சதங்கை பூஜை வசூல்|கதறும் பெற்றோர்|

ஏழை குழந்தைகளுக்கு பரதமே எட்டாக்கனி – இதில் லட்சங்களில் குருதட்சணை பிடுங்கும் அவலத்தை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பரதநாட்டியத்தை ஒரு பிள்ளை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தப் பிள்ளை அரங்கேற்றம் வரை வருவதுமே எட்டாக்கனி என்கிற வேளையில்; அரங்கேற்றம் செய்வதற்கு முன்னும் பின்னுமாக ‘குருதட்சணை’ என்ற பெயரில் நடக்கும் வசூல்வேட்டை தற்போது அதிகமாகி உள்ளதாக கிடைக்கிற தகவல்கள் அதிர்ச்சியை கொடுக்கிறது.

குறிப்பாக சென்னை வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், போரூர் போன்ற ‘கோலிவுட்’ சுற்றுப்புற ஏரியாக்களில் இதுபோன்ற, ‘தரமான’
நாட்டிய குருகுலங்களின் எண்ணிக்கை அதிகம்.

பரதநாட்டியம் கற்க மாதக் கட்டணம் வாங்குவது வரை சரிதான். கலையை போதிக்கவோ அந்த உழைப்புக்கோ உண்டான கூலி – ஊக்கத்தொகை
என்று அதை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆடை, சதங்கை, அலங்காரம் என அடுத்தகட்ட நடவடிக்கையாக சிறப்பான ‘காம்போ’ வசூலை பல குருகுல ஆசான்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பயிற்சிக்கு மாதக் கட்டணம் வாங்குவது போக, தனியாக குருதட்சணையும் சிறப்பான முறையில் வசூலித்துக் கொள்ளப்படுகிறது. திருமணவீட்டு “சீர்” போல பட்டியலைப் போட்டே வசூல் நடக்கிறது. இதையெல்லாம் அரசாங்கம் உறுதிபட கண்காணித்தே ஆகவேண்டும்.

இப்படிப்பட்ட வசூல் ஆசான்கள், அரசு உயர் பொறுப்புகளில், ஆட்சியதிகார பின்புலங்களில் இருப்போருக்கு வேண்டப் பட்டவர்களாக இருக்கிறார்கள் – அதனால்தான் இதுபோன்ற அநியாயச் செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றுதான் கருதவேண்டியுள்ளது..

சலங்கை பூஜைக்கு பெற்றோருடன் மாணவர்கள் வர வேண்டும் என்றால், ‘குருதட்சணை’யை நிகழ்ச்சிக்கு முன் தினமே ரெடி செய்து பரத ‘ஆசான்’ கைகளுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று இன்னொரு பொருள் உள்ளதாம்.

பணக்கட்டுகள் போக, குருதட்சனையில் தங்கம் உண்டென்றால், (பரத ஆசான்கள் கோரிக்கைகளில் தங்கம் உண்டு மக்களே) 916 கேரட் தங்கம் மட்டும்தான் குரு தட்சனையாக ஏற்கப்படுமாம்.
அப்படி வாங்கப்படும் நகைகளும் குறிப்பிட்ட பாரம்பரிய நகைக்கடைகளில் மட்டும்தான் வாங்கித் தரவேண்டுமாம்.

பரதக்கலையில் மாணவர்கள் முழுமையாக தேறிட ஆறுமுதல் ஏழு ஆண்டுகள் வரை பிடிக்கும். இந்த காலகட்டங்களில் மாதாமாதம் பயிற்சிக் கட்டணமும் பெற்றுக் கொண்டு அரங்கேற்றத்துக்கு முன்னதாக நடக்கும் சலங்கை பூஜைகளுக்கும் வசூல் வேட்டை நடத்துவது ‘கலைதர்ம’ த்தின் கீழ் அடங்குகிறதோ ?

தமிழ்நாடு அரசின் இயல் – இசை – நாடகமன்றத் தலைமைகளும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையும், மத்திய அரசின் கலை – கலாச்சாரத் துறையும் இப்படிப்பட்ட “கலைக்கோயில் ஆசான் (?!)” கள் குறித்து இனிமேலும் உரிய கவனம் செலுத்தாவிட்டால் யாருக்கு பாதிப்பு என்பதை சீர்தூக்கிப் பார்க்க உங்களிடமே விட்டு விடுகிறேன்.

நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலை குடும்பத்து பெற்றோர்கள், “அரசுக்கு புகார்களை அனுப்பி அனுப்பி சோர்ந்து போய் நிற்கிறோம்” என்று கதறுவது ஏன் யார் காதுகளிலும் விழ வில்லை?

சலங்கை பூஜை, நிகழ்ச்சி அரங்கம், ஆர்க்கெஸ்ட்ரா, ஒலி -ஒளி ஏற்பாடு, ஆடையலங்காரம் போன்றவற்றுக்கான செலவுகளில் பங்கீட்டுத்தொகை, குருதட்சணையாக, ஒரு கிராம் தங்ககாசு என்று தொடங்கி தற்போது அது ஐந்து பவுனில் வந்து நிற்கிறது.

இதுபோக தட்சணைத் தட்டில் ரொக்கம் ரூ.15,000, புடவைக்கு ரூ.5,000, பரதக்கலை அமைப்பின் கட்டிட வளர்ச்சி நிதியாக ஒரு தொகை என்று நீளமாக ஒரு பட்டியல் தருகிறார்கள். நிகழ்ச்சியிலிருந்து பாதியில் விலகினாலோ, நின்றாலோ, திருப்பி தரமுடியாத தொகையாக ரூபாய் 10,000 செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு, குழந்தைகளின் பெற்றோர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள்.

இதுபோன்ற நியாயமான (?) வரிசைகள் இன்னும் நீள்கிறது. கல்விக் கட்டணக் கொள்ளையில் இது வேறொரு வடிவம். தமிழ்நாடு அரசு இதை அனுமதிக்க கூடாது. பணம் இல்லாத காரணத்தால் சலங்கைபூஜைக்கு போக முடியாமல், சலங்கை பூஜை நடக்காத காரணத்தால் அரங்கேற்றமும் நடத்திட முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டு நிற்கும் மாணவர்கள் நெஞ்சம் குளிரும்படி அரசு நடவடிக்கை அமைய வேண்டும்.

பரதநாட்டியத்தை போதிக்கிற பள்ளிகள் குறித்த முழுமையான கணக்கெடுப்பும், ஆசிரியர்கள், குருபிரான்கள் மற்றும் முதலாளிகள் குறித்தும் ஆய்வு செய்திட வேண்டியது அவசியம். விவரமான பரத ஆசான்கள், இப்போதெல்லாம் ஆண்டுக்கு நான்கு சதங்கை பூஜைகளை நடத்தி விடுகிறார்கள் என்பது பிசிறு தகவல்.


ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *