கருடன் வலம் வரும் தலம்… அடியாருக்கு அருளிய அரங்கன்!

பூலோக வைகுண்டம் என்று பெரியோர்கள் உகந்து கொண்டாடும் திருவரங்கப் பெருமானை
ஆழ்வார்கள் பலரும் பலவிதமாக தரிசித்து மகிழ்ந்து இருக்கிறார்கள், ஆனாலும், ஆண்டாள் நாச்சியாரின் தரிசனம் அற்புதம் !

எழிலுடைய அம்மனை மீர் என் அரங்கத்தின் அமுதர்குழல் அழகர் வாய் அழகர் கண்ணழகர் கொப்பூழில் எழு கமலப்ப பூ அழகர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி பெற்ற பரவசத்தை இப் பெருமானை பார்ப்பவர்களும் பெறுகின்றனர்.
ஆம்: ஆனால், அந்தத் தலம் திருவரங்கம் அல்ல: தேவதானம்!

ஐந்து தலைகளையும் குடையாக விரித்த ஆதிசேஷன் மீது, போக சயனமாக கிழக்கே திருமுக மண்டல சேவையுடன் சயனித்துள்ளார் ஸ்ரீ அரங்கநாதன். பெரிய மரக்கால் தலையானை; அதன் மேல் படிந்த திருமுடி ; விசாலமான திருமுகம் ; தாமரை மலர்களைப் போன்ற மலர்ந்த
திருக்கண்கள் ; வலக்கையை திருமுடியின் கீழும் இடக்கையை நீட்டியும் சேவை சாதிக்கிறார் பெருமாள் !

நாபியில் சதுர்முகப் பிரம்மா ; திருவடியில் தாமரை மலரேந்தித் திருமகளும், நீலோத்பல மலரேந்தி நில மகளும் வீறறுள்ளனர். எதிரே வீணை இசைத்தபடி தும்புரு மகரிஷியும் பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.

சாளக்கிராமங்கள் பரப்பச்செய்து கலை நுணுக்கத்துடன் வசீகர தோற்றத்துடன் கூடியது பெருமானின் சுதை வடிவம் ! கிழக்கு ராஜகோபுர நுழை வாயிலை அடைந்தவுடன் முறையே பலிபீடம், துவஜஸ் தம்பம், கருடன் சந்நிதி ஆகியன அமைந்துள்ளது.

கருவறையின் தென் மேற்கில் அரங்கநாயகி தாயார் காட்சி தருகிறார். தாயார் சன்னதிக்கும், ஆண்டாள் சன்னதிக்கும் இடையில் கருவறைக்கு நேர் பின்னால், பாம்பு புற்று ஒன்று உள்ளது.


சன்னதி திறந்த உடன் தினமும் காலையில் ஒரு கருடன், இத் திருத்தலத்தின் மேல் மூன்று முறை
வலம் வந்து அங்கு உள்ள ஆல மரத்தின் மேல் சிறிது நேரம் அமர்ந்து செல்வதை ஊர்மக்கள் பலரும் நேரில் பார்த்துள்ளனர். கருட ஆழ்வாரே அரங்கனை சுற்றி வந்து சேவிப்பதாக கருதுகிறார்கள் இங்குள்ள அன்பர்கள்.

பெருமான் அவ்வப்போது தன் பக்தர்களின் கனவில் தோன்றி அவரவர்களுக்கு அருள் பாலிக்கும்
அற்புதம் இங்குண்டு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த குலசேகரன், நெடுஞ்சாலை துறையில் ஊர் பெயர் பலகை எழுதும் ஒப்பந்த எழுத்தர். அவரது கனவில் அடியேன் புகழ் பாடுவாய்’ என்று ஒரு
அசரீரி கேட்டது. அடுத்து, அரங்கன் சயனத்தில் பள்ளி கொண்டுள்ள காட்சியை கண்டுள்ளார் அவர்.
இது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருவுருவம் என்று நினைத்து இருந்தார்.

ஒரு சமயம் பணிநிமித்தமாக தேவதானம் சென்றார் அவர். தன்னுடைய பணி முடிந்த பிறகு,
சற்று இளைப்பாறினார் குலசேகரன். மாலை ஆலயம் திறக்கும் வரை காத்திருந்து சந்நிதியை அடைந்தார். ஆச்சர்யம் மேலிட்டது அவருக்கு. காரணம் அங்கே பேரருட் பிழம்பாய் காட்சி தந்தார் அரங்கநாதன். அன்று முதல் அவர், அரங்கனுக்கு அடியராகி தனது பெயரை குலசேகர இராமானுஜதாசர் என்று மாற்றிக் கொண்டார்.

தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று தமிழ் வேதம் பரப்பி, ஆண்டவன் பக்திப் பாடல்களை பாடி பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறார்.
இத்திருகோவிலில் ஏழு சனிக்கிழமைகள் தொடந்து நெய் தீபம் ஏற்றி அரங்கனை வணங்கி வந்தால், நினைத்த காரியம் கை கூடுவதை கண்கூடாகக் காணமுடிகிறது.
திருமணம், மக்கட் செல்வம், வேலை, கடன் நிவாரணம், ஆரோக்கியம் என்று பக்தர்களுக்கு அருள்கிறார் பெருமாள். கண்ணையும், கருத்தையும் ஒருங்கே கவரும் அரங்கனின் திருமேனி,
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது, இத்திருக்கோயில் !

சாளுக்கிய மன்னர்களின் திருப்பணி கொண்ட இக்கோயிலில், சுமார் 5 அடி உயரமும் 18 அடி நீளமும் கொண்டு,
சுதை வடிவில் காட்சி தருகிறார் பெருமாள். திருமெய்யம், திருக்கடல் மல்லை, கீழையூர் என்று பலப்பல தலங்களில் சயனக் கோலத்தில் பெருமாள் காட்சி தந்தாலும், இந்த தேவதானம், தரிசிப்பவர்களின் வாழ்வை தேவஸ்தானத்துக்கு உயர்த்தக் கூடியது என்பது நிஜம்.

சரி ; எப்படிச் செல்வது என்று தானே கேட்கிறீர்கள் ?
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரெயில் பயணப்பாதையில், அனுப்பம்பட்டு என்ற இடத்தில் இறங்கினால்‌, அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம்.

சென்னை, பேசின் பிரிட்ஜில் இருந்து, அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்து மூலமும் பொன்னேரி அடைந்து, அங்கிருந்தும் இத்தலத்தை அடையலாம்.
அழகான மூர்த்தி ; அபூர்வமான தலம் ; தேவ தானத்தை தரிசித்தால் இந்த உண்மை புலப்படும் !

பொன். கோ. முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *