
வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்,

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு நிகராக பக்தர்களால் கொண்டாடப்படும் இங்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை ஒட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி அர்ச்சனை செய்து பக்தியுடன் முருகப் பெருமானை வழிபட்டார். மேலும் பரிவார தெய்வங்களையும் அவர் வணங்கி வழிபட்டார். அப்போது அர்ச்சகர்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினர். சுமார் 30 நிமிட வழிபாடு முடிந்த பின்னர் ஆளுநர் ஆர்.என். ரவி கோவிலிலிருந்து புறப்பட்டு சென்றார். ஆளுநரின் வருகையை முன்னிட்டு சிறுவாபுரியில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆளுநர் வந்து செல்லும் வரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
முன்னதாக விசாக விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை பக்தியுடன் வழிபட்டனர்.
பொன்.கோ.முத்து

