தமிழ் வழக்காடு மொழியாக எது தடை ?

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க போராட்டக் களத்தில் உள்ள பெருந்தகையீர்! தங்களை வணங்கி இக்கோரிக்கையை வைக்கின்றோம். நாடாளுமன்ற தேர்தல் வாய்ப்பை பயன்படுத்தி வலுவான பரப்புரைகள் செய்ய வாய்ப்புள்ளது.

1965 ஒன்றிய அமைச்சரவை தீர்மானம் தான் உச்சநீதிமன்றம் அனுமதி நாட வழிவகுத்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் தமிழ் உள்ளிட்ட மாநில மக்களின் மொழியில் வழக்காடலாம் என்றுதான் கூறியுள்ளது. எனவே, அமையப் போகும் 18வது நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும் ஒன்றிய அமைச்சரவை 1965 அமைச்சரவைத் தீர்மானத்தை திரும்பப் பெற்று, மாநிலச் சட்டப்பேரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமைய உத்தரவு பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்போம் என்ற உத்தரவாதத்தை அரசியல் கட்சிகளிடம் பெறலாம். அதற்காக தமிழ்நாடு முழுக்க பரப்புரை மேற்கொள்ளலாம். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை இத்தகைய முயற்சிகளில் முழுமையாக ஈடுபடும்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் உள்ள தமிழ் சான்றோர் தயவுகூர்ந்து தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாநிலையை உடனடியாக கைவிட வேண்டுமாய் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அமைய நமது போராட்டங்களை வெவ்வேறு வடிவங்களில் தொடருவோம். தேர்தல் கால வாக்குறுதியை அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் நடைமுறைப் படுத்த தவறினால், மக்களிடம் உரையாடல் மூலமாக பெரும் திரளான பங்கேற்புடன் மகத்தான போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.

தயவுகூர்ந்து உண்ணாநிலையை முடிவிற்கு கொண்டுவர தோழமை அன்புடன் வேண்டுகிறோம். -என்று
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ்கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகில் 2024- பிப்ரவரி 28 முதல் வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில், வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர் உண்ணாவிரதம் ஏழாவது நாளாக தொடரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. சட்டத்துறை நிர்வாகியான வழக்கறிஞர் கே.பாலு முறையீடு செய்தார்.

அந்த முறையீட்டில், “தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையில், மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்க வில்லை என்பதால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று சொல்லியிருந்தார்.

உண்ணாவிரத போராட்டத்தில் வயதான வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே இரண்டு வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்- என்பதையும் கே.பாலு அதில் தெரிவித்திருந்தார்.

இந்த முறையீடு தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் சட்ட ரீதியாக தலையிட முடியாது.” என்று தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு வழக்கறிஞர் எட்வின் பிரபாகருக்கு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

ந.பா.சே

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *