ஆசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வாகியுள்ள ஏழை மாணவி கனிமொழி, டாக்காவுக்கு சென்றுவர பணம் இல்லாமல்
தவிக்கிறார்.
தேசிய அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவர் கனிமொழி. எம்.ஏ. படித்து வருகிறார். இவர் ஆசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். வருகிற 8-ம் தேதி அந்தப் போட்டி வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ளது . மத்திய மாநில அரசுகள் கைவிரித்து விட்ட நிலையில் அங்கு போய் வர உதவி கேட்டுள்ளார், கனிமொழி.
அவரிடம் நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, “நான், கனிமொழி. தந்தை லட்சுமணன், சென்ற ஆண்டு இறந்து விட்டார். மது அருந்தும் பழக்கத்தால் கல்லீரல் பழுதாகி உயிரே போய்விட்டது. என் தாயார் காந்தி, வீட்டு வேலை செய்து கொண்டுவரும் பணத்தில்தான் நாங்கள் வாழ்கிறோம். காரைக்கால், திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கிறோம்.
காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தேன். அப்போதே வாலிபால் சிறந்த முறையில் விளையாடுவேன். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றதால் எனக்கு, கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரியில்; ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பி.ஏ. படிக்க கட்டணமின்றி இடம் கிடைத்தது.
இப்போது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரியில் அதேபோல் கட்டணமின்றி எம் .ஏ., படித்து வருகிறேன். பாண்டிச்சேரியில் நடைபெற்ற கடற்கரை வாலிபால் போட்டி ஈர்த்தது. கடற்கரை வாலிபால் போட்டியில் தீவிரமாக கவனத்தை செலுத்தினேன். காரைக்காலைச் சேர்ந்த, வி.சசிகலாவும் என்னைப் போல சிறப்பாக விளையாடுவார். காரைக்கால், வரிச்சிகுடி, தெற்கு தெருவில் சசிகலா வசிக்கிறார். உள்ளது. அவருடைய தந்தை ஓட்டுநர். எளிய குடும்பத்தை சேர்ந்தவர்.
நாங்கள் இருவரும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற தேசிய கடற்கரை வாலிபால் போட்டியில் விளையாடி தங்கப்பதக்கம் பெற்றோம். இதன் காரணமாக வருகின்ற எட்டாம் தேதி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான கடற்கரை வாலிபால் போட்டிக்கு தேர்வு பெற்றோம்.
இதற்கான தேர்வு கடந்த மாதம் 12 ,13 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. ‘டாக்கா’ போய் வர ஆகும் ரூ. ஒன்றரை லட்சத்தை அரசே பார்த்துக் கொள்ளும் என்று நம்பி இருந்தோம். சம்பந்தப்பட்ட துறையில் எங்களை தொடர்பு கொண்டு, ‘போக வர டிக்கெட் மற்றும் கட்டணத்தொகை ரூபாய் ஒன்றரை லட்சத்தை நீங்கள் தான், செலுத்த வேண்டும், எங்களிடம் நிதி இல்லை (No Fund) என்று தெரிவித்தனர். பாண்டிச்சேரி முதலமைச்சர் திரு .ரங்கசாமி, உள்துறை அமைச்சர் திரு நமச்சிவாயம் அவர்களிடம் உங்களை அழைத்துச் சென்று ஆளுக்கு தலா ஒரு லட்சம் வாங்கி தருகிறோம் என்று அதிகாரிகள் சொன்னார்கள். கடைசி நேரத்தில் அந்த ஏற்பாடும் ரத்தாகி விட்டது. நாங்கள் இருவரும் பொருளாதாரத்தில்
மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்களுக்கு பயிற்சி அளித்து வரும் அர்ஜுனா யூத் வாலிபால் கிளப்
நிலைமையை புரிந்து கொண்டு, அவர்களால் இயன்ற அளவு, ஆளுக்கு ரூ.இருபதாயிரம் தருவதாக சொல்லி உள்ளார்கள். எங்களைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு அரசுதானே உதவிக்கரம் நீட்டி ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார் கனிமொழி வேதனையுடன். விளையாட்டுத் துறைகள், வளர்ந்து வரும் ஏழை மாணவர்களுக்கு அளிக்கும் ஊக்கம் எப்படி உள்ளது என்பதற்கு இந்த மாணவி ஒரு சிறந்த சான்று!
(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்) ம.வி.ராஜதுரை
(கனிமொழியின் செல் எண்: 9514855351)