
உருண்டு புரண்டு கத்தி கதறியழுது தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ஆள் இல்லை செந்தில்பாலாஜி. திடமானவர். அமலாக்கத்துறை சோதனைக்குப் பின் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதுதான் கதறி அழுகிறார். அவமானம், அச்சுறுத்தல் காரணமான அழுகையாக ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி கதறுவதை பார்க்க முடியாது. தாங்கிக் கொள்ள முடியாதபடி உடலில் கடுமையான வலி, வேதனையின் வெளிப்பாடே அது. “செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருக்கிறார், இன்னும் நினைவு திரும்பவில்லை” என்கிறார் அமைச்சர் சேகர்பாபு. “எதையும் சந்திக்கத் தயார், நாங்கள் ‘மிசா’ வையே சந்தித்தவர்கள்” என்று திமுக தொண்டர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.
ஆழ்வார்பேட்டை இல்லத்தில் அவசர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். மந்திரிகள், எம்.பி.கள், சட்டவல்லுநர்கள் என பலர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தலைமைச் செயலக கோட்டையில் துணை ராணுவ துணையுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் நுழைந்து அமலாக்கத்துறையினர் நேற்று (13.06.2023) சோதனையில் ஈடுபட்ட போதே முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்தக் கட்ட ஆலோசனையை மேற்கொண்டிருக்க வேண்டும்! அமைச்சர் செந்தில்பாலாஜியின் வாழூரான (சொந்த ஊர் ?) கரூரில் பதினைந்து நாட்களுக்கு முன்னர் தொடங்கிய அமலாக்கத்துறையின் சோதனை, செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம் மற்றும் உறவுகளின் வீடுகள் அலுவலகங்களில் என நீண்டு நீண்டு பின்னர் சில நாள்கள் ஓய்வின் பின்னே மீண்டும் சோதனையை தொடங்கியது. அந்த சோதனையின் முடிவில்தான் கோட்டையில் சோதனை, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என அடுத்த கட்டத்துக்கு விவகாரம் போயுள்ளது. அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இப்போது அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

நள்ளிரவு கைதுகளை எதிர்கொள்வது திமுக வுக்கு புதிதல்ல என்றபோதும், திமுக மந்திரி செந்தில் பாலாஜியின் கைது என்பது அவசரக் கைதாக மட்டும் என் பார்வைக்குத் தெரியவில்லை. அரசியல் அழுத்தம், உச்சபட்ச அதிகார நெருக்குதல் போன்றவைகளை உணர முடிகிறது. அப்படியான உணர்தலுக்கு திமுக VS பாஜகவின் மோதல் போக்கு துணைசெய்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டத்தின் முன்னால் நிறுத்தப் படவேகூடாத மனிதர் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியை விசாரிக்க சிசிபி எனப்படும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து முடிவெடுக்கவும் கோர்ட் உத்தரவில் இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க இருந்த உயர்நீதிமன்றத் தடையை விலக்கி உச்சநீதிமன்றம் எப்போது ஆர்டர் (2023-மே-16) போட்டதோ, அப்போதே எல்லாம் முடிந்து விட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சராக அதிமுக ஆட்சிகாலத்தில் (2013) செந்தில் பாலாஜி இருந்த போது பல்வேறு முறைகேடுகள் தொடர்பான (குறிப்பாய் ஓட்டுநர்-நடத்துநர் பணி நியமனம்) நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது அதன் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார். துணை ராணுவப்படை போலீசார், மருத்துவமனையில் செந்தில்பாலாஜி சிகிச்சை பெறும் அறைக்கு முன் பாதுகாப்பில் நிற்கிற அளவுக்கு எல்லாம் தயார்நிலையில் இருக்கிறது. ஓரிரு நாட்கள் செந்தில் பாலாஜிக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். ஓய்வுக்குப் பின், அதாவது மருத்துவ அறிக்கை கைக்கு வந்தபின் அடுத்தக்கட்ட விசாரணை நகர்வுக்கு அமலாக்கத்துறை போய்விடும். கைது நடவடிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படக்கூடும். “சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படிதான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமலாக்கத் துறை, தெளிவுபடுத்தியுள்ளது. அதே வேளையில் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு மத்திய பாஜக அரசே பின்னணி என்று எதிர்க்கட்சிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹருல்லா ஆகியோர் இதுகுறித்து தொடர்ந்து பேசியும் அறிக்கைகள் மூலம் எதிர்ப்பையும் காலையிலிருந்தே தெரிவித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது அப்பட்டமான மனித உரிமை மீறல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்த அவர் கருத்து : “அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிகாரிகளை ஏவியவர்களின் குரூரசிந்தனை இதில்வெளிப்படுகிறது. என்ன வழக்கோ அதை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார், எதிர் கொள்வார். திமுகவும் அதை சட்டப்படி எதிர்கொள்ளும். ஒன்றிய பாஜக அரசின் இதுபோன்ற மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பாஜக அரசின் முறையற்ற போக்கையும், தனக்கு கீழேயுள்ள விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, அது நடந்துகொள்ளும் விதத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக செந்தில் பாலாஜி பலமுறை உறுதி அளித்த பின்னும் இவ்வளவு மோசமான முறையில் துன்புறுத்தி செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது அவசியமற்றது”- என்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கையின் போது குறிப்பாய் அவர் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகக் கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு முறையீடு செய்துள்ளார். அந்தமனு உடனடி விசாரணைக்கு ஏற்கப் பட்டுள்ளது. அதேபோல் திமுக சட்டத்துறையின் வழக்கறிஞர்கள் ஐம்பதுபேர் குழுவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அமலாக்கத்துறை செயல்பாடுகளை கண்டித்து உச்சநீதி மன்றம் பலமுறை கண்டித்தும் எச்சரித்தும் சுட்டிக்காட்டியுள்ளது. செந்தில்பாலாஜி விவகாரத்தில் அது போல் மீண்டும் ஒருமுறை அமலாக்கத் துறை குட்டு வாங்குமா அல்லது அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் சரியே என்று தட்டிக்கொடுக்கப் படுமா என்று போகபோகத்தான் தெரியும்…
ந.பா.சேதுராமன்

