‘பவாரியா’ கொள்ளையர் |வழக்கும்- தீர்ப்பும்|

பவாரியா கொள்ளையர்கள் என்ற புது வடிவத்தை கண்டுபிடித்ததோடு, குற்றவாளிகளுக்கான தண்டனையை பார்க்கும் வரை விடாது பின்தொடர்ந்த போலீஸ் அதிகாரி எஸ்.ஆர்.ஜான்கிட். ஜனவரி 9, 2005, அதிகாலை 2.45 மணி. திருவள்ளூர் மாவட்டம், தானாகுளம் கிராமம் ரத்த அலறலுடன் விடிந்தது. கும்மிடிப்பூண்டி தொகுதியின் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவின் எம்.எல்.ஏ. சுதர்சனத்தை யாரோ சுட்டுக் கொலை செய்து நகை- பணத்தை கொள்ளையடித்துப் போயிருந்ததே ரத்த அலறலின் பின்னணி. தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் பெரிதும் விவாதிக்கப்படுகிற ஒன்றாக அந்தக் கொலைச்சம்பவம் அமைந்து விட்டது. இன்றைய பணி ஓய்வு போலீஸ் டி.ஜி.பி.யும், அன்றைய போலீஸ் ஐ.ஜி. யுமான ஜான்கிட் தலைமையில், ஐந்து தனிப்படைகளை அமைத்து அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவிட்டதோடு, அவசியம் இருப்பின், அதிகபட்ச பலப் பிரயோகத்தை கைக்கொண்டாவது; (சுட்டுப் பிடித்தாவது) குற்றவாளிகளை பிடித்துவிட வலியுறுத்தியிருந்தார். அன்றைய தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. அலெக்ஸாண்டர், வழிநடத்தினார். ஒவ்வொரு தனிப்படைக்கும் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை தேடிப்பிடிக்கும் வேகத்தோடு போலீஸ் டீம் களத்தில் இறங்கியது. தமிழ்நாடு முழுவதுமாய் உள்ள கொடுங் குற்றவாளிகளின் கைரேகையை ஆய்வு செய்ததோடு, தென்மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில குற்றப்பின்னணி ஆட்களின் கைரேகை தரவுகளைப் பெற்றும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. சுதர்சனம் கொலை செய்யப்பட்டிருந்த விதமும், அதேபோன்று கொடூரமான முறையில் தமிழ்நாட்டில் கொள்ளை- கொலை (Murder for gain) சம்பவங்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரிக்கத் தொடங்கினர்.

1996 -ஆம் ஆண்டு வேலூரில் மருத்துவர் மோகன்குமார் கொலை, 2002-ஆம் ஆண்டு சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன், உதவியாளர் கோபால் (இரட்டைக் கொலை) கொலை, சென்னை அருகே திருப்பெரும்புதூர் பகுதியில் திமுக பிரமுகர் கஜேந்திரன் மீது நகை பணத்துக்காக நடத்தப்பட்ட கொடூர தாக்குதல், கொள்ளையை தடுக்க முயன்ற பள்ளிமாணவி கொடூரகொலை, தர்மபுரி- அவிநாசி பகுதிகளில் கொடூர தாக்குதலை நடத்திவிட்டு நடந்த கொள்ளை என ஏராள சம்பவங்கள்… அவற்றில் ஒன்றில் கூட. குற்றவாளிகள் பிடிபடவில்லை என்பதும், சுதர்சனம் கொலைவழக்கின் விசாரணை அதிகாரியான ஜான்கிட் கைகளில் கோப்புகளாய் இருந்தது. அதே நேரம், தென்மாநில குற்றப்பின்னணி ஆட்களின் ரேகைப்பதிவுகளில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால்; ராஜஸ்தான், அரியானா, பீகார், உ.பி. ம.பி., என்று தமிழ்நாட்டுப் போலீசார் வடநாட்டுப் பக்கம் திரும்பினர். அப்போதுதான் ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் (ஆக்ரா)சிறைவாசி ஒருவனின் கைரேகை, கொலை- கொள்ளை சம்பவ ரேகைகளோடு பொருந்தியது. ஆளை கொத்தாகப் பிடித்த போலீசார், விசாரணையை இறுக்கினர். வடமாவட்ட பழங்குடி மக்களில் ஒரு பிரிவாக கருதப்படும் ‘பவாரியா’ மக்களில் சிலர்; இப்படி குழு அமைத்து கொலை – கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததும்; தலைவன்- தலைவி, பாதுகாவலர், வழிகாட்டி, திட்டம் வகுப்போன் என அவர்கள், ஆளுக்கு ஒரு பொறுப்பேற்று சம்பவங்களை செய்து வந்ததும் ஒன்றொன்றாக தெரியவந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 63 கொள்ளை, 13 கொலைகள் இவர்களின் கணக்கில்; அதாவது ‘பவாரியா’ கும்பல் கணக்கில் இருப்பதாக போலீஸ் முடிவுக்கு வந்தது. சம்பவ இடத்தில் கிடைத்த துப்பாக்கிக் குண்டுகள், ஷூ தடயங்கள் போன்றன தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதை போலீசார் உறுதிப் படுத்தியதும் வழக்கின் போக்கை வழி நடத்திக்கொடுத்தது எனலாம்.

உத்தரபிரதேசம் மீரட்டில் (2006 மார்ச்) வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட சுரா பவரியா, விஜய் பவரியா ஆகியோரை பிடிக்க போலீசார் முயன்ற போது ஏற்பட்ட இருதரப்பு துப்பாக்கி மோதலில் சுரா -விஜய் சுட்டுக் கொல்லப் பட்டனர். எஞ்சிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்குப் பதிந்து நீதி மன்றத்தில் நேர்நிறுத்தப் பட்ட 13 நபர்களில் நால்வருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 9 நபர்கள் பிணையில் வெளியே வந்தனர். தூக்குத்தண்டனை பெற்ற நால்வரும் மேல்முறையீடு மூலம் ஆயுள் தண்டனையாக அதை குறைத்துப் பெற்றனர். இதற்கிடையில் வேலூர் சிறைவாசியாய் இருந்த பவாரியா கொள்ளைக் கூட்டத் தலைவன் ஓமா பவாரியா சிறையிலேயே உடல்நலக் குறைவால் இறந்தான். 2005- 2025 காலகட்ட வழக்கில் 24.11.2025 அன்று சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆபிரகாம்லிங்கன், பவாரியா கொள்ளையர்கள் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையோடு அபராதம் தலா 10 ஆயிரம் ரூபாய் விதித்தும், ஜெயில்தார் சிங் என்பவரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார்.

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *