
திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி- கோலூர் கிராம ஏரி நீரை நம்பியே, அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர்.
மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை பாசனத்திற்கும் கால்நடைகள் பராமரிப்பிற்கும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சுமார், 192 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி, முறையான தூர்வாரி பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக, கோலூர் கிராம விவசாயிகள் போராடி வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனுக்கள் பலமுறை அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.


ஏரி பாசன விவசாயிகளின் கோரிக்கைகளை தூக்கி திண்ணையில் வைத்து விட்டு, ஏரியில் மணல் குவாரியை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியே விட்டது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து ஏற்கனவே கடந்த வாரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ஏரியில் மண் அள்ளுவதற்காக மண் குவாரி ஊழியர்கள் வந்திருப்பதை அறிந்த விவசாயிகள் ஒன்று திரண்டு மண் அள்ளும் இயந்திரத்தை சிறை பிடித்தனர். மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் போராட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

“விவசாயிகளின் வாழ்வாதாரம் அழித்து மணல் மாபியாக்களுக்கு அரசு துணை போவது ஏன்?” என கேள்வி எழுப்பிய விவசாயிகள், “சவுடு மணல் குவாரி என்ற பெயரில் ஏரியில் மணல் அள்ளினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இங்கிருந்து ஒருபிடி மண்ணைக்கூட அள்ளிச்செல்ல விட மாட்டோம்” என திட்டவட்டமாக தெரிவித்தனர். விவசாய மக்களின் உறுதிப்பாட்டால், வந்தவர்கள், மண் அள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சேரான்

