தமிழகத்தில் ஏப்ரல் 2024 முதல் ஜூன் மாதம் வரை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம், “கோடை காலத்தைப் பொறுத்தவரை 2024 ஏப்ரல் முதல் ஜூன் மாத வரையிலான கால கட்டத்திற்கான ஆய்வறிக்கையை இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. கோடை வெப்பத்தை பொறுத்தவரை கடல், உள்பகுதி, மலைப்பகுதி என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. மலைப்பகுதியில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸாகவும், கடல் பகுதியில் 37 டிகிரி செல்சியஸாகவும், உள் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க வேண்டும். இதிலிருந்து இயல்பை விட 4.6 டிகிரி அல்லது அதற்கு கூடுதலாக இருந்தால் அதிக வெப்பம் என கணக்கிடப்படும். 45டிகிரி வரை வெப்பம் அதிகரித்தால் அபாயகர நிலை எனக்கருதப்படும். கடற்கரையைப் பொறுத்தவரை கடல் காற்று, தரைக்காற்று ஆகியவற்றின் காரணமாக வெப்பத்தின் தன்மை மாறுபடக்கூடும். உள் மாவட்டங்களில் மேகமூட்டம், ஈரப்பதம் ஆகியவற்றின் காரணமாக வெப்பநிலை மாறுபடக் கூடும். தொடர்ந்து வெப்ப நிலவரம் குறித்து கண்காணித்து வருகிறோம். தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்” இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரித்தார்.
P.K.M.