சென்னை: பூர்வ குடிமக்களின் வாழ்விட போராட்டம்…

மீனவ மக்களை சென்னையின் பூர்வகுடி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உலகின் மூத்த பூர்வகுடி மக்களே மீனவர்கள்தான். இப்படி பழமையுடன் உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட மீனவ மக்கள், கடலோர வாழ்விடத்தை விட்டகன்று; கடல்மட்டம் பார்வையில் படாத தொலைதூரத்துக்கு அனுப்பி வைக்கப்படும் சூழலை உருவாக்கும் வித்தையை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆட்சியாளர்கள் சிறப்பாகவே கடைபிடிக்கின்றனர். மாநிலமோ, ஒன்றியமோ, மாநிலக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ எந்தக் கட்சியும் நூறுசதவீதம் மீனவர்களின் குரலை உள்வாங்கிக் கொண்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“நீண்டகால குடியிருப்புத் திட்டத்துக்கான கோரிக்கைகளை மக்கள் விரிவாக்கம் (ம) கடலோர இயற்கை பேரழிவுகளை கருத்தில் கொண்டு, மீனவர்களுக்கான நீண்டகால குடியிருப்பு திட்டங்கள் CRZ சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட வேண்டும்”. என்பதே மீனவ மக்களின் நிலைப்பாடு. ‘இந்த நிலைப்பாடே சரியான தீர்வும் கூட’ – என்று எடுத்துச் சொல்லும் மீனவர்கள், “எமது இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு, தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எங்களின் நீண்ட கால குடியிருப்பு திட்டத்திற்கான உகந்த இடத்தை அடையாளம் காட்டி கோரிக்கை விடுத்த நிலையில், அந்த இடத்திற்கு அரசு வேலி போட்டுள்ளது. வேலியை அகற்றிட கோருவதோடு மேலும் இரண்டு முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்து போராட்டத்தில் இறங்க உள்ளோம். சென்னை முள்ளிக் குப்பம் சீனிவாசபுரம் முதல் நொச்சிக் குப்பம் வரை உள்ள மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துகிறோம்.” என்று சுற்றறிக்கை அனுப்பியதோடு செய்தியாளர்களிடமும் மீனவ கிராம மக்கள் இன்று (28.02.2025) தெரிவித்த நிலையில் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி தரமறுத்து விட்டனர்.

முள்ளிக்குப்பம் சீனிவாசபுரம் (ம) முள்ளிமா நகர் மீனவர் பஞ்சாயத்து சார்பில் மீனவமக்களை ஒன்றிணைத்து முள்ளிக்குப்பம் ப்பி. சேகர், முள்ளிமா நகர் ஆர்.மதன் உள்ளிட்டோர் செய்திருந்த போராட்ட ஏற்பாடு, போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தற்காலிகமாக சிறிய பிரேக் அடித்து நிற்கிறது என்பதே களநிலவரம்.

அரசு அச்சுறுத்தலையும் அடக்கு முறை சூழலையும் தாண்டிய மீனவர்களின் வாழ்வியல் போராட்டத்தை மிக நெருக்கமாக அறிந்துணர்ந்த பத்திரிகையாளர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். மூத்த பத்திரிகையாளர் திரு.டி.எஸ்.எஸ்.மணி அவர்களில் முக்கியமானவர். மீனவர் போராட்டக் களங்களிலும் அவர்களுக்கான தீர்வை கண்டெடுக்க முனைப்பு காட்டுவதிலும் தொடர்ந்து இயங்கி வருகிறவர்.

மீனவர்கள் பாதுகாப்பு குறித்தான போராட்டங்களை திரு. கயல் கு.பாரதி தொடர்ந்து முன்னெடுப்பது போலவே அது குறித்த செய்திகளை மட்டுமே அதிகமாய் பேசியும் பரப்பியும் செயல்படும் பத்திரிகையாளர் திரு. எம்.வி.ராஜதுரையையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். இவர்கள் போலவே கடல் தரவுகளாகவே தொடர்ந்து பேசியும் இயங்கியும் வருபவர், ‘ராயபுரம்’ கோமல்நித்யா.

உங்களோடும் உங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான தீர்வை முன்னிறுத்தி நிற்கும் போராட்ட வடிவத்தோடும் மெட்ராஸ்குரல் இணையதளம் இணைந்தே பயணிக்கும். வாழ்த்துகள்.

ந.பா.சேதுராமன்

கோரிக்கையும் போராட்டமும்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *