ஆதரவு இன்றி யாரும் இல்லை – ஆதரிப்பாரின் கண்களில் படாதவரைதான் அவர்கள் ஆதரவற்றோர். சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலுவின் கருணை, ஆதரிப்போரின் வரிசையில் உள்ள கண்கள்!
சனிக்கிழமை (23.07.2022) இரவு ஏழுமணி. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை (Control room -Dial -100) யிலிருந்து, வேப்பேரி போக்குவரத்து காவல் பிரிவுக்கு ஒரு போன் கால் – மைக்கில் தகவலை கொடுக்கிறது. ‘புரசைவாக்கம் தானா தெருவில் ஒரு ஆசாமி, பொதுமக்களை அச்சுறுத்துவது போல் நடந்து கொள்கிறார், சாலை தடுப்புகளையும், வண்டிகளையும் கீழே தள்ளி விடுகிறார் என்று தகவல் வந்துள்ளது; மனநிலை பாதிப்பில் இருக்கக்கூடும், அதை உடனே சரி செய்யுங்கள்’ என்றது மைக்கில் வந்த தகவல். எது நடந்தாலும் போலீஸ் ஸ்டேசனின் தலைவன் நாமதான் ஸ்பாட்டுக்குப் போகணும், போலீஸ் ஃபவர் தேவைப்பட்டால் கூப்பிட்டுக் கொள்ளலாம் என்று, ‘தானா’ தெருவுக்குப் போயுள்ளார் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு.
சட்டை, சட்டைக்கு மேல் சட்டை அதற்கு மேலும் இரண்டு சட்டை என்று போட்டுக் கொண்டு, தானா தெருவில் தானாகவே முன் வந்து போக்குவரத்தை க்ளியர் செய்வது போல் கையையும் காலையும் ஆட்டிக் கொண்டும், சாலையில் உள்ள பொருட்களை இங்குமங்கும் வீசியடித்தும் மனம்போன போக்கில் திரிந்தவரை அருகில் போய் அரவணைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு.
சட்டைகளின் எண்ணிக்கையைப் போல அந்த மனிதரின் தலைமுதல் கால்வரையிலும் ஒட்டிக் கிடந்த பெயிண்ட்களின் வண்ண எண்ணிக்கையும் அதிகம். தலைமுடியில் ஒட்டிக் கொண்ட பெயிண்ட்டால் முடிகள் காய்ந்து இறுகிப் போய் கிடந்துள்ளது. ‘வீட்டில் என்னை யாரும் சேர்ப்பதில்லை’ என்று இன்ஸ்பெக்டர் பாண்டிவேலுவிடம் குறிப்பிட்டுள்ளார், அந்த மனிதர்.
எனக்கு புது சட்டைகள், டிரவுசர்கள் மற்றும் தொப்பியும் கண்ணாடியும் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தவருக்கு அவர் வைக்காத கோரிக்கையையும் நிறைவேற்றியிருக்கிறார் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு. பெயிண்ட்டில் காய்ந்து போன முடியை நீக்கி, வயிறார சாப்பாடு போட்டதோடு, குடும்பத்தாரோடு அந்த மனிதரை கொண்டு போய் சேர்த்தும் வைத்திருக்கிறார். ‘பத்திரமா பாத்துக்குங்க, ஏதேனும் உதவின்னா கேளுங்க, ரோட்ல விட்றாதீங்க’ என்று அறிவுறுத்தி விட்டு, அதன் பின்னரே வீட்டுக்குப் போயிருக்கிறார் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு. ‘ரோஜர்… இன்ஸ்பெக்டர் வேப்பேரி பேசறேன்… இப்பவே ஸ்பாட்டுக்கு மூ(வ்) பண்றேன்’… ‘ஸ்பாட்ல பப்ளிக் டிஸ்டர்ப் பண்ணிட்டிருந்த ஆளை அங்கருந்து க்ளியர் பண்ணியாச்சு… கார்ப்பரேசன் ஹோமுக்கு தகவலைக் கொடுத்தாச்சு ஓவர் ஓவர்’ என்கிற சராசரியாய் இல்லை இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு… வாழ்த்துகள் சார்… ஓவர்… ஓவர்… (குறிப்பு : மனநிலை பாதித்தவரின் அடையாளத்தை வெளியிடுவது சரியாய் இருக்காது) ந.பா.சேதுராமன்