ஆட்கள் தேவை| ஆன்-லைன் மூலம் மோசடி – கைது|

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வேலைக்கு பணிப்பெண் அனுப்புவதாக கூறி ஆன்லைனில் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது :


“நுங்கம்பாக்கத்தைச்சேர்ந்த பெண் ஒருவருக்கு வீட்டு வேலைக்காக பணிப்பெண் (Maid) தேவைப்பட்டதால், Google-ல் வேலையாட்கள் தொடர்பாக தேடியுள்ளார். அப்போது அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, வீட்டு வேலைக்கு உதவியாளர் தேவைப் படுவதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து மனுதாரருக்கு WhatsApp மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. மனுதாரர் அந்த நபருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள் Maid Service தொடர்பான விவரங்களைத் தெரிவித்து, நம்பகமான நபர்கள் போன்று நடந்து கொண்டுள்ளனர். பின்னர், மனுதாரரின் தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி (Form) செய்து அனுப்புவதற்காக ஒரு படிவத்தை அனுப்பியுள்ளனர். மனுதாரர் அந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பியவுடன், உடனடியாக பணம் செலுத்துமாறு வற்புறுத்தி, G-Pay மூலம் அவர் சொன்ன மொபைல் எண்ணிற்கு ரூ.10,000/- பணத்தை அனுப்புமாறு கேட்டுள்ளனர். உடனே அவர் G-Pay மூலம் ரூ.10,000/- பணத்தை மேற்படி மொபைல் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்கள் எந்தவித ரசீதும் வழங்கவில்லை. மேலும், உறுதியளித்தபடி பணிப் பெண்ணையும் ஏற்பாடு செய்து அனுப்ப வில்லை. அந்த பணிப்பெண் விரைவில் வந்து விடுவார் என்று கூறி தொடர்ந்து காலதாமதம் செய்து வந்துள்ளனர். ஆனால் எந்த பணிப்பெண்ணும் வரவில்லை. மேலும், அவர்கள் மனுதாரரின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு முறையாக பதிலளிக்காததால், தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண் புகார்தாரர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
F-3 நுங்கம்பாக்கம் காவல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மேற்படி வழக்கில் தொடர்புடைய மகாராஜேந்திரன், (வயது 40) ராஜகோபாலபுரம், பாளையங் கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் என்பவரை (01.09.2026- அன்று) கைது செய்தனர். விசாரணையில் மேற்படி எதிரி அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து இணையவழி குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதும், ஆன்லைன் மூலம் பணிப்பெண் அனுப்புவதாக கூறி பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மகாராஜேந்திரன், அன்றே சென்னை எழும்பூர், பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பணிப்பெண் அனுப்புவதாக பணம் பெற்று ஏமாற்றும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் (அ) சந்தேகத்திற்கிடமான மொபைல் எண்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” இவ்வாறு காவல்துறை தரப்பில் சொல்லப் பட்டுள்ளது.

சேது

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *