விகடன் இணையதளம் முடக்கமும், எதிர்வினையும்!

நூற்றாண்டை கொண்டாடும் விகடனுக்கு ஒன்றிய அரசின் நினைவுப் பரிசாக அதன் இணையதளம் முடக்கப் பட்டிருக்கிறது. காரணமும் காரியமும் என்ன?

அமெரிக்க நாட்டு சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை, கைவிலங்கு பூட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. தொடர்ந்து அப்படி அனுப்புவது நிகழ்ந்து வருகிறது. இதைத்தான் விகடன் கேலிச்சித்திரம் வரைந்தது.

மக்கள் குரலே மகேசன் குரல் என்பார்கள். மகேசன் குரல் என்பதை மன்னர்- மக்களை ஆளுவோர் என்பது என்னுடைய புரிதல். அதன்படி இந்திய நாட்டு மக்களுக்கு விலங்கிட்டு இன்னொரு நாடு அனுப்பி வைக்கிறது என்றால் அதைக்கண்டும் காணாதது போல் கடந்து செல்லும் மன்னர், மகேசர், ஆள்வோர் யாவரும் குற்றவாளிகளே. இதைத்தான் ஹாசிப்கான் கார்ட்டூன் சித்திரமாய் தீட்டியிருக்கிறது. விகடனின் பிராண்ட் அம்பாசிடர் என்று மதிக்கப் படும் திரு. ஹாசிப்கான், கேலிச்சித்திரம் வாயிலாக ஒரு செய்தியை நாட்டுக்கு சொல்லியிருக்கிறார். கேட்பதும் கேளாமல் கடப்பதும்தான் ஜனநாயக நாட்டின் அளவுகோல். சித்திரம் வெளியான இணையதளத்தை முடக்குவது ஜனநாயகம் அல்ல. முன்பொரு முறை வெளிநாட்டில் வைத்து இந்தியப் பிரதமரை சற்றே சீண்டிப் பார்க்கும் வகையிலான சூழ்நிலை வெளிப்பட்டபோது இந்திய அளவிலான அத்தனை ஊடகங்களும் ஊடகத்துறை வல்லுநர்களும் யூடியூபர்களும் கொந்தளித்து எழுந்ததை ஓரணியில் நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது. சிலர் நினைவுக்கு வரவில்லையெனில் இணையத்தில் தேடிப்பாருங்கள்.

விகடன் போன்ற ஊடக நிறுவனங்கள் இதுபோன்ற முடக்கங்களை இதுவரை எதிர் கொண்டது இல்லை. இதுவொரு புதிய அனுபவம்தான். “புகார் அளித்தல், விளக்கம் கேட்டல், வழக்குத்தொடுத்தல், நீதிமன்ற வாயிலாக இறுதி தீர்ப்பை எதிர்கொண்டு அதற்கேற்ப நடத்தல்” இதுதான் சரியான அணுகுமுறை. முற்றாக முடக்கி வைத்துவிட்டு ‘உங்களை ஏன் முடக்கக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பியிருப்பது விந்தை. அடுத்தகட்டமாக புகார், வழக்கு என்று தலைகீழ் தர்மம் கடைபிடிக்கப்படுமோ தெரியவில்லை.

வாசக எழுத்தாளர் படுதலம் சுகுமாரனின் கருத்தை உள் வாங்கி விகடனில் வந்திருந்த கேலிச்சித்திரம் ஆட்சியிலிருந்த அதிமுகவை கொதிப்பில் தள்ளவே சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் உத்தரவை பிறப்பித்தார். “தமிழ்நாடு சட்டப்பேரவை நடக்கும் உள்ளரங்கில் குற்றவாளி கூண்டு அமைத்து பொதுமன்னிப்பு கேட்டும் அவை நடவடிக்கை முடியும் வரை அங்கேயே ஒருநாள் இருந்தும் தண்டனையை ஏற்கவேண்டும்” என்றது அந்த உத்தரவு. விகடன் ஆசிரியர் நினைவில் வாழும் எஸ். பாலசுப்பிரமணியன், சபாநாயகர் தீர்ப்புக்கு உடன்பட மறுத்து நீதிமன்றம் போனார். நீதிமன்றம், ‘குற்றமற்றவர் விகடனார்’ என்றது. தண்டத்தொகை என நினைவுப்பரிசாக ஏதேனும் தேவை என்றார், விகடனார். தேவையை சொல்லுங்கள் என்றது நீதிமன்றம். ஆயிரம் ரூபாய் போதும் என்றார். ஆகட்டும் என்றது நீதிமன்றம். அதை ஆவனப்படுத்தியது தமிழ்நாடு அரசு. மீண்டும் விகடனாருக்கு அப்படி ஒரு பரிசு கிடைக்கும் வாய்ப்பு, இந்த விவகாரத்தில் அதிகம்.

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *