விஜய், மறுதலித்தாலும், தொண்டர்கள் எண்ணவோட்டம் பாஜகவுடனான நட்பையும், அரவணைப்பையும் விரும்புவது; பொது வெளியில் பட்டவர்த்தனமாக தெரிவதை எப்போதும் போல மறுக்கலாமே ஒழிய; வெறுத்தொதுக்க வாய்ப்பில்லை. கள யதார்த்தம் அதுவே.

தங்களுக்கான அரசியல் எதிரி அதிமுக மட்டுமே என்ற தீர்க்கமான பார்வையோடுதான், கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக அரசியல் இருக்கிறது. புதிய எதிரியாக வேறொரு இயக்கம் தமிழ்நாட்டில் காலூன்றிட எந்த வாய்ப்பும் கொடுத்துவிடக்கூடாது என்பதில்தான் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவோ திமுகவை வீழ்த்த, பொது எதிரியாக திமுக யாரை கருதுகிறதோ; அவர்களோடு கைகோத்து, களம் காணும் அளவுக்கு வேகம்காட்டி வருகிறது. “பாஜகவுடன் கடந்த காலங்களில் திமுக கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் பங்கேற்கவில்லையா?” என்ற, ‘பழைய’ கேள்வி ஒன்றை வழித்துணையாக அதிமுக வைத்திருந்தால் சரி; பாஜக, தவெக உள்ளிட்ட திமுக எதிரணியில் உள்ள அத்தனை பேரிடமும் அதே ஒற்றைக் கேள்விதான் எப்போதும் இருக்கிறது. அதற்கான பதிலளிப்பை திமுக நூறு முறை சொன்னாலும், அந்த ஒற்றைக் கேள்விதான் எப்போதும் தமிழ்நாட்டை சுற்றிச்சுற்றி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், அதிமுகவை பலவீனப்படுத்த திமுகவுக்கு தாவுகிறார். சமஉ பொறுப்பிலிருந்தும் விலகுகிறார். அடுத்ததாக செங்கோட்டையன் சமஉ பொறுப்பிலிருந்து விலகுகிறார். ஏதோ ஒரு கட்சியில் சேருவதாக இருந்தால் மட்டுமே சமஉ தகுதியானது, கேள்விக்கு உள்ளாகும் என்ற நிலையில், செங்கோட்டையன் விலகலும்; அடுத்த கட்சிக்கு போவதற்கான ஏற்பாடுதான் என புரிந்துகொள்ள முடிகிறது. “எங்களோடுதான் செங்கோட்டையன் வருவார்” என்று தவெக தரப்பும், இல்லையில்லை; அவர் பயணம் எங்களோடுதான் என்று திமுக தரப்பும் வெளிப்படையாகவே காத்திருப்பது போலத்தான் சூழல் இருக்கிறது. செங்கோட்டையனோ, தவெகவுக்கும் ஒரு கும்பிடு, திமுகவுக்கும் ஒரு கும்பிடு என்பது போல இரண்டுபக்கமும் பாஸிட்டிவ் புன்னகையை பரிசாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் தவிர பாமக (2), தேமுதிக போன்ற எந்த அணி என்று உறுதிப் படுத்தப்படாத சில கட்சிகளை காட்சிப் படுத்தியும், தமிழ்நாட்டு அரசியல் நகர்வு இருக்கிறது. மொத்தத்தில், பாஜகவுடன் அதிமுக சேர்ந்து தமிழ்நாட்டில் பாஜக வலுவாகி விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் திமுகவின் நகர்வு இருக்கிறது. திமுகவின் நகர்வை அடித்து பொடிப்பொடியாக்கும் முனைப்போடு, தவெகவும், அதிமுகவும்; பாஜகவை நோக்கி நாற்பதுகால் பாய்ச்சலில் இருக்கிறது. அதே வேளையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி இருப்பில் 2021-ல் இருந்ததைவிட பலமாக பிணைந்திருப்பதும் திமுகவுக்கு பெரிய பலத்தை கொடுத்துள்ளது. தவெக- பாஜக, அதிமுக- தவெக, பாஜக-அதிமுக, இப்படி சொக்கட்டான் உருட்டல்களை எப்படி உருட்டிக் கவிழ்த்து நிமிர்த்திப் பார்த்தாலும் அதில் நிலையாக ஒரு பலகீனத்தன்மை இருப்பதை ஒதுக்கி விட்டு கடந்து போக வாய்ப்பில்லை.

இருக்கட்டும், இன்னும் சில வாரங்கள் பொறுத்துப் பார்ப்போம்…

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *