சென்னை புறநகர் சோழிங்கநல்லூர் அதிமுக சார்பில், அதிமுகவின் 52-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கந்தன் சாவடியில் நடைபெற்றது.
அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் சென்னை மாநகராட்சி அதிமுக குழு தலைவருமான கே.பி.கே. சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். பகுதிச் செயலாளர்கள் ஜி.எம்.ஜானகிராமன், வி.குமார், டி.சி.கருணா, எம்.கே. பழனிவேல் வரவேற்புரை ஆற்றினர்.
கூட்டத்தின் ஹைலைட், அதிமுகவின் இணை கொ.ப.செ.வான, நடிகை விந்தியா பேச்சுதான்.
அண்ணாமலை படத்தில் வில்லன் ராதாரவியிடம், “நியாயக் கணக்கு, மனக்கணக்கு, தப்புக்கணக்கு, ஆண்டவன் கணக்கு” குறித்து ஹீரோ ரஜினிகாந்த் வரிசையாக அடுக்குவார். அந்த வகை அடுக்காக, “ஓபிஎஸ் கணக்கு, அண்ணாமலை கணக்கு, ஸ்டாலின் கணக்கு, கனிமொழி கணக்கு, எடப்பாடி கணக்கு” என்று அடுக்கு மொழியில் அடுக்கியவர், அடுத்தடுத்து வீசியது சிக்ஸர்களே.
திருவிளையாடல் சினிமாவில் வரும் சிவபெருமான் -தருமி காட்சியை மையப்படுத்தி ஒவ்வொரு மந்திரியும் ஏற்றிருக்கும் துறைகளை அப்படியே ‘உல்டா’ வாக்கி வஞ்சப் புகழ்ச்சியாய் வெளுத்தே விட்டார். சினிமா உலகில் இருந்து வந்ததில் இப்படிப்பட்ட ரசனை பேச்சாளர்கள் மிகவும் குறைவு. விந்தியா அந்த இடத்தை நிரப்பி விட்டார்.
பிரீத்தி எஸ்.