ஆவின் பால் விற்பது போல், பால் வேனில் சுற்றிக் கொண்டே பால் கொடுக்கும் பசுக்களை திருடும் கும்பலை போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் – எச்சூர் கூட்ரோடு அருகே போலீசார் அதிகாலை ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது பால் அவசரம் என்ற முகப்போடு ஒரு வேன் சாலையில் மெதுவாக நகர்ந்ததை போலீசார் கவனித்தனர். வேனில் இருந்த ஆசாமிகள், சாலையோரம் படுத்துக் கிடந்த பசுமாடுகளை நகர்த்தி வேனில் ஏற்ற முயற்சித்ததை கவனித்த போலீசார் வேன் ஆசாமிகளை விரட்டினர். போலீசார் நெருங்கி விட்டதால் மாடுகளை விட்டு விட்டு வேனில் ஏறி மர்ம ஆசாமிகள் தப்பித்தனர். இந்நிலையில், மேய்ச்சலுக்குப் போன மாடுகள், வீடு திரும்பவில்லை என்று மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஒரகடம் போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து மாடு திருடர்களை உடனடியாகப் பிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி. டாக்டர் சுதாகர் உத்தரவிட்டார். எஸ்.பி. உத்தரவைத் தொடர்ந்து போலீஸ் டீம் விசாரணைக் களத்தில் இறங்கியது. ஐவர் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டது. விசாரணையில், கட்டவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், தீபக், ராம்கி, விக்னேஷ், ராஜசேகர் ஆகிய ஐவர் டீம், பால் வேனில் போவது போல் நாடகமாடி மாடு திருடியதை ஒப்புக் கொண்டனர். மாடு திருட்டுக்கு பயன்படுத்திய ஆவின்பால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப் பட்டவர்கள் நீதிமன்ற ஆஜருக்குப்பின் சிறையில் அடைக்கப் பட்டனர்.
– பாலகுமாரன்