குற்றவாளியை தேட 12 நாட்களா? பொதுமக்கள் போராட்டம்|

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10வயது சிறுமி கடந்த 10 நாளுக்கு முன்பு பள்ளி முடிந்து அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற போது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க 5 தனிப் படைகள் அமைத்தும் துப்பு கிடைக்காமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியில் (சிசிடிவி) பதிவான குற்றவாளியின் புகைப்படத்தோடு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் குற்றவாளி குறித்த தகவல் அறிந்தோர் தெரிவிக்கும்படி விளம்பர துண்டுப் பிரசுரங்களை காவல்துறையினர் வெளியிட்டனர். காவல்துறையின் தொடர்பு கைபேசி எண்களும் அதில் கொடுக்கப் பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி குற்றவாளியை கைது செய்ய பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடி உள்ளனர். நம்பகமான தகவலுடன் குற்றவாளி குறித்து தகவல் அளிக்கும் நபருக்கு 5 லட்ச ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் எனவும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்து 12 நாட்கள் ஆகியும் குற்றவாளியை இதுவரை காவல் துறையினர் கைது செய்யாததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக பாமகவினர், கட்சியின் பொருளாளர் திலகபாமா தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்க கோரியும், பாலியல் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமகவினர் ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் பெண்கள் காவல் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதால் போராட்டக் காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாமகவின் இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பாமக மாவட்ட செயலாளர்கள் வி.எம்.பிரகாஷ், இரா. சிவப்பிரகாசம், பாலயோகி, மாவட்டத் தலைவர் சு.வை.ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொகுப்பு:பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *