எங்க கிராமத்துக்கு பள்ளியும் அங்கன்வாடி மையமும் வேணும்…

புதிதாக பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம் முன்னெடுக்க, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தனர்.

அதன்பின்னர், உடனடியாக புது கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறிய நிலையில் போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே, அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தர கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். அதை சொன்னபடி நிறைவேற்றித்தர பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் பள்ளிக்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அதிகாரிகள் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துவிட்டு பழைய ஓடுகளை அகற்றி எடுத்துச் சென்று விட்டனர். இந்நிலையில் தரைக் கொட்டகை அமைக்க சிமெண்ட் கூரை ஓடுகளை அதிகாரிகள் கொண்டுவந்து உள்ளனர். அதைக் கண்ட ஊர் பொது மக்கள், அதனை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்தும் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வராததால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கும் அருகே உள்ள அங்கன்வாடிக்கும் குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், “இதுவரை கட்டிடம் அமைத்துத் தரக்கேட்டு எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை” என்று கூறவே; நான்கு முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதையும், “மேற்கொண்டு எதற்கு நாங்கள் தனியாக. இன்னொருமனு அளிக்க வேண்டும்” என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பினர்.

ஆட்சியர் மற்றும் அமைச்சர் அவர்களிடம் இது பற்றி நேரடியாக எடுத்து கூறி இன்னொரு மனுவை நீங்கள் அளிக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் அப்போது கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், “பிறகு எதற்காக கிராம சபை கூட்டம் என்ற ஒன்றை நடத்தி அதில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்” என்று கேள்வி எழுப்பவே அதிர்ந்து போன அதிகாரிகள், உடனடியாக கட்டிடம் கட்டித்தருவதாக சொல்லிச் சென்றனர். பின்னர், அங்கு பேச்சுவார்த்தை நடத்த சப்-கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை வரச் சொல்லி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுவரை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்வேலன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *