அங்கன்வாடியில் வேலை ரெடி! மோசடி நபர்கள் கைது- கார், பணம் பறிமுதல்…

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய அங்கன்வாடி பணியாளர் வேலை வழங்குவதாக பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் 115 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. இதில், 23 அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, இப்பணியிடத்தை நிரப்ப திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின் பேரில், மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆத்துப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இரண்டு பேர் வந்து தங்கி இருந்தனர். அவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு மனு செய்தவர்களை தொடர்பு கொண்டு தனியார் ஓட்டலுக்கு உடனடியாக வாருங்கள், வேலை வேண்டுமானால் ரூ.5 லட்சம் இன்று மாலைக்குள் தந்தால் உங்களது பெயரில் நியமன ஆணை கிடைக்க உரிய ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினார்களாம். இந்தச் சம்பவம் காட்டுத் தீயாக பரவியது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப்புக்கும் இது குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது உத்தரவின் பேரில் மாவட்ட திட்ட அலுவலர் லலிதா, எல்லாபுரம் அங்கன்வாடி மைய ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி ஆகியோர் தலைமையில் போலீசாரும், அதிகாரிகளும் அந்த தனியார் ஓட்டலை சுற்றி வளைத்தனர். வேலை வழங்குவதாக கூறிய இரண்டு நபர்களையும் அவர்களிடமிருந்து ரொக்கப் பணம் ரூ.3,64,500, விலை உயர்ந்த செல்போன்கள், அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து பெரியபாளையம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் ஸ்டீபன்(45) திருத்தணி அருகே உள்ள நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், புவனேஸ்வரி(42) கடம்பத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அங்கன்வாடி பணியாளர் பணிக்கு மனு செய்தவர்கள் பெயர், விபரம் உள்ளிட்டவைகளை ஸ்டீபன் மற்றும் புவனேஸ்வரிக்கு வழங்கியது யார்? இதில்,சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகள் யார்? யார்? என்பது உள்ளிட்ட விபரங்களை பெற பல்வேறு கோணங்களில் பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குற்றவாளிகள் இருவரையும் ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் எல்லாபுரம் ஒன்றியத்தில்லமட்டுமல்ல, திருவள்ளூர் மாவட்டத்திலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சரவணன்கதிர்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *